1. {தூய்மையற்ற மக்கள்} [PS] ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2. தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3. மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிடுங்கள்.
4. இஸ்ரயேல் மக்கள் அவ்வாறே அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்திவிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே இஸ்ரயேலர் செய்தனர்.[PE]
5. {தவறுகளுக்கான அபராதம்} [PS] ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6. இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால், [* லேவி 6:1-7. ]
7. அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும்; தீங்கிழைக்கப்பட்டவனுக்கு ஈடுகட்டி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். [* லேவி 6:1-7. ]
8. குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறை உறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்; இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி; ஆட்டைத் தவிரச் சேர வேண்டியது, [* லேவி 6:1-7. ]
9. இஸ்ரயேல் மக்கள் குருவிடம் கொண்டு வரும் புனிதப் பொருள்கள் அனைத்திலும் உயர்த்திப் படைப்பவை அவனையே சேரும். [* லேவி 6:1-7. ]
10. ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை; ஆனால், அவன் குருவுக்குக் கொடுப்பது குருவையே சேரும்.[PE]
11. {மனைவியரை ஐயுறும் கணவர்களின் வழக்குகள்} [PS] மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
12. இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால்,
13. வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால்,
14. வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால்,
15. அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில், அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.[PE]
16. [PS] பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்;
17. குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார்.
18. குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்; சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார்.
19. அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: “நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது:
20. ஆனால், நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால்
21. குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், “ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வயிறு வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்;
22. சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும்” என்பார். அதற்கு அப்பெண் “ஆமென், ஆமென்” என்பாள்.
23. பின்னர், குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்;
24. சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்; சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்.
25. குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காட்டிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார்.
26. குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்; இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வான்.
27. அவன் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்; அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்; அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள்.
28. ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது; அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.[PE]
29. [PS] வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்; அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால்,
30. அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்; குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.
31. ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்; பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள்.[PE]