1. {வெள்ளி எக்காளங்கள்} [PS] ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2. இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அடிப்பு வேலையாக அவற்றைச் செய்ய வேண்டும். மக்கள் கூட்டமைப்பை ஒன்று கூட்டவும், பாளையத்தைப் பெயர்க்கவும் நீ அவற்றைப் பயன்படுத்துவாய்.
3. அவை இரண்டும் ஊதப்படும்போது மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சந்திப்புக்கூடார வாயிலில் உன்முன்னே ஒன்றுகூட வேண்டும்.
4. ஆனால், ஒன்றை மட்டும் ஊதினால், இஸ்ரயேலின் ஆயிரத்தவர் தலைவர்களாகிய முதல்வர்கள் உன்னிடத்தில் கூடிவருவார்கள்.
5. நீ பெருந்தொனியாய் ஊதுகையில், கீழ்ப்புறப் பாளையங்கள் புறப்படும்.
6. அத்துடன் இரண்டாம் முறை நீ பெருந்தொனியாய் ஊதுகையில் தென்புறப் பாளையங்கள் புறப்படும்; அவர்கள் புறப்படும் போதெல்லாம் பெருந்தொனியாய் ஊத வேண்டும்.
7. சபையை ஒன்றுகூட்ட நீ ஊதும்போது பெருந்தொனி எழுப்பக்கூடாது.
8. ஆரோனின் புதல்வரான குருக்கள் எக்காளங்களை ஊதவேண்டும். எக்காளங்கள் உங்கள் தலைமுறைதோறும் நிலையான நியமமாக இருக்கும்.
9. உங்கள் நாட்டில் உங்களை ஒடுக்குகிற பகைவருக்கெதிராகப் போருக்குச் செல்கையில் எக்காளங்களால் பெருந்தொனி எழுப்புங்கள்; அப்போது கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நீங்கள் நினைவுகூரப்பட்டு, பகைவரிடமிருந்து விடுவிக்கப்படுவீர்கள்.
10. மகிழ்ச்சியின் நாள், குறிக்கப்பட்ட திருநாள்கள், மாதப் பிறப்புகள், ஆகியவற்றில் நீங்கள் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தும் போது எக்காளங்களை ஊதுவீர்கள். அவை கடவுள் திருமுன் உங்களுக்கு நினைவூட்டுதலாகப் பயன்படும். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.[PE]
11. {இஸ்ரயேலரின் புறப்பாடு} [PS] இரண்டாம் ஆண்டு இரண்டாம் மாதம் இருபதாம் நாள் உடன்படிக்கைத் திரு உறைவிடத்தின் மேலிருந்து மேகம் எழும்பியது.
12. இஸ்ரயேல் மக்கள் சீனாய்ப் பாலை நிலத்திலிருந்து பகுதி பகுதியாகக் கடந்து சென்றனர். பாரான் பாலை நிலத்தில் மேகம் தங்கிற்று.
13. மோசே வழிவந்த கடவுளின் கட்டளைப்படி இப்பொழுது முதன்முறையாக அவர்கள் புறப்பட்டனர்.
14. யூதா மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு முதலில் புறப்பட்டது; அவர்கள் படைத்தலைவன் அம்மினதாபின் மகன் நகசோன்;
15. இசக்கார் மக்கள் குலத்தின் படைத்தலைவன் சூவாரின் மகன் நெத்தனியேல்;
16. செபுலோன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் கேலோனின் மகன் எலியாபு;[PE]
17. [PS] மேலும், திருவுறைவிடம் இறக்கி வைக்கப்பட்டதும் கேர்சோனின் புதல்வரும், மெராரியின் புதல்வரும் அதைச் சுமந்து கொண்டு புறப்பட்டனர்.
18. அடுத்து, ரூபன் பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு புறப்பட்டது; அவர்கள் படைத்தலைவன் செதேர் மகன் எலிட்சூர்.
19. சிமியோன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் சுரிசத்தாயின் மகன் செலுமியேல்;
20. காத்து மக்கள் குலத்தின் படைத்தலைவன் தெகுவேலின் மகன் எல்யாசாபு.[PE]
21. [PS] பின்னர், கோகாத்தியர் தூயபொருள்களைச் சுமந்துகொண்டு புறப்பட்டனர். அவர்கள் போய்ச் சேருமுன் திருவுறைவிடம் எழுப்பப்பட்டிருந்தது.
22. அடுத்து, எப்ராயிம் மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்திவரோடு புறப்பட்டது; அவர்களின் படைத்தலைவன் அம்மிகூதின் மகன் எலிசாமா;
23. மனாசே மக்கள் குலத்தின் படைத்தலைவன் பெதாசூரின் மகன் கமாலியேல்;
24. பென்யமீன் மக்கள் குலத்தின் படைத்தலைவன் கிதயோனியின் மகன் அபீதான்;[PE]
25. [PS] அனைத்துப் பாளையங்களுக்கும் பின்காவலாகத் தாண் மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு புறப்பட்டது. அவர்களின் படைத்தலைவன் அம்மிசத்தாயின் மகன் அகியேசர்;
26. ஆசேர் மக்கள் குலத்தின் படைத்தலைவன் ஒக்ரானின் மகன் பகியேல்;
27. நப்தலி மக்கள் குலத்தின் படைத்தலைவன் ஏனானின் மகன் அகிரா;
28. இஸ்ரயேல் மக்கள் புறப்படுகையில் அவர்கள் படைகளின் அணி வரிசை இதுவே.[PE]
29. [PS] பின்னர், மோசே மீதியானியனும் தன் மாமனுமாகிய இரகுவேலின் மகன் கோபாபிடம் கூறியது: ‘உங்களுக்குத் தருவேன்’ என்று ஆண்டவர் கூறிய இடத்திற்கு நாங்கள் போய்க் கொண்டு இருக்கிறோம்; நீ எங்களோடு வா, நாங்கள் உனக்கு நல்லது செய்வோம்; ஆண்டவர் இஸ்ரயேலுக்கு நல்லதையே வாக்களித்துள்ளார்.
30. அவனோ அவரிடம், “நான் வரமாட்டேன், நான் என் சொந்த நாட்டுக்கு என் இனத்தவரிடம் போவேன்” என்றான்.
31. அதற்கு அவர்; “எங்களை விட்டுப் போகாதிருக்கும்படி உன்னை வேண்டிக்கொள்கிறேன்; பாலை நிலத்தில் எப்படிப் பாளையமிறங்க வேண்டும் என்று உனக்குத் தெரியும்; எங்களுக்கு நீ கண்களாயிருப்பாய்;
32. நீ எங்களோடு வந்தால், ஆண்டவர் எங்களுக்கு என்னென்ன நன்மை செய்வாரோ, அதை உனக்கும் நாங்கள் செய்வோம்” என்றார்.[PE]
33. [PS] ஆண்டவர் மலையைவிட்டு இஸ்ரயேலர் மூன்று நாள் பயணம் செய்தனர்; அவர்கள் அடுத்துத் தங்குமிடத்தைக் காட்டும்படி ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை மூன்று நாள் பயணத்திலும் அவர்கள்முன் சென்றது.
34. அவர்கள் பாளையத்திலிருந்து புறப்பட்டபோதெல்லாம் ஆண்டவரின் மேகம் பகலில் அவர்கள்மேல் இருந்தது.
35. பேழை புறப்படும்போதெல்லாம் மோசே, “ஆண்டவரே எழுந்தருளும். உம் பகைவர் சிதறுண்டு போகட்டும்; உம்மை வெறுப்போர் உம் முன்னின்று ஓடியொளியட்டும்” என்று கூறுவார்.
36. அது தங்கும்போதோ அவர், “ஆண்டவரே! பல்லாயிரவரான இஸ்ரயேலிடம் திரும்பும்” என்பார். [* திபா 68:1. ] [PE]