1. [PS] என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து; என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று.
2. என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்; என் அறிவுரையை உன் கண்மணிபோல் காத்துக்கொள்வாய்.
3. அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டு கொள்; உன் இதயப் பலகையில் பொறித்துவை.
4. ஞானத்தை உன் சகோதரி என்று சொல்; உணர்வை உன் தோழியாகக் கொள்.
5. அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்; தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய். [* ‘கையில்’ என்பது எபிரேய பாடம்.. ]
6. ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,
7. பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்; மதிகேடனான அவனை இளைஞரிடையே பார்த்தேன்.
8. அவன் தெரு வழியாக நடந்துபோய், அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.
9. அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை; அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே,
10. அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள். அவள் விலைமகளைப் போல உடுத்தி, வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள். [* நீமொ 24:33-34. ]
11. அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்; வெட்கத்தை ஒழித்தவள்; வீட்டில் அவளது கால் தங்காது. [* நீமொ 24:33-34. ]
12. அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்; முச்சந்தியிலும் நிற்பாள்; மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள்.
13. அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து,
14. “நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது; இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்;
15. அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்; உன்னை ஆவலோடு தேடினேன்; கண்டுகொண்டேன்.
16. என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்; எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.
17. வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு, என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன்.
18. நீ வா; விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்; இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம்.
19. என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான்.
20. அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்; முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்” என்று சொன்னாள்.
21. இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்; நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.
22. உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்; வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
23. கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில், தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.[PE]
24. [PS] ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனியுங்கள்.
25. உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்; மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.
26. அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்; வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.
27. அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி; சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.[PE]