1. {பொருத்தனை பற்றிய விதிமுறைகள்} [PS] மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது: கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே;
2. ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்.
3. ஒரு பெண் இளமையில் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போது ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றைச் செய்து உறுதிமொழிக்குத் தான் கட்டுப்பட்டிருக்க, [* இச 23:21-13; மத் 5:33. ]
4. அவள் தந்தை அவள் செய்து கொண்ட பொருத்தனையையும் அவள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியையும் கேட்டும் எதையும் அவளிடம் சொல்லவில்லையெனில் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் எடுத்துக்கொண்ட ஒவ்வோர் உறுதிமொழியும் நிலைக்கும்.[PE]
5. [PS] ஆனால், அவள் தந்தை அதைக் கேட்ட நாளில் அவளுக்கு ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனையோ, அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியோ எதுவும் நிலைக்காது. ஆண்டவரும் அவளை மன்னிப்பார். ஏனெனில், அவள் தந்தை அதற்கு ஒப்புதல் தரவில்லை.
6. ஆனால், அவள் பொருத்தனை செய்திருக்கையில் அல்லது கருத்தின்றிக் கூறிய சொற்களால் கட்டுண்டிருக்கையில் ஒருவனுக்கு மணம் முடிக்கப்பட்டிருக்க,
7. தன் கணவன் அதைக் கேட்டு அவன் அதைக் கேட்ட நாளில் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் நிலைக்கும்; அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளும் நிலைக்கும்.
8. ஆனால், அவள் கணவன் அதை அறியவரும் நாளில் ஒப்புதல் தராமலிருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகளையும் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கருத்தின்றிக் கூறிய சொற்களையும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறான். ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.
9. ஒரு விதவை அல்லது மணமுறிவு செய்யப்பட்டவள் செய்துகொண்ட பொருத்தனைக்கும் அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறிய எதற்கும் அவளே பொறுப்பாவாள்.
10. மேலும், அவள் கணவன் வீட்டில் பொருத்தனை செய்திருக்க அல்லது தன்னைக் கட்டக்குள்ளாக்கும் அளவில் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்க,
11. அவள் கணவன் அதைக் கேட்டும் அவளிடம் ஒன்றும் சொல்லாமலும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமலும் இருந்திருந்தால் அவள் செய்துகொண்ட பொருத்தனைகள் அனைத்தும் நிலைக்கும்; அவள் தன்னைக் கட்டுக்குள்ளாக்கும் அளவில் கூறியது ஒவ்வொன்றும் நிலைக்கும்.
12. ஆனால், அவள் கணவன் அவற்றைக் கேட்ட நாளில் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால், அவள் செய்துகொண்ட பொருத்தனைகளோ, அவளைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் கூறிய வார்த்தைகளோ எவையும் நிலைக்கா; அவள் கணவன் அவற்றை ஒன்றுமில்லாமலாக்கி விட்டான்; ஆண்டவரும் அவளை மன்னிப்பார்.
13. தன்னை வருத்திக்கொள்ளுமாறு அவள் செய்து கொண்ட எந்தப் பொருத்தனையையும் தன்னைக் கட்டுப்படுத்தும் அளவில் அவள் எடுத்துக்கொண்ட எந்த உறுதி மொழியையும் அவள் கணவன் நிலைப்படுத்தலாம்; அல்லது ஒன்றுமில்லாமல் ஆக்கலாம்.
14. ஆயினும், அவள் கணவன் ஒருநாளும் அவளிடம் ஒன்றும் சொல்லாதிருந்தால் அவள் செய்துகொண்ட எல்லாப் பொருத்தனைகளையும் அல்லது அவளைக் கட்டுக்குள்ளாக்கும் அவளின் உறுதிமொழிகள் அனைத்தையும் அவன் நிலைப்படுத்துகிறான். அவன் அவற்றைக் கேட்ட அவளிடம் ஒன்றும் சொல்லாதபடியால் அவன் அவற்றை நிலைப்படுத்தி விட்டான்.[PE]
15. [PS] ஆனால், அவற்றைப் பற்றிக் கேட்டபின் அவன் அவற்றை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி விட்டால் அவளின் குற்றத்திற்கு அவனே பொறுப்பு.
16. ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்குமிடையிலும், ஒரு தந்தைக்கும் அவர் வீட்டில் இளமையாயிருக்கும் ஒரு மகளுக்குமிடையிலும் இருக்குமாறு ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிமுறைகள் இவையே.[PE]