1. {காணாமற்போன வெள்ளிக் கோப்பை} [PS] பின்னர், யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, “அவர்களுடைய கோணிப்பைகளில் அவர்கள் தூக்கிச் செல்லுமளவு தானியம் நிரப்பி, அவனவன் பணத்தைப் பையின் வாயில் வைத்துக் கட்டிவிடு.
2. இளையவனது கோணிப்பை வாயில் எனது வெள்ளிக்கோப்பையையும், தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் வைத்துக் கட்டிவிடு” என்று கட்டளையிட்டார். யோசேப்பு சொன்னவாறே அவனும் செய்தான். [* திப 7:12. ]
3. காலையில் கதிரவன் உதித்ததும் அவர்கள் தங்கள் கழுதைகளோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.
4. அவர்கள் நகரை விட்டுச் சிறிது தூரம் போயிருப்பர். அப்பொழுது யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, “நீ எழுந்து அம்மனிதர்களைத் துரத்திப் பிடித்து, ‘நன்மைக்குக் கைமாறாக நீங்கள் தீமை செய்வது ஏன்?
5. இது என் தலைவர் பருகப் பயன்படுத்துவது அல்லவா? இது அவர் குறிபார்க்கப் பயன்படுத்துவது அல்லவா? நீங்கள் செய்தது மிகப்பெரும் மோசடி!’ என்று சொல்வாய்” என்றார்.[PE]
6. [PS] அவனும் அவர்களை விரட்டிப் பிடித்து, இந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.
7. அதற்கு அவர்கள் அவனிடம், “ஐயா, தாங்கள் இப்படிப் பேசுவதேன்? உம் அடியார்களாகிய நாங்கள் இத்தகைய முறையற்ற செயலைச் செய்திருப்போமா?
8. நாங்கள் கோணிப்பைகளின் வாயில் கண்ட பணத்தைக் கூடக் கானான் நாட்டினின்று உம்மிடம் திரும்பக் கொண்டு வந்தோம் அல்லவா! அப்படியிருக்க, நாங்கள் உம் தலைவர் வீட்டில் தங்கமாவது வெள்ளியாவது திருடிக்கொண்டு போவோமா?
9. உம் அடியார்களாகிய எம்முள் எவனிடமாவது அது காணப்பட்டால் அவன் செத்தொழியட்டும்! நாங்களும் எங்கள் தலைவருக்கு அடிமைகள் ஆவோம்” என்று பதில் சொன்னார்கள். [* தொநூ 37:5-10. ]
10. அதுகேட்டு அவன், “நன்று நன்று; உங்கள் சொற்களின்படி ஆகட்டும். அது எவனிடம் அகப்படுமோ அவன் எனக்கு அடிமையாக இருப்பான்; மற்றவர்கள் குற்றமற்றவர்களாய் இருப்பீர்கள்” என்று அவர்களுக்குச் சொன்னான்.
11. அப்பொழுது அவர்கள் விரைந்து கோணிப்பைகளைத் தரையில் இறக்கிவைத்தார்கள். ஒவ்வொருவனும் தன் கோணிப்பையைத் திறந்தான்.
12. மூத்தவன் முதல் இளையவன்வரை அவன் சோதித்தபோது, அந்தக் கோப்பை பென்யமின் பையில் காணப்பட்டது.
13. அப்பொழுது அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கழுதைகளின் மேல் சுமையை ஏற்றி நகருக்குத் திரும்பி வந்தனர்.[PE]
14. [PS] அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். யூதா தம் சகோதரருடன் வந்து சேர்ந்தார். அவர்கள் அவருக்குமுன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
15. யோசேப்பு அவர்களை நோக்கி, “நீங்கள் என்ன, இப்படிச் செய்துவிட்டீர்கள்? குறிபார்ப்பதில் என்னைப் போன்றவர் எவருமிலர் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவினார்.
16. அதற்கு யூதா, “என் தலைவராகிய தங்களிடம் நாங்கள் என்ன சொல்வோம்? என்னதான் பேசுவோம்? எங்கள் மாசின்மையை எப்படி நாங்கள் எண்பிக்க முடியும்? கடவுளே உம் அடியார்களின் தீச்செயலைக் கண்டுபிடித்தார். இதோ நாங்களும், எவனிடம் கோப்பை கண்டுபிடிக்கப்பட்டதோ அவனும், தங்களுக்கு அடிமைகளாவோம்” என்று சொன்னார்.
17. அது கேட்டு யோசேப்பு, “அத்தகைய முறையற்ற செயலை நான் செய்ய மாட்டேன். கோப்பை எவனிடம் அகப்பட்டதோ அவன் மட்டும் எனக்கு அடிமையாக இருப்பான். மற்றவர்கள் உங்கள் தந்தையிடம் நலமாகச் செல்லுங்கள்” என்றார்.[PE]
18. {யூதா பென்யமினுக்காகப் பரிந்து பேசுதல்} [PS] யூதா அவர் அருகில் வந்து, “என் தலைவரே! அடியேன் ஒரு வார்த்தை கூற அனுமதி தாரும். என் தலைவரே! செவிசாய்த்தருளும். உம் அடியான் மீது சினம் கொள்ள வேண்டாம். நீர் பார்வோனுக்கு இணையானவர்.
19. என் தலைவராகிய தாங்கள் உம் பணியாளர்களாகிய எங்களிடம், “உங்களுக்குத் தந்தையோ சகோதரனோ உண்டா?” என்று கேட்டீர்கள்.
20. அதற்கு நாங்கள், “எங்களுக்கு வயது முதிர்ந்த தந்தையும், முதிர்ந்த வயதில் அவருக்குப் பிறந்த ஓர் இளைய சகோதரனும் உள்ளனர். அவனுடைய சகோதரன் இறந்துவிட்டான். அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார்” என்று தலைவராகிய தங்களுக்குச் சொன்னோம்.
21. அப்பொழுது தாங்கள், “அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்” என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
22. நாங்கள் “அந்த இளைஞன் தன் தந்தையை விட்டுப் பிரிய இயலாது; பிரிந்தால் அவர் இறந்து போவார்” என்று தலைவராகிய தங்களிடம் சொன்னோம். [* தொநூ 37:21-22.. ]
23. அதற்குத் தாங்கள் “உங்கள் இளைய சகோதரன் உங்களோடு வராவிட்டால் என் முகத்தில் விழிக்க வேண்டாம்” என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.
24. உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம்.
25. பிறகு எங்கள் தந்தை, “நீங்கள் திரும்பிப்போய் நமக்குக் கொஞ்சம் உணவுப்பொருள் வாங்கி வாருங்கள்” என்றார்.
26. நாங்கள் “எங்களால், போக இயலாது, எங்கள் இளைய சகோதரன் எங்களோடு சேர்ந்து வந்தால் மட்டுமே புறப்படுவோம். வராவிட்டால், இவன் இல்லாமல் நாங்கள் அவர் முகத்தில் விழிக்க மாட்டோம்” என்றோம்.
27. உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் “என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாளென்று உங்களுக்குத் தெரியும்.
28. ஒருவன் என்னைப் பிரிந்து வெளியே சென்றான். அவன் ஒரு கொடிய விலங்கால் பீறிக்கிழிக்கப்பட்டான் என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், இதுவரை அவனைக் காணவில்லை.
29. இப்பொழுது நீங்கள் இவனையும் என்னிடமிருந்து பிரிக்கிறீர்கள். இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாகிப் பாதாளத்திற்குள் இறங்கச்செய்வீர்கள்” என்றார்.
30. ஆகையால் உம் பணியாளராகிய என் தந்தையிடம் நான் செல்லும்போது அவர் உயிருக்கு உயிராக இருக்கும் இந்த இளைஞன் எங்களோடு இல்லையெனில்,
31. இளைஞன் இல்லையென்று கண்டு அவர் உடனே இறந்து போவார். உம் பணியாளர்களாகிய நாங்கள் நரைத்த முடியுள்ள உம் ஊழியரான எங்கள் தந்தையைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்தவர்கள் ஆவோம்.
32. எம் தந்தையிடம் இளைஞனின் பாதுகாப்புக்கு உம் அடியான் பொறுப்பேற்றிருக்கிறேன். ஏனெனில், “என் தந்தையே, அவனை நான் திரும்பக் கூட்டி வராவிட்டால், உம் முன்னிலையில் அப்பழி எந்நாளும் என்னையே சாரும்” என்றேன்.
33. ஆகையால், இப்பொழுது இளைஞனுக்குப் பதிலாய் அடியேனை உமக்கு அடிமையாக்கியருளும். இளைஞனையோ அவன் சகோதரர்களோடு சேர்ந்து போகவிடும்.
34. இளைஞன் என்னோடு இல்லாவிடில், எப்படி என் தந்தையிடம் நான் திரும்புவேன்? என் தந்தைக்கு நேரிடவிருக்கும் துன்பத்தை எப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பேன்?” என்றார்.[PE]