1. {#1இன்பமும் மாயையே } [PS]நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாக இருந்தது.
2. சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்.
3. வானத்தின்கீழ் மனுமக்கள் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பெற்று அனுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்வரை, என்னுடைய இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என்னுடைய உடலை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என்னுடைய உள்ளத்தில் வகைதேடினேன்.
4. நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன்.
5. எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன்.
6. மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன்.
7. வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது.
8. வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித[* ஸ்திரிகளையும்/ வாத்தியங்களையும் ] சம்பாதித்தேன்.
9. எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட நான் பெரியவனும் செல்வம் நிறைந்தவனுமானேன்; என்னுடைய ஞானமும் என்னோடுகூட இருந்தது.
10. என்னுடைய கண்கள் விரும்பிய ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை செய்யவில்லை; என்னுடைய இருதயத்திற்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என்னுடைய மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என்னுடைய பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.
11. என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. [PE]
12. {#1ஞானமும் மதியீனமும் மாயை } [PS]பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனிதன் என்ன செய்யமுடியும்? செய்ததையே செய்வான்.
13. இருளைவிட வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாக மதியீனத்தைவிட ஞானம் உத்தமமென்று கண்டேன்.
14. ஞானியின் கண்கள் அவனுடைய முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லோருக்கும் ஒரே விதமாக நடக்கிறது என்று கண்டேன்.
15. மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.
16. மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான். [PE]
17. {#1பிரயாசமும் மாயையே } [PS]ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செயல்களெல்லாம் எனக்கு வருத்தமாக இருந்தது; எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது.
18. சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.
19. அவன் புத்திமானாக இருப்பானோ, மூடனாக இருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் உழைத்து ஞானமாகச் சம்பாதித்த எல்லா பொருட்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே.
20. ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் செய்த எல்லா பிரயாசத்தின் மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைத்தேடினேன்.
21. ஒருவன் புத்தி, அறிவுக்கூர்மை, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆனாலும் அப்படி பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாகவும் இருக்கிறது.
22. மனிதன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லா பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?
23. அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே.
24. மனிதன் சாப்பிட்டுக் குடித்து, தன்னுடைய பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைவிட, அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.
25. அவனைவிட[† என்னைவிட ] நிறைவாக சாப்பிடக்கூடியவன் யார்? அவனைவிட [‡ என்னைவிட ] விரைவாகச் சம்பாதிக்ககூடியவன் யார்?
26. தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவம்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனிடம் வைத்துவிட்டுப் போகும்படியாகச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. [PE]