1. {#1இஸ்ரவேலர்கள் ரெகொபெயாமுக்கு விரோதமாகக் கலகம் செய்தல் } [PS]ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்திருந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.
2. ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
3. ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலர்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
4. உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் எளிதாக்கும்; அப்பொழுது உமக்கு சேவை செய்வோம் என்றார்கள்.
5. அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
6. அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கும்போது அவனுக்கு முன்பாகநின்ற முதியோர்களிடம் ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
7. அதற்கு அவர்கள்: நீர் இந்த மக்களுக்கு தயவையும் ஆதரவையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள்.
8. முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்தவர்களும் தனக்கு முன்பாக நிற்கிறவர்களுமாகிய வாலிபர்களோடு ஆலோசனைசெய்து,
9. அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை எளிதாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
10. அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் சுமையை பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு எளிதாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
11. இப்போதும் என் தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் சுமையை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.
12. மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் அனைத்து மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
13. ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோரின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான பதில் கொடுத்தான்.
14. வாலிபர்களுடைய ஆலோசனையின்படியே அவர்களோடு பேசி, என் தகப்பன் உங்கள் சுமையை பாரமாக்கினார்; நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.
15. ராஜா, மக்கள் சொல்வதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்த தேவனாலே இப்படி நடந்தது.
16. தாங்கள் சொன்னதை ராஜா கேட்கவில்லை என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவுக்கு மறுமொழியாக: “தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடத்தில் எங்களுக்கு உரிமை இல்லை; இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி,” இஸ்ரவேலர்கள் எல்லோரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். [PE]
17. [PS]ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்கள்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.
18. பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் தலைவனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் மக்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் விரைவாக இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
19. அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் வம்சத்தைவிட்டுக் கலகம்செய்து பிரிந்துபோயிருக்கிறார்கள். [PE]