1. {சாலொமோனும் அவனது பல மனைவியரும்} [PS] சாலொமோன் அரசன் பெண்களை நேசித்தான்! அவன் இஸ்ரவேலில் உள்ள பெண்களை மட்டுமல்லாமல் பார்வேனின் மகள், ஏத்தியர், மோவாப், அம்மோன், ஏதோம், சீதோன் எனப் பல நாட்டுப் பெண்களை விரும்பினான்.
2. முன்பு, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம், “அடுத்த நாட்டு பெண்களை மணந்துக்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால், அவர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்க வேண்டியது வரும்” என்றார். ஆனால், சாலொமோன் இதுபோன்ற பெண்களை நேசித்தான்.
3. சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி அவனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர். அவர்கள் அவனை தேவனுடைய வழியிலிருந்து திருப்பினார்கள்.
4. அவன் முதியவன் ஆனதும், அவர்கள் அவனை அந்நியதெய்வங்களை பின் பற்றும்படிச் செய்தனர். அவனது தந்தை தாவீதைப்போன்று சாலொமோன் முழுமையாக கர்த்தரைப் பின்பற்றவில்லை.
5. சாலொமோன் அஸ்தரோத்தை தொழுதுகொண்டான். இது சீதோனியரின் தெய்வமாகும். அவன் மில்கோமையும் தொழுதுகொண்டான். இது அம்மோனியரின் அருவருப்பான விக்கிரகமாகும்.
6. எனவே சாலொமோன் கர்த்தருக்கு முன் தவறு செய்தான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று கர்த்தரை முழுமையாகப் பின்பற்றவில்லை. [PE][PS]
7. சாலொமோன் காமோஸ் என்னும் பொய்த்தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு இடத்தைக் கட்டினான். இது மோவாபியரின் அருவருப்பான விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் ஆலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் அருவருப்பான தோற்றமுடைய விக்கிரகமாகும்.
8. சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர். [PE][PS]
9. இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுவதிலிருந்து அவன் விலகிப்போனான். எனவே, கர்த்தர் சாலொமோன் மீது கோபங்கொண்டார். கர்த்தர் அதற்கு முன்பு அவனிடம் இருமுறை தோன்றினார்.
10. அவர் அவனிடம் அந்நியதெய்வங்களை பின்பற்றக் கூடாது என்று கூறினார். ஆனால் அவன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை
11. எனவே கர்த்தர் சாலொமோனிடம், “என்னோடு செய்த உடன்படிக்கையை மீற முடிவெடுத்துவிட்டாய். நீ எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உனது அரசை உன்னிடமிருந்து விலக்குவேன் என்று வாக்குறுதிக்கொடுக்கிறேன். அதனை உன் வேலைக்காரர்களில் ஒருவருக்குக் கொடுப்பேன்.
12. ஆனால் நான் உன் தந்தையான தாவீதை நேசித்தேன். எனவே நீ உயிரோடு இருக்கும்வரை இவ்வரசை உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளமாட்டேன் உன் மகன் அரசனாகும்வரை உனக்காகக் காத்திருப்பேன். பிறகு இதனை அவனிடமிருந்து எடுத்துக்கொள்வேன்.
13. இதுவரை, நான் உனது மகனிடமிருந்து ராஜ்யத்தை விலக்கியதில்லை. அவன் ஆள்வதற்கு நான் அவனுக்கு ஒரு கோத்திரத்தை விட்டுவிடுகிறேன். இதனை நான் தாவீதிற்காகச் செய்கிறேன். அவன் ஒரு நல்ல ஊழியன். அதோடு எருசலேமுக்காகவும் இதனைச் செய்கிறேன். இது என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம்!” என்றார். [PS]
14. {சாலொமோனின் பகைவர்கள்} [PS] அதே காலத்தில், ஏதோமியனாகிய ஆதாத்தை சாலொமோனின் பகைவனாக கர்த்தர் உருவாக்கினார். அவன் ஏதோம் அரசனின் குடும்பத்தைச் சார்ந்தவன்.
15. இப்பகைமை இவ்வாறுதான் வளர்ந்தது. முன்பு தாவீது ஏதோமைத் தோற்கடித்தான். தாவீதின் படையில் யோவாப் தளபதியாக இருந்தான். அவன் மரித்தவர்களைப் புதைப்பதற்காக ஏதோமுக்குச் சென்றான். யோவாப் அப்போது அங்கே உயிரோடு இருந்தவர்களையும் கொன்றுபோட்டான்.
16. யோவாபும் மற்ற இஸ்ரவேலர்களும் ஏதோமில் 6 மாதங்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அனைத்து ஆண்களையும் கொன்றுவந்தனர்.
17. ஆனால் அப்போது ஆதாத் சிறுவனாக இருந்தான். அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவனுடைய தந்தையின் வேலைக்காரர்களும் அவனோடு போனார்கள்.
18. அவர்கள் மீதியானை விட்டு பாரானுக்குச் சென்றனர். பாரானில் மேலும் சிலர் சேர்ந்துகொண்டார்கள். பின் அனைவரும் எகிப்துக்குப் போய் பார்வோன் மன்னனிடம் உதவி கேட்டனர். மன்னன் அவனுக்கு ஒரு வீடும், கொஞ்ச நிலமும் கொடுத்தான். இன்னும் பல உதவிகளையும் உணவும் கொடுத்து வந்தான். [PE][PS]
19. பார்வோன் ஆதாத்தை மிகவும் விரும்பி, திருமணமும் செய்துவைத்தான். அவள் பார்வோனின் மனைவியின் தங்கைஆவாள். அவன் மனைவியோ தாப்பெனேஸ் என்னும் அரசகுமாரி.
20. ஆதாத்துக்கு கேனுபாத் என்னும் மகன் பிறந்தான். தாப்பெனேஸ் அவனைத் தன் குழந்தைகளோடு அரண்மனையில் வளரவிட்டாள். [PE][PS]
21. தாவீது, மரித்துப்போனதை ஆதாத் எகிப்தில் அறிந்தான். யோவாப் தளபதியும், மரித்துப்போனதை அறிந்துக்கொண்டான். எனவே அவன் பார்வோனிடம், “நான் என் சொந்த நாட்டுக்குப் போக அனுமதியுங்கள்” என்றான். [PE][PS]
22. ஆனால் பார்வேன், “உனக்குத் தேவையான அனைத்தையும் இங்கே உனக்குத் கொடுத்திருக்கிறேன்! அவ்வாறிருக்க ஏன் உன் நாட்டிற்குப் போக விரும்புகிறாய்?” என்று கேட்டான். [PE][PS] ஆனால் ஆதாத்தோ, “தயவுசெய்து, என்னைப் போக அனுமதியுங்கள்” என்றான். [PE][PS]
23. சாலொமோனுக்கு எதிராக இன்னொரு பகைவனை உருவாக்கவும் தேவன் தாமே காரணமானார். [PE][PS] அவன் பெயர் ரேசோன், இவன் எலியாதாவின் மகன். இவன் தன் எஜமானனிடமிருந்து ஓடிப் போனான். இவனது எஜமானன் சோபாவின் அரசனான, ஆதாதேசர்.
24. தாவீது சோபாவைத் தோற்கடித்த பிறகு, ரேசோன் சில வீரர்களைச் சேர்ந்து அவர்களுக்கு தலைவன் ஆனான். அவன் தமஸ்குவுக்கு போய் அங்கே தங்கி இருந்தான். பின் அதன் அரசன் ஆனான்.
25. அதோடு ஆராமையும் ஆண்டான். அவன் இஸ்ரவேலர்களை வெறுத்து, தொடர்ந்து அவர்களுக்குப் பகைவனாக சாலொமோன் காலம்வரை இருந்தான். ஆதாத்தும் ரேசானும் இஸ்ரவேலுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். [PE][PS]
26. நேபாத்தின் மகனான யெரோபெயாம் சாலொமோனின் ஊழியக்காரன். இவன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவன் சேரேதா ஊரினன். இவன் தாயின் பெயர் செரூகாள். இவனது தந்தை மரித்துப்போனான். இவனும் சாலொமோனுக்கு எதிராக எழும்பினான். [PE][PS]
27. யெரோபெயாம் சாலொமோனுக்கு எதிராக எழும்பிய கதை இதுதான். சாலொமோன் தாவீது நகரத்தில் மில்லோவும் சுவரும் கட்டினான்.
28. யெரோபெயாம் உறுதிமிக்கவன். இவன் நல்ல வேலைக்காரன் என்பதைச் சாலொமோன் அறிந்துக்கொண்டான். யோசேப்பின் கோத்திரத்திலிருந்த வேலைக்காரர்கள் அனைவருக்கும் இவனைத் தலைவனாக்கினான்.
29. ஒருநாள் யெரோபெயாம் எருசலேமிற்கு வெளியே பயணம் போனான். சாலையில் அகியா எனும் சீலோனியனான தீர்க்கதரிசியை சந்தித்தான். அகியா புதிய அங்கியை அணிந்திருந்தான். இருவரும் தனியாக இருந்தார்கள். [PE][PS]
30. அகியா தனது புதிய அங்கியை எடுத்து 12 துண்டுகளாகக் கிழித்தான்.
31. பின் அவன் யெரோபெயாமை நோக்கி, “உனக்காக இதில் 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘நான் சாலொமோனிடமிருந்து அரசை விலக்குவேன்’ என்று கூறியிருக்கிறார். நான் உனக்குப் பத்து கோத்திரங்களைத் தருவேன்.
32. தாவீதின் குடும்பம் ஒரே ஒரு கோத்திரத்தைமட்டும் ஆளும்படி செய்வேன். நான் இதனை தாவீதிற்காகவும் எருசலேமிற்காகவும் செய்கிறேன். நான் எருசலேமை அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தேன்,
33. சாலொமோன் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டதால் அவனிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுக்கப்போகிறேன். அவன் சீதோனின் பொய் தெய்வமான அஸ்தரோத்தையும், மோவாபியரின் பொய்த் தெய்வமான காமோசையும், அம்மோன் ஜனங்களின் பொய்த் தெய்வமான மில்கோமையும் தொழுதுகொண்டு வருகிறான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று வாழவில்லை. அவன் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படியவில்லை. அவன் நல்ல வழிகளில் இருந்து விலகிவிட்டான்.
34. எனவே நான் சாலொமோனின் குடும்பத்திலிருந்து அரசை விலக்குவேன். ஆனால் நான் சாலொமோனை அவனது கடைசி காலம் மட்டும் அரசனாக இருக்க அனுமதிப்பேன். நான் இதனை தாவீதிற்காகச் செய்கிறேன் தாவீது என் எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்ததால் அவனைத் தேர்ந்தெடுத்தேன்.
35. ஆனால் நான் சாலொமோனின் மகனிடமிருந்து அரசை விலக்குவேன். நான் உன்னை, பத்து கோத்திரங்களை ஆட்சி செய்ய வைப்பேன். நீ இஸ்ரவேல் முழுவதையும் ஆள்வாய்.
36. நான் சாலொமோனின் மகனை ஒரு கோத்திரத்தை மட்டும் ஆளவிடுவேன். இதன் மூலம் தாவீதின் சந்ததியார் தொடர்ந்து எருசலேமில் ஆள்வதாக இருக்கும். நான் எருசலேமை எனக்காகத் தேர்ந்தெடுத்தேன்.
37. ஆனால் உன்னை, உனக்கு விருப்பமான அனைத்தையும் ஆளும்படி வைப்பேன். இஸ்ரவேல் முழுவதையும் நீ ஆளுவாய்.
38. நீ என்னைப் பின்பற்றி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் உன்னை இவ்வாறு ஆக்குவேன். நீ தாவீதைப்போன்று சட்டங்களையும், கட்டளைகளையும் மீறாமல் நடந்துக்கொண்டால், நான் உன்னோடு இருப்பேன். நான் உனது குடும்பத்தையும் தாவீதின் குடும்பத்தைப்போன்று அரச குடும்பமாகச் செய்வேன். நான் உனக்கு இஸ்ரவேலைத் தருவேன்.
39. நான் சாலொமோனின் தவறுகளுக்காக தாவீதின் ஜனங்களைத் தண்டிக்கப்போகிறேன். ஆனால் அவர்களை என்றென்றைக்கும் தண்டிக்கமாட்டேன்” என்றான். [PS]
40. {சாலொமோனின் மரணம்} [PS] சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயன்றான். ஆனால் அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவன் சீஷாக் அரசனை சந்தித்தான். அவன் சாலொமோன் மரிக்கும்வரை அங்கேயே இருந்தான். [PE][PS]
41. சாலொமோன் தனது ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த அறிவுள்ள செயல்களைச் செய்தான். அவை அனைத்தும் சாலொமோனின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
42. இவன் எருசலேமிலிருந்து கொண்டு இஸ்ரவேல் முழுவதையும் 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான்.
43. பின் சாலொமோன் மரித்ததும், தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் தாவீதின் நகரமாகும். பிறகு சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அரசனானான். [PE]