1. {ஆலயத்திலிருந்து வெளியே வழிந்தோடும் தண்ணீர்} [PS] அம்மனிதன் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்ப வரச்செய்தான். ஆலயத்தின் கிழக்கு வாசலின் கீழிருந்து தண்ணீர் கிழக்கே ஓடுவதைப் பார்த்தேன். ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது. அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.
2. அம்மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக வெளியே நடத்திச் சென்றான். அவன் என்னை வெளியே கீழ்த்திசையின் புறவாசல் வரை சுற்றி நடத்திக் கொண்டு போனான். அங்கே தண்ணீர் வாசலின் தெற்கே பாய்ந்தது. [PE][PS]
3. அம்மனிதன் தனது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கே நடந்தான். அவன் 1,000 முழம் (1/3 மைல்) அங்கே அளந்தான். பிறகு அவன் என்னிடம் அந்த இடத்தில் தண்ணீரைக் கடக்கச் சொன்னான். அத்தண்ணீர் என் கணுக்கால் அளவுக்கு இருந்தது.
4. அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். அங்கே அவன் என்னைத் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் முழங்கால் அளவாய் இருந்தது. பிறகு, அவன் இன்னொரு 1,000 முழம் (1/3 மைல்) அளந்து, அந்த இடத்தில் என்னிடம் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் என் இடுப்பளவிற்கு இருந்தது.
5. அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். ஆனால் அங்கே தண்ணீர் கடக்க முடியாத அளவிற்கு ஆழமாக இருந்தது. அது ஆறு போல இருந்தது. அந்தத் தண்ணீர் நீந்துகிற அளவிற்கு ஆழமாயிருந்தது.
6. பிறகு அம்மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ பார்த்ததை உன்னிப்பாகக் கவனித்தாயா?” என்றான். [PE][PS] பிறகு என்னை, நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டு போனான்.
7. நான் நடந்து வரும்போது இதோ நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் அநேக மரங்கள் இருந்தன.
8. அம்மனிதன் என்னிடம், “இந்தத் தண்ணீர் புறப்பட்டு கிழக்கே போய், கீழே அரபா பள்ளத்தாக்கிற்கு போகிறது.
9. இந்தத் தண்ணீர் சவக்கடலுக்குள் பாயும். அதனால் அக்கடலிலுள்ள தண்ணீர் புத்துயிரும் சுத்தமும் அடையும். இத்தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த ஆறு போகிற இடங்களில் எல்லாம் எல்லா வகை மிருகங்களும் உள்ளன.
10. என்கேதி முதல் எனெக்லாயிம் வரை மீன் பிடிக்கிறவர்கள் ஆற்றங்கரையில் நிற்பதை நீ பார்க்கமுடியும். அவர்கள் தம் வலையை வீசி பலவகை மீன்கள் பிடிப்பதை நீ பார்க்க முடியும். சவக்கடலிலுள்ள மீன்கள் மத்திய தரைக் கடலில் உள்ள மீன்களைப் போன்று பலவகைகளாகவும் மிகுதியாகவும் இருக்கும்.
11. ஆனாலும் அதனுடைய உளையான பள்ளங்களும் மேடுகளும் வளம் பெறாமல் உப்பு நிலமாகவே விடப்படும்.
12. எல்லாவகையான பழ மரங்களும் ஆற்றின் இரு கரைகளிலும் வளரும். அவற்றின் இலைகள் காய்ந்து உதிர்வதில்லை. அம்மரங்களில் பழங்கள் பழுப்பது நிற்பதில்லை. ஒவ்வொரு மாதமும் மரங்களில் பழங்கள் வரும். ஏனென்றால், இம்மரங்களுக்கான தண்ணீர் ஆலயத்திலிருந்து வருகின்றது. அம்மரங்களின் கனிகள் உணவாகவும் அவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.” [PS]
13. {கோத்திரங்களுக்கான நிலப் பாகுபாடுகள்} [PS] எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுடைய எண்ணிக்கைப்படியே நாட்டில் குறிக்க வேண்டிய எல்லையாவது: யோசேப்பு இரண்டு பங்குளைப் பெறுவான்.
14. நீ தேசத்தை சமமாகப் பங்கிட வேண்டும். நான் இந்தத் தேசத்தை உங்களது முற்பிதாக்களுக்குத் தருவதாக வாக்களித்தேன். ஆகையால் இந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன். [PE][PS]
15. “தேசத்தின் எல்லையாவது: வடபுறம் மத்தியதரைக் கடலில் இருந்து தொடங்கி சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாய் இருக்கிறது.
16. ஆமாத்தும் பேரொத்தாவும் தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும் ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
17. அப்படியே எல்லை கடலிலிருந்து தமஸ்குவின் வட எல்லையான ஆத்சார் ஏனான் மற்றும் ஆமாத்திற்குப் போகும். இது வட புறத்தில் இருக்கும். [PE][PS]
18. “கிழக்குப் பக்கத்தில், எல்லையானது ஆத்சார் ஏனானிலிருந்து ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையில் சென்று யோர்தான் நதியின் ஓரமாக கீலேயாத்துக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையில் கிழக்குக்கடலுக்குச் சென்று தாமார்வரை செல்லுகிறது. இது கிழக்கு எல்லையாக இருக்கும். [PE][PS]
19. “தென் புறத்தில், எல்லையானது, தாமார் தொடங்கி மெரிபா காதேஷின் பாலைவனச் சோலைவரை இருக்கும். பிறகு இது எகிப்து ஆற்றிலிருந்து மத்தியதரை கடல் வரை போகும். இது தென்னெல்லையாக இருக்கும். [PE][PS]
20. “மேற்கு புறத்தில், மத்தியத்தரைக்கடல் லேபோ ஆமாத்தின் முன் இருக்கும் எல்லா நிலப்பரப்புவரையும் மெற்கெல்லையாக இருக்கும். [PE][PS]
21. “எனவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே தேசத்தைப் பங்கிட்டுக்கொள்வீர்களாக.
22. நீங்கள் நிலத்தைச் சொத்தாக, உங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுடன் உங்கள் மத்தியில் வாழும் அந்நியர்களுக்கும் பங்குபோடுவீர்கள். அந்த அந்நியர்கள் ஜனங்கள் இஸ்ரவேலில் பிறந்தவர்கள் போலவே ஜனங்கள் ஆவார்கள். இஸ்ரவேலின் கோத்திரங்களின் மத்தியில் நீங்கள் அவர்களுக்குக் கொஞ்சம் நிலத்தை பங்குபோடுவீர்கள்.
23. எந்தக் கோத்திரத்தோடு அந்த அந்நியன் தங்கியிருக்கிறானோ அவர்கள் அவனுக்குரிய கொஞ்சம் நிலத்தைக் கொடுக்க வேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார். [PE]