1. [PS]எப்பொழுதும் வாதமிடுகிறவர்களின் வீட்டில் முழுச்சாப்பாடு உண்பதைவிட, ஒரு துண்டு காய்ந்த ரொட்டியை சமாதானத்தோடு தின்பது நல்லது. [PE]
2. [PS]அறிவுத்திறமுள்ள வேலைக்காரன் தன் எஜமானின் மூட மகனையும் அடக்கி ஆள்வான். அவ்வேலைக்காரன் மகனைப் போல நடத்தப்பட்டு, பரம்பரைச் சொத்தில் பங்கும்பெறுவான். [PE]
3. [PS]பொன்னையும் வெள்ளியையும் தூய்மைப்படுத்தவே நெருப்பில் போடுகிறார்கள். ஆனால் ஜனங்கள் இதயங்களை கர்த்தர் ஒருவரே சுத்தம் செய்கிறார். [PE]
4. [PS]தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற்றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய்யையே கவனிக்கின்றனர். [PE]
5. [PS]சிலர் ஏழை ஜனங்களைக் கேலிச் செய்வார்கள். தொல்லைகளுக்கு உள்ளானவர்களைப் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். தம்மைப் படைத்த தேவனை அவர்கள் மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது. அத்தீய ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். [PE]
6. [PS]பேரப்பிள்ளைகள் முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள். பிள்ளைகள் தம் பெற்றோர்களைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள். [PE]
7. [PS]அறிவற்றவன் அதிகமாகப் பேசுவது அறிவுள்ள செயல் அல்ல. இதுபோலவே, ஆள்பவன் பொய் சொல்லுவதும் அறிவுள்ள செயல் அல்ல. [PE]
8. [PS]சிலர், லஞ்சத்தை இனிமையான அதிர்ஷ்டப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் எங்கு போனாலும் அது பணியைச் செய்துமுடிக்கப் பயன்படுவதாக நினைக்கிறார்கள். [PE]
9. [PS]ஒருவன் செய்த தவறை நீ மன்னித்துவிட்டால் நீங்கள் நண்பர்கள் ஆகலாம். ஆனால் அவன் செய்த தவறையே தொடர்ந்து நீ நினைத்துக்கொண்டிருந்தால் உங்கள் நட்பை அது அழித்துவிடும். [PE]
10. [PS]சுறுசுறுப்பானவன் தன் தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறான். ஆனால் அறிவில்லாதவனோ, எதையும் கற்றுக்கொள்ளமாட்டான். நூறு பாடங்களுக்குப் பிறகும் கற்றுக்கொள்ளமாட்டான். [PE]
11. [PS]தீயவன் தவறுகளைச் செய்யவே விரும்புகிறான். முடிவில் தேவன் தன் தூதனை அனுப்பி அவனைத் தண்டிப்பார். [PE]
12. [PS]தன் குட்டிகளைப் பறிகொடுத்த கோபம் கொண்ட பெண் கரடியை எதிர்கொள்வது, மிகவும் ஆபத்தானது. ஆனால் எப்பொழுதும் மூடத்தனமான செயல்களைச் செய்யும் அறிவில்லாதவனைச் சந்திப்பதைக் காட்டிலும் அது எளிதானது. [PE]
13. [PS]உனக்கு நன்மை செய்கிறவர்களுக்கு, நீ தீமை செய்யாதே. அவ்வாறு செய்தால் நீ உனது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் துன்பம் அடைவாய். [PE]
14. [PS]வாதம் செய்ய ஆரம்பிப்பது, பெரிய அணைக்கட்டில் துளை விழுந்தது போன்றாகும். அது மிகப் பெரிதாக ஆவதற்கு முன் வாதத்தை நிறுத்து. [PE]
15. [PS]தவறே செய்யாதவர்களைத் தண்டிப்பதும், குற்றம் செய்தவர்களை தப்பவிடுவதுமான இரண்டு காரியங்களும் கர்த்தரால் வெறுக்கப்படும். [PE]
16. [PS]அறிவற்றவனிடம் செல்வம் இருந்தால் அது பயனற்றது. ஏனென்றால் அவன் தன் செல்வத்தை அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தமாட்டான். [PE]
17. [PS]ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான். உண்மையான சகோதரன் உனக்கு எப்பொழுதும் உதவுகிறான். துன்ப காலங்களிலும்கூட உதவி செய்கிறான். [PE]
18. [PS]அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான். [PE]
19. [PS]வாதம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறவன், பாவம் செய்வதிலும் மகிழ்ச்சியடைகிறான். நீ உன்னையே பெருமைப்படுத்திப் பேசினால் நீயே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறாய். [PE]
20. [PS]தீயவன் நன்மை பெறமட்டான். பொய்யன் துன்பமடைவான். [PE]
21. [PS]அறிவற்றவனின் தந்தை மிகவும் சோகம் அடைவான். அறிவற்றவனின் தந்தையால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. [PE]
22. [PS]மகிழ்ச்சி என்பது நல்ல மருந்தைப் போன்றது. ஆனால் துக்கமோ நோயைப் போன்றது. [PE]
23. [PS]தீயவன் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான். [PE]
24. [PS]அறிவுள்ளவன் மிகச்சிறந்த செயல்களைச் செய்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பான். ஆனால் அறிவற்றவனோ தூரத்து இடங்களைப் பற்றியே கனவு காண்பான். [PE]
25. [PS]ஒரு அறிவற்ற மகன் தந்தைக்குத் துக்கத்தைத் தருகிறான். அவன் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்கும் துன்பத்தைத் தருகிறான். [PE]
26. [PS]தவறு செய்யாதவனைத் தண்டிப்பதுதப்பாகும். தலைவர்கள் நேர்மையானவர்களாக இருக்கும்போது அவர்களைத் தண்டிப்பதும் தவறாகும். [PE]
27. [PS]அறிவுள்ளவன் தன் வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறான். அறிவுள்ளவன் எளிதில் கோபம் கொள்ளமாட்டான். [PE]
28. [PS]அறிவற்றவனும் அமைதியாக இருந்தால் அறிவாளியைப்போன்று தோன்றுவான். அவன் எதையும் பேசாவிட்டால், ஜனங்கள் அவனை அறிவாளியாக நினைத்துக் கொள்வார்கள். [PE]