1. {அத்திப் பழங்களின் அடையாளம்} [PS] பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் எருசலேமிலிருந்து நாடுகடத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர், ஆண்டவர் எனக்கு அருளிய காட்சி; இதோ, ஆண்டவரது கோவில்முன் அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன. [* 2 அர 2-16; 2 குறி 36:10.. ]
2. ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன; அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன; அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன.
3. அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, “எரேமியா, நீ காண்பது என்ன?” என்று கேட்டார். நான் “அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன” என்றேன்.[PE]
4. [PS] ஆண்டவரின் வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது;
5. இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அதாவது இவ்விடத்திலிருந்து நான் கல்தேயரின் நாட்டுக்கு அனுப்பியிருப்பவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போன்றவர்கள். அவர்களை நான் நல்லவர்களாகக் கருதுகிறேன்.
6. அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் கண்ணாயிருக்கிறேன்; அவர்களை மீண்டும் இந்நாட்டுக்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன்; கவிழ்த்து வீழ்த்தமாட்டேன். நான் அவர்களை நட்டு வளர்ப்பேன்; பிடுங்கி எறியமாட்டேன்.
7. நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பிவருவார்கள்.[PE]
8. [PS] ஆண்டவர் கூறுவது இதுவே; யூதா அரசன் செதேக்கியாவையும் அவர் தலைவர்களையும் இந்நாட்டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோரையும், எகிப்து நாட்டில் வாழ்வோரையும், தின்ன முடியாத அளவுக்குத் தீயவையாய் இருந்த அத்திப் பழங்களைப் போன்று நடத்துவேன்.
9. உலகின் அரசுகள் அனைத்துக்கும் அவர்கள் திகிலின் சின்னமாக அமைவார்கள். நான் அவர்களைத் துரத்தியடிக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் வசைச் சொல்லுக்கும் ஏளனத்துக்கும் பழிப்புரைக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள்.
10. நான் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையருக்கும் கொடுத்த நாட்டில் யாரும் இராது அழியும்வரை அவர்கள்மேல் வாளையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் அனுப்புவேன்.[PE]