1. அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர்.
|
2. பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்
|
3. ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
|
5. "விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன.
|
7. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.
|
8. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன. "இவ்வாறு சொன்னபின், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று உரக்கக் கூறினார்.
|
10. அதற்கு இயேசு கூறியது; "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே "அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்துகொள்வதில்லை. "
|
12. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.
|
13. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்; சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.
|
14. முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.
|
15. நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.
|
16. "எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.
|
17. வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
|
18. ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். "
|
19. இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை.
|
20. "உம்தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவித்தார்கள்.
|
21. அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.
|
22. ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், "ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்" என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.
|
23. படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.
|
24. அவர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று.
|
25. அவர் அவர்களிடம், "உங்கள் நம்பிக்கை எங்கே?" என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், "இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
|
27. கரையில் இறங்கியதும் அந்நகரைச் சேர்ந்த ஒருவர் அவருக்கு எதிரே வந்தார். பேய் பிடித்த அவர் நெடுநாளாய் ஆடை அணிவதில்லை; வீட்டில் தங்காமல் கல்லறைகளில் தங்கிவந்தார்.
|
28. இயேசுவைக் கண்டதும் கத்திக்கொண்டு அவர்முன் விழுந்து, "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம் என உம்மிடம் மன்றாடுகிறேன்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
|
29. ஏனென்றால், அவரைவிட்டு வெளியேறுமாறு அத்தீய ஆவிக்கு இயேசு கட்டளையிட்டிருந்தார். அது எத்தனையோ முறை அவரைப் பிடித்திருந்தது. அவ்வேளைகளில் அவர் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் கட்டப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தும் அவற்றை உடைத்து எறிந்துவிடுவார். அது மட்டுமல்ல, தீய ஆவி அவரைப் பாலை நிலத்திற்கும் இழுத்துச் செல்லும்.
|
30. இயேசு அவரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க, அவர், "இலேகியோன்" என்றார். ஏனெனில் பல பேய்கள் அவருக்குள் புகுந்திருந்தன.
|
32. அங்கு ஒரு மலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றுக்குள் புகம்படி தங்களை அனுமதிக்குமாறு பேய்கள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.
|
33. பேய்கள் அவரைவிட்டு வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன. பன்றிக்கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து ஏரியில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
|
34. பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் நடந்ததைக் கண்டு ஓடிப்போய், நகரிலும் நாட்டுப் புறத்திலும் அறிவித்தார்கள்.
|
35. நடந்தது என்ன என்று பார்க்க மக்கள் இயேசுவிடம் வந்தனர்; பேய்கள் நீங்கப்பெற்றவர் ஆடை அணிந்து அறிவுத் தெளிவுடன் இயேசுவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.
|
36. நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
|
37. அப்பொழுது கெரசேனரைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த மக்கள் அனைவரும் அச்சம் மேலிட்டவர்களாய்த் தங்களை விட்டுப் போகுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். அவர் படகேறித் திரும்பிச் சென்றார்.
|
39. அவரோ, "உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம்; கடவுள் உமக்குச் செய்ததையெல்லாம் எடுத்துக்கூறும்" என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார். அவரும் நகரெங்கும் போய், இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் அறிவித்தார்.
|
41. அப்போது தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து தம்முடைய வீட்டிற்கு வருமாறு வேண்டினார்.
|
42. ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும்; தறுவாயிலிருந்தாள். இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது
|
43. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.
|
44. அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று.
|
45. "என்னைத் தொட்டவர் யார்?" என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர். பேதுரு, "ஆண்டவரே, மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறதே" என்றார்.
|
46. அதற்கு இயேசு, "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.
|
47. அப்பெண்தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக்கொண்டே வந்து அவர்முன் விழுந்து, தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தார்.
|
49. அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஒருவர் வந்து, "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். இனி போதகரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.
|
50. இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார்.
|
51. வீட்டுக்குள் வந்ததும் பேதுரு, யோவான், யாக்கோபு, சிறுமியின் தாய், தந்தை ஆகியோரைத் தவிர எவரையும் அவர் தம்மோடு உள்ளே வர அனுமதிக்கவில்லை.
|
52. அவளுக்காக அனைவரும் மாரடித்துப் புலம்பி அழுதுகொண்டிருந்தார்கள். இயேசுவோ, "அழாதீர்கள்; இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார்.
|
56. அவளுடைய பெற்றோர் மலைத்துப் போயினர். நடந்ததை எவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
|