1. {யூதர்களுக்கு வெற்றி} [PS] ஆதார் என்னும் 12ஆம் மாதத்தின் 13வது நாள், ஜனங்கள் அரசனது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். அன்றுதான் யூதர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்க நம்பியிருந்த நாள். இப்பொழுது அந்த நிலைமாறி யூதர்கள் தம்மை வெறுத்த பகைவர்களைவிட பலமுள்ளவர்களானார்கள்.
2. யூதர்கள் அகாஸ்வேரு அரசனின் நாடுகளில் எல்லாம் ஒன்று கூடினர். நம்மை அழிக்க நினைத்தவர்களைத் தாக்க போதுமான பலமுடையவர்களாயினர். எனவே, அவர்களுக்கு எதிராக நிற்க எவருக்கும் பலமில்லை. அந்த ஜனங்கள் யூதர்களுக்குப் பயந்தனர்.
3. எல்லா மாகாணங்களின் அதிகாரிகளும், தலைவர்களும், ஆளுநர்களும், யூதர்களுக்கு உதவினார்கள். ஏனென்றால் அவர்கள் மொர்தெகாய்க்கும் பயந்தனர்.
4. அரசனது அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். அரசனது மாகாணங்களிலுள்ள அனைவரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும் மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான். [PE][PS]
5. யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற்கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள்.
6. யூதர்கள் சூசான் தலைநகரில் 500 பேரை கொன்றழித்தார்கள்.
7. யூதர்கள் கீழ்க்கண்டவர்களைக் கொன்றனர்: பர்சர்ன்தாத்தா, தல்போன், அஸ்பாதா,
8. பொராதா, அதலியா, அரிதாத்தா,
9. பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா,
10. இவர்கள் ஆமானின் 10 மகன்கள். அம்மெதாத்தாவின் மகனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை. [PE][PS]
11. தலைநகரமான சூசானில் எத்தனை பேர் கொன்று அழிக்கப்பட்டனர் என்று அரசன் கேள்விப்பட்டான்.
12. எனவே, அரசன் எஸ்தர் அரசியிடம், “யூதர்கள் சூசானில் ஆமானின் 10 மகன்களையும் சேர்த்து 500 பேரை கொன்றுள்ளனர். இப்பொழுது வேறு மாகாணங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்? எனக்குச் சொல், நான் அதனை நடத்துவேன். சொல் நான் அதனைச் செய்வேன்” என்றான். [PE][PS]
13. எஸ்தர், “அரசருக்கு விருப்பமானால், சூசானில் யூதர்கள் இதைப்போன்றே நாளையும் செய்ய அனுமதி கொடுக்கவேண்டும். ஆமானின் 10 மகன்களின் உடலையும் தூக்கில் தொங்கவிட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டாள். [PE][PS]
14. எனவே, அரசன் அந்த கட்டளையைக் கொடுத்தான். அந்தச் சட்டம் அடுத்த நாளும் இருந்தது. அவர்கள் ஆமானின் 10 மகன்களின் உடல்களை தொங்கவிட்டனர்.
15. சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 14 வது நாளில் ஒன்று கூடினார்கள். அவர்கள் சூசானில் 300 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை. [PE][PS]
16. அதே நேரத்தில் வேறு நாடுகளில் வாழ்ந்த யூதர்களும் ஒன்று கூடினார்கள். அதனால் தம்மைக் காத்துக்கொள்ளும் அளவு பலமுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் பகைவர்களைத் தாக்கமுடிந்தது. யூதர்கள் தம் பகைவரான 75,000 பேரைக் கொன்றனர். ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை.
17. இது ஆதார் மாதத்தின் 13வது நாளில் நடைபெற்றது, 14 வது நாள் அவர்கள் ஓய்வு எடுத்தனர். யூதர்கள் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறை நாளாக ஆக்கினார்கள். [PS]
18. {பூரீம் விழா} [PS] சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 13 மற்றும் 14ஆம் நாட்களில் ஒன்று கூடினார்கள். 15வது நாள் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் 15வது நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினர்.
19. எனவே, நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த யூதர்கள் 14வது நாளை பூரீம் விழாவாகக் கொண்டாடினார்கள். அதனை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினார்கள். அன்று விருந்தும் ஒருவர்கொருவர் அன்பளிப்பும் கொடுத்து மகிழ்ந்தனர். [PE][PS]
20. மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு அரசனின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான்.
21. மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான்.
22. யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான். [PE][PS]
23. எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர். [PE][PS]
24. அம்மெதாத்தாவின் மகனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது.
25. ஆமான் அவற்றைச் செய்தான். ஆனால் எஸ்தர் அரசனிடம் பேசச் சென்றாள். எனவே, அவன் புதிய கட்டளைகளை அனுப்பினான். அந்த கட்டளைகள் ஆமானின் திட்டத்தை அழித்ததோடு, ஆமானுக்கும் அவனது குடும்பத்திற்கும், அதே தீமை ஏற்படும்படியும் ஆயிற்று. எனவே, ஆமானும் அவனது மகன்களும் தூக்கு மரத்தில் தொங்கினார்கள். [PE][PS]
26. (26-27) இப்போது, குலுக்கல் சீட்டு “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறை நாளும் “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. மொர்தெகாய் யூதர்களுக்கு கடிதம் எழுதி இந்நாளைக் கொண்டாடச் சொன்னான். எனவே, யூதர்கள் ஆண்டில் இரண்டு நாளைக் கொண்டாடும் வழக்கத்தைக்கொண்டனர்.
27. இது அவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை நினைவுப்படுத்துவதாக இருந்தது. யூதர்களும் மற்ற ஜனங்களும் சேர்ந்து சரியான காலத்தில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்கள் கொண்டாடினார்கள். ஒவ்வொரு தலைமுறையில் ஒவ்வொரு குடும்பமும் இந்த இரண்டு நாட்களையும் நினைவுபடுத்தினர். அவர்கள் இந்த விடுமுறையை ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரிலும் கொண்டாடினார்கள் யூதர்கள் என்றென்றும் பூரீம் விழாவைக் கொண்டாடுவதை நிறுத்தக் கூடாது. யூதர்களின் சந்ததிகளும் எப்பொழுதும் இவ்விடுமுறையை நினைத்துக்கொள்ள வேண்டும். [PE][PS]
28. எனவே அபியாயேலின் மகளான எஸ்தர் அரசியும், யூதனான மொர்தெகாயும் பூரீம் பற்றிய ஒரு அதிகாரப் பூர்வமான கடிதத்தை எழுதினார்கள். இரண்டாவது கடிதம் உண்மையானது என்பதை நிரூபிக்க அரசனின் முழு அதிகாரத்ததோடு கடிதம் எழுதினார்கள்.
29. எனவே, மொர்தெகாய் அகாஸ்வேரு அரசனின் 127 மாகாணங்களுக்கும் கடிதம் அனுப்பினான். அந்த விழா யூதர்களிடம் சமாதானத்தையும், ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கையையும் உருவாக்கும் என்று மொர்தெகாய் எழுதினான்.
30. மொர்தெகாய் யூதர்களுக்குப் பூரீம் விழாவை கொண்டாட ஆரம்பிக்கும்படி எழுதினான். எப்பொழுது இப்புதிய விடுமுறை நாளை கொண்டாட வேண்டும் என்றும் எழுதினான். யூதனான மொர்தெகாயும் அரசியான எஸ்தரும் யூதர்களுக்கு இக்கட்டளையை இட்டனர். அவர்கள் இவ்விரு நாட்களையும் விடுமுறை கொண்டாட்டமாக தங்களுக்கும், தங்கள் சந்ததிகளுக்கும் எற்படுத்தவேண்டும். அவர்கள் மற்ற விடுமுறை நாட்களில் உபவாசம் இருந்து, அழுது, நடந்த தீமைகளுக்கு இரங்கி நினைப்பதுபோன்று இந்த இரு நாட்களையும் கொண்டாடுவார்கள்.
31. எஸ்தரின் கடிதம் பூரீம் விழாவின் விதிகளை அதிகாரப் பூர்வமானதாக ஆக்கிற்று. இவை ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டன. [PE]
32.