1. {உளவாளிகள்[BR](இச 1:19-33)} [PS] ஆண்டவர் மோசேயிடம்,
2. “இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார்.
3. ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள்.
4. அவர்களின் பெயர்கள்; ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா;
5. சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று;
6. யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு;
7. இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்;
8. எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா;
9. பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி;
10. செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்;
11. யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி;
12. தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்;
13. ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்;
14. நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி;
15. காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்;
16. நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை ‘யோசுவா’* என்று பெயரிட்டு அழைத்தார்.[PE]
17. [PS] கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்; அவர் அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்;
18. அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா,
19. அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா,
20. அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்; துணிவுடன் இருங்கள்; அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம்.[PE]
21. [PS] அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர்.
22. அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர். அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்; எகிப்திலுள்ள சோவானுக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது.
23. பின்னர், அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர் சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.
24. இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு ‘எசுக்கோல்’** பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.[PE]
25. [PS] நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.
26. அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர்.
27. அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி.
28. ஆயினும், அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்;
29. அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர்.[PE]
30. [PS] காலேபு மோசேமுன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, “நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்; ஏனெனில், நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்” என்றார்.
31. ஆனால், அவருடன் சென்றிருந்த ஆள்கள், “நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில், அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்” என்றனர்.
32. இவ்வாறு, அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்;
33. அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம்.[PE]