1. {கிழக்கே குடியேறிய குலத்தார்} [PS] யோசுவா ரூபன் குலத்தாரையும், காத்துக் குலத்தாரையும், மனாசேயின் குலத்தாரையும் அழைத்து,
2. அவர்களின், “நீங்கள் ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்ட அனைத்தையும் கைக்கொண்டீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய அனைத்திற்கும் கீழ்ப்படிந்தீர்கள். [* எண் 32:20-32; யோசு 1:12-15. ]
3. நீங்கள் இதுவரை பலநாள்களாக உங்கள் சகோதரர்களைக் கைவிடாமல், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டவற்றைக் கைக்கொண்டீர்கள்.
4. அவர்களுக்கு வாக்களித்தபடி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரர்களுக்கு இப்போது அமைதிக் காலம் அளித்துள்ளார். இப்பொழுது உங்கள் கூடாரங்களுக்கு யோர்தானுக்கு அப்பால் ஆண்டவரின் ஊழியர் மோசே உங்களுக்கு உடைமையாகக் கொடுத்த பகுதிக்குச் செல்லுங்கள்.
5. உங்கள் முழு இதயத்துடனும் உங்கள் முழு உள்ளத்துடனும் ஆண்டவராகிய கடவுள்மீது அன்பு கூருமாறும், அவருடைய வழிகள் அனைத்திலும் நடக்குமாறும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுமாறும், அவரைப் பற்றிக்கொள்ளுமாறும், அவருக்குப் பணிபுரியுமாறும், ஆண்டவரின் ஊழியராகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளைகளையும் சட்டத்தையும் நிறைவேற்றுவதில் மிகவும் கவனமாயிருங்கள்” என்றார்.
6. யோசுவா ஆசி வழங்கி அவர்களை அனுப்பினார். அவர்களும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.[PE]
7. [PS] மோசே மனாசேயின் குலத்தில் ஒரு பாதிக்கு பாசானில் நிலம் கொடுத்தார். யோசுவா அக்குலத்தின் மறுபாதிக்கு அவர்களுடைய சகோதரர்களிடையே யோர்தானுக்கு மேற்கில் நிலம் கொடுத்தார். யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பியபொழுது அவர்களுக்கு ஆசி வழங்கி,
8. “மிகுந்த செல்வத்துடன் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் எதிரிகளிடமிருந்து கொள்ளை கொண்ட மிகுதியான கால்நடைகள், வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மிகுதியான ஆடைகள் ஆகியவற்றை உங்கள் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
9. ரூபனின் மக்களும் காத்தின் மக்களும் மனாசேயின் பாதிக் குலத்தினரும் கானானில் உள்ள சீலோவில் இஸ்ரயேல் மக்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, மோசே வழியாக ஆண்டவர் கட்டளையிட்டபடி அவர்கள் பெற்றுக்கொண்ட தம் சொந்த நாடான கிலயாதுக்குச் சென்றனர்.[PE]
10. {யோர்தானுக்கருகே எழுப்பப்பட்ட பலிபீடம்} [PS] அவர்கள் கானான் நாட்டில் யோர்தானுக்கருகே இருந்த கெலிலோத்திற்கு வந்தனர். ரூபனின் மக்களும், காத்தின் மக்களும், மனாசேயின் பாதிக் குலத்தினரும், யோர்தான் அருகில் மிகப்பெரிய பலிபீடம் ஒன்று எழுப்பினர்.
11. 'ரூபனின் மக்களும் காத்தின் மக்களும் மனாசேயின் பாதிக் குலத்தாரும் கானான் நாட்டின் எதிரில் யோர்தான் பகுதிகளில் இஸ்ரயேல் மக்களுக்கு அண்மையில் ஒரு பீடம் எழுப்பியுள்ளனர்' என்று இஸ்ரயேல் மக்கள் கேள்வியுற்றனர்.
12. இஸ்ரயேல் மக்கள்பேரவை இதைக் கேள்வியுற்று, அவர்களுக்கு எதிராகப் படையுடன் செல்லும் நோக்கத்துடன் சீலோவில் கூடியது.
13. இஸ்ரயேல் மக்கள் குரு எலயாசரின் மகன் பினகாசைக் கிலயாது நாட்டில் இருந்த ரூபனின் மக்கள், காத்தின் மக்கள், மனாசேயின் பாதிக் குலத்தினர் ஆகியவரிடம் அனுப்பினர்.
14. அவருடன் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் குடும்பத்துக்கு ஒரு தலைவராகப் பதின்மரை அனுப்பினர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தவர் தலைவர்.
15. அவர்கள் கிலயாது நாட்டில் இருந்த ரூபன் மக்களிடமும் காத்து மக்களிடமும் மனாசே பாதிக்குலத்தினரிடமும் சென்று பின்வருமாறு கூறினர்:
16. “ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் இவ்வாறு சொல்கின்றது; இந்நாளில் உங்களுக்கென்று இஸ்ரயேல் கடவுளுக்கு எதிராக ஒரு பலிபீடம் எழுப்பியதால் ஆண்டவரை விட்டு விலகி விட்டீர்கள். ஆண்டவருக்கு எதிராக ஏன் இந்தத் துரோகம்? [* இச 12:13-14. ]
17. பெகோரில் நாம் செய்த பாவம் நமக்குப் போதாதா? இந்நாள் வரை நாம் அதற்குக் கழுவாய் தேடவில்லை. அதற்குரிய தண்டனை ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிட்டது. [* எண் 25:1-9. ]
18. நீங்கள் இன்று ஆண்டவரை விட்டு விலகிவிட்டீர்கள். இன்று நீங்கள் ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றீர்கள். நாளை இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம்கொள்வார்.
19. உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள். அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது. எங்கள் நடுவில் தங்குங்கள். ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம். நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.
20. செராகின் மகன் ஆக்கான் கொள்ளைப் பொருளைத் திருடியதால் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம் கொள்ளவில்லையா? தன் குற்றத்திற்காக அவன் ஒருவன் மட்டுமா அழிந்தான்?” [* யோசு 7:1-26. ] [PE]
21. [PS] அப்பொழுது ரூபன் மக்களும் காத்து மக்களும் மனாசேயின் அரைக்குலத்தாரும் இஸ்ரயேலின் ஆயிரத்தவர் தலைவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது:
22. “உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! அவர் இதை அறிவார். இஸ்ரயேலும் இதை அறிவதாக! இது ஆண்டவருக்கு எதிரான கலகமும் துரோகமுமானால் நீங்கள் எங்களை இன்று தப்பிப் போக விடாதீர்கள்.
23. நாங்கள் ஆண்டவரைவிட்டு விலகவா இப்பலிபீடத்தை எழுப்பினோம். அதன்மீது எரிபலி, உணவுப்படையல், நல்லுறவுப்பலி செலுத்துவதாக இருந்தால் ஆண்டவர்தாமே எங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
24. எங்களுக்கு ஏற்பட்ட ஓர் அச்சத்தினால் இவ்வாறு செய்தோம். பிற்காலத்தில் உங்கள் மக்கள் எங்கள் மக்களிடம் 'உங்களுக்கும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கும் என்ன தொடர்பு?
25. ரூபன், காத்து ஆகியோரின் மக்களே! ஆண்டவர் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே யோர்தானை எல்லையாக வைத்தார். உங்களுக்கு ஆண்டவரிடத்தில் பங்கு இல்லை' என்று சொல்லி, உங்கள் மக்கள் எங்கள் மக்களை ஆண்டவரை வழிபடுவதிலிருந்து நிறுத்தக்கூடும்.
26. எனவே, நமக்கென ஒரு பலிபீடம் எழுப்புவோம். இது எரி பலிக்கோ வேறு பலிக்கோ அன்று.
27. மாறாக, ஆண்டவர் திருமுன் எரிபலிகளையும் வேறு பலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அவரை வழிபடுகிறோம் என்பதற்கு, இது நமக்கிடையிலும் நம் வழிமரபினரிடையிலும் சான்றாக இருக்கும். அதனால் உங்கள் மக்கள் எதிர்காலத்தில் எங்கள் மக்களிடம் 'உங்களுக்கு ஆண்டவரிடத்தில் பங்கு இல்லை' என்று சொல்லமாட்டார்கள்.
28. அப்படி எதிர்காலத்தில் எங்களுக்கும் எங்கள் வழிமரபினருக்கும் சொல்லப்பட்டால் நாங்கள் ‘எங்கள் தந்தையர் செய்த பலிபீடத்தின் படிவத்தைப் பாருங்கள். எரிபலியோ வேறு பலியோ செலுத்த அன்று; மாறாக, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே சான்றாக இருந்திடவே’ என்று கூறுவோம்.
29. ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்வதோ, ஆண்டவரை விட்டு விலகுவதோ, எரிபலி, உணவுப் படையல், வேறுபலிகள் ஆகியவற்றுக்காக பலிபீடம் எழுப்புவதோ எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அவரது திரு உறைவிடத்தின்முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறொன்றும் வேண்டாம்”.[PE]
30. [PS] ரூபன் மக்களும், காத்து மக்களும், மனாசே மக்களும் கூறியதைக் குரு பினகாசும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களான ஆயிரத்தவர் தலைவர்களும் கேட்டனர். அவர்களுக்கு அது நலமெனப்பட்டது.
31. எலயாசரின் மகனும் குருவுமான பினகாசு, ரூபன் மக்களிடமும், காத்து மக்களிடமும், மனாசே மக்களிடமும், “ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்து கொண்டோம். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யாதிருந்ததால், ஆண்டவரின் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை நீங்கள் காப்பாற்றினீர்கள்.” என்று கூறினர்.[PE]
32. [PS] எலயாசரின் மகனும் குருவுமான பினகாசும் தலைவர்களும் ரூபன் மக்களிடமிருந்தும் காத்து மக்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டு கிலயாது நாட்டிலிருந்து கானான் நாட்டுக்கு இஸ்ரயேல் மக்களிடம் திரும்பிவந்து அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தனர்.
33. அந்தப் பதில் இஸ்ரயேல் மக்களுக்கு நலமெனத் தோன்றியது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வாழ்த்தினர். அவர்கள் ரூபன் மக்களும் காத்து மக்களும் வாழும் நாட்டின்மீது போரிடச் செல்வதுபற்றியோ, அதை அழிப்பது பற்றியோ மேற்கொண்டு பேசவில்லை.
34. ரூபன் மக்களும் காத்து மக்களும், 'ஆண்டவரே கடவுள் என்பதற்கு நம் அனைவருக்கும் இப்பலிபீடமே சான்று' என்று சொல்லி அதற்குக் ‘கிலயாது’ என்று பெயரிட்டனர். [* எபிரேயத்தில், ‘சான்று’ என்பது இதன் பொருள்.. ] [PE]