1. {#1எரேமியாவின் ஆலயத்துப் பிரசங்கம் } [PS]எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது:
2. எரேமியா, தேவனுடைய வீட்டுக் கதவருகில் நில். வாசலில் இந்த செய்தியைப் பிரசங்கம் செய்: “யூதா நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களே! கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! இந்த வாசல் வழியாகக் கர்த்தரை ஆராதிக்க வருகின்ற ஜனங்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள்.
3. இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத் தான் சொல்கிறார்: ‘உங்களது வாழ்க்கையை மாற்றுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள், இதனை நீங்கள் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்.
4. சில ஜனங்கள் கூறுகிற பொய்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இதுதான் கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய ஆலயம்’ என்று அவர்கள் கூறுகின்றனர்.
5. நீங்கள் உங்களது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நற் செயல்களைச் செய்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நியாயமாக இருக்கவேண்டும்.
6. நீங்கள் அந்நியர்களுக்கும் நியாயமாக இருக்கவேண்டும். நீங்கள் விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் நல்லவற்றைச் செய்யவேண்டும். ஒன்றுமறியாத ஜனங்களைக் கொல்லவேண்டாம். மற்ற தெய்வங்களைப் பின் பற்றவேண்டாம். ஏனென்றால் அவை உங்கள் வாழ்வை அழித்துவிடும்.
7. நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்தால், நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்: நான் உங்களது முற்பிதாக்களுக்கு இந்த நாட்டை என்றென்றைக்கும் வைத்திருக்கும்படி கொடுத்தேன். [PE]
8. [PS]“ஆனால் நீங்கள் பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பொய்கள் பயனில்லாதவை.
9. நீங்கள் களவும், கொலையும் செய்வீர்களா? நீங்கள் விபச்சாரம் என்னும் பாவத்தை செய்வீர்களா? நீங்கள் மற்றவர்கள் மேல் பொய்வழக்கு போடுவீர்களா? நீங்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொண்டு, உங்களால் அறியப்படாத அந்நிய தெய்வங்களைப் பின்பற்றுவீர்களா?
10. நீங்கள் அந்தப் பாவங்களைச் செய்தால், எனது நாமத்தால் அழைக்கப்படும். இந்த வீட்டில் எனக்கு முன்னால் நிற்க முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் இதுபோன்ற கெட்ட செயல்களையெல்லாம் செய்துகொண்டு, எனக்கு முன்னால் நின்று, ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டே தீய செயல்களைத் தொடர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?
11. இந்த ஆலயம் எனது நாமத்தால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் உங்களுக்கு, கள்ளர் பதுங்கும் இடமே ஒழிய, வேறு எதுவுமில்லையா? நான் உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். [PE]
12. [PS]“யூதாவின் ஜனங்களே! இப்பொழுது சீலோ என்னும் நகரத்திற்குப் போங்கள். நான் முதலில் எந்த இடத்தில் எனது நாமத்தால் ஒரு வீட்டை அமைத்தேனோ அங்கு போங்கள். இஸ்ரவேல் ஜனங்களும் தீயச்செயல்களைச் செய்தனர். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்கு நான் அந்த இடத்துக்குச் செய்தவற்றைப் போய் பாருங்கள்.
13. யூதா ஜனங்களாகிய நீங்கள், இத்தீயச் செயல்களையெல்லாம் செய்தீர்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் பேசினேன். ஆனால் நீங்கள் என்னை கவனிக்க மறுத்துவிட்டீர்கள். நான் உங்களை அழைத்தேன். ஆனால் நீங்கள் பதில் சொல்லவில்லை.
14. எனவே, எருசலேமில் எனது நாமத்தால் அழைக்கப்பட்ட வீட்டை அழிப்பேன். நான் சீலோவை அழித்தது போன்று, அந்த ஆலயத்தையும் அழிப்பேன். எனது நாமத்தால் அழைக்கப்படும் எருசலேமில் உள்ள அந்த வீடு, நீங்கள் நம்பிக்கை வைத்த ஆலயம். நான் அந்த இடத்தை உங்களுக்கும் உங்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்தேன்.
15. எப்பிராயீமிலுள்ள உங்கள் சகோதரர்களை நான் தூர எறிந்ததைப்போன்று, உங்களையும் என்னைவிட்டுத் தூர எறிவேன். [PE]
16. [PS]“எரேமியா, யூதாவிலுள்ள இந்த ஜனங்களுக்காக நீ விண்ணப்பம் செய்யவேண்டாம். அவர்களுக்காக நீ ஜெபிக்கவும், கெஞ்சவும் வேண்டாம், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று என்னிடம் மன்றாடவேண்டாம். அவர்களுக்கான உனது ஜெபத்தை நான் கேட்கமாட்டேன்.
17. யூதாவின் நகரங்களில் அந்த ஜனங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நீ பார்க்கிறாய் என்பதை நான் அறிவேன். எருசலேம் நகரத்து வீதிகளில் அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உன்னால் பார்க்க முடியும்.
18. யூதாவிலுள்ள ஜனங்கள் செய்துகொண்டிருப்பது இதுதான். பிள்ளைகள் மரக்கட்டைகளைச் சேகரிக்கின்றனர். தந்தைகள் நெருப்புக்காக அந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். பெண்கள், வானராக்கினிக்கும் பலியிட அப்பங்களைச் சுடுகிறார்கள். அந்நிய தெய்வங்களை தொழுவதற்காக யூதா ஜனங்கள் பானங்களின் காணிக்கைகளை ஊற்றுகின்றனர். எனக்குக் கோபம் ஏற்படும்படி அவர்கள் இதனைச் செய்கின்றனர்.
19. ஆனால் யூதா ஜனங்கள் உண்மையிலேயே என்னைப் புண்படுத்தவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தங்களையே புண்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்கே அவமானத்தை வரவழைத்துக்கொள்கிறார்கள்.”
20. எனவே கர்த்தர் அவர்களிடம், “நான் இந்த இடத்துக்கு எதிராக எனது கோபத்தைக் காட்டுவேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் தண்டிப்பேன். நான் வெளியிலுள்ள மரங்களையும் தரையிலுள்ள விளைச்சலையும் தண்டிப்பேன். எனது கோபம் சூடான நெருப்பைப் போன்றிருக்கும். எவராலும் அதனைத் தடுக்கமுடியாது” என்று கூறுகிறார். [PE]
21. {#1கர்த்தர் பலிகளைவிட கீழ்ப்படிதலையே விரும்புகிறார் } [PS]இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “போங்கள். உங்கள் விருப்பப்படி எத்தனை மிகுதியாகத் தகன பலிகளையும், மற்ற பலிகளையும் செலுத்த முடியுமோ செலுத்துங்கள். அப்பலிகளின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.
22. எகிப்துக்கு வெளியே உங்களது முற்பிதாக்களைக் கொண்டுவந்தேன். நான் அவர்களோடு பேசினேன், ஆனால் தகனபலிகள் மற்றும் மற்ற பலிகள் பற்றி எந்தக் கட்டளையையும் இடவில்லை.
23. நான் இந்தக் கட்டளையை மட்டும் கொடுத்தேன். ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நான் உங்களது தேவனாக இருப்பேன். நீங்கள் என் ஜனமாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட அனைத்தும் செய்யுங்கள். உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.’ [PE]
24. [PS]“ஆனால் உங்களது முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. அவர்கள் நான் சொன்னதில் கவனம் வைக்கவில்லை, அவர்கள் முரட்டாட்டமாக இருந்தார்கள். அவர்கள் விரும்பியதையே செய்தார்கள். அவர்கள் நல்லவர்கள் ஆகவில்லை. அவர்கள் மேலும் தீயவர்கள் ஆனார்கள். அவர்கள் முன்னுக்கு வராமல் பின்னுக்குப் போனார்கள்.
25. உங்களது முற்பிதாக்கள் எகிப்தை விட்டு விலகிய நாள் முதல், இன்றுவரை நான் உங்களிடம் எனது சேவகர்களை அனுப்பியிருக்கிறேன். தீர்க்கதரிசிகளே எனது சேவகர்கள். நான் அவர்களை மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பினேன்.
26. ஆனால், உங்களது முற்பிதாக்கள் நான் சொன்னதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் என்மீது கவனம் வைக்கவில்லை. அவர்கள் மிகுந்த பிடிவாதமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் தந்தையரைவிட மோசமான தீமைகளைச் செய்தனர். [PE]
27. [PS]“எரேமியா! நீ யூதா ஜனங்களிடம் இவற்றை எல்லாம் சொல்லுவாய். ஆனால் அவர்கள் நீ சொல்வதை கவனிக்கமாட்டார்கள்! நீ அவர்களை அழைப்பாய். ஆனால் அவர்கள் பதில் சொல்லமாட்டார்கள்.
28. எனவே, நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும். நமது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியாத தேசம் இதுதான். தேவனுடைய போதனைகளை அதன் ஜனங்கள் கவனிக்கவில்லை, இந்த ஜனங்கள் உண்மையான போதனைகளை அறியவில்லை. [PE]
29. {#1கொலையின் பள்ளத்தாக்கு } [PS]“எரேமியா, உனது தலைமுடியை வெட்டி எறிந்துபோடு. பாறையின் உச்சிக்குப் போய் அழு. ஏனென்றால், கர்த்தர் இந்த தலைமுறை ஜனங்களை மறுத்திருக்கிறார். இந்த ஜனங்களுக்கு கர்த்தர் தனது முதுகைத் திருப்பிக்கொண்டார். கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பார்.
30. இவற்றைச் செய். ஏனென்றால், யூதா ஜனங்கள் தீமை செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அவர்கள் தம் விக்கிரகங்களை அமைத்திருக்கிறார்கள், அதனை எனது நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் அவர்கள் அந்த விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை நான் வெறுக்கிறேன். அவர்கள் எனது வீட்டை ‘தீட்டு’ செய்திருக்கிறார்கள்!
31. யூதா ஜனங்கள், இன்னோமின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். அந்த இடங்களில் அவர்கள் தமது மகன்களையும், மகள்களையும் கொன்று, பலியாக எரித்தார்கள். இவற்றைச் செய்யுமாறு நான் கட்டளையிடவில்லை. இவை போன்றவற்றை நான் மனதிலே நினைத்துப் பார்க்கவுமில்லை.
32. எனவே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஜனங்கள் இந்த இடத்தை தொப்பேத் என்னும் இன்னோமின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்போவதில்லை. அவர்கள் இதனை ‘சங்காரப் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். அவர்கள் இதற்கு இந்தப் பெயரை இடுவார்கள். ஏனென்றால் மரித்தவர்களை அவர்கள் தோப்பேத்தில் இனி புதைக்க இடமில்லை என்று கூறுமளவுக்குப் புதைப்பார்கள்.
33. பிறகு, மரித்தவர் களின் உடல்கள் பூமிக்கு மேலே கிடக்கும், வானத்து பறவைகளுக்கு உணவாகும். அந்த ஜனங்களின் உடல்களைக் காட்டு மிருகங்கள் உண்ணும். அந்தப் பறவைகள் அல்லது மிருகங்களைத் துரத்திட அங்கு எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள்.
34. எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் உள்ள, சந்தோஷம் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒலிகளை ஒரு முடிவுக்குக்கொண்டுவருவேன். எருசலேம் அல்லது யூதாவில் இனிமேல் மணவாளன் மற்றும் மண வாட்டியின் சத்தமும் இனிமேல் இருக்காது. இந்த நாடு ஒரு பாழடைந்த பாலைவனமாகும்.” [PE]