1. {கைதிகளின் கனவுகளும் யோசேப்பின் விளக்கங்களும்} [PS] இவை நிகழ்ந்தபின், எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர்.
2. பார்வோன் தன் மது பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் தயாரிப்போரின் தலைவனும் ஆகிய இரு அதிகாரிகள் மீதும் கடும் கோபம் கொண்டு,
3. காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில் அவர்களை அடைத்து வைத்தான். யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே.
4. காவலர் தலைவனோ, அவர்களை யோசேப்புடன் சிறையிருக்குமாறு குறித்தான். யோசேப்பும் அவர்களைக் கண்காணித்து வந்தார். அவர்கள் பல நாள்கள் சிறையில் இருந்தனர்.
5. எகிப்திய மன்னனால் சிறைப்பட்டிருந்த மது பரிமாறுவோன், அப்பம் தயாரிப்போன் இருவரும் ஒரே இரவில் கனவு கண்டனர். ஒவ்வொரு கனவும் வெவ்வேறு பொருள் கொண்டிருந்தது.
6. காலையில் யோசேப்பு அவர்களிடம் வந்தபோது அவர்கள் கவலையாய் இருக்கக் கண்டார்.
7. தம்முடன் தம் தலைவன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பார்வோனின் அதிகாரிகளை நோக்கி, அவர், “இன்று உங்கள் முகம் இவ்வளவு வாடியிருப்பதேன்?” என்று வினவினார்.
8. அவர்கள், “நாங்கள் இருவரும் கனவு கண்டோம்; அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை” என்று பதில் கூறினர். யோசேப்பு அவர்களை நோக்கி, “கனவுக்குப் பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விவரமாகச் சொல்லுங்கள்” என்றார்.[PE]
9. [PS] அப்போது மதுபரிமாறுவோர் தலைவன் தன் கனவைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்; “என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது.
10. அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன. அவை அரும்பிப் பூத்து, கொத்துக் கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன்.
11. கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது. நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன்” என்றான்.
12. யோசேப்பு அவனை நோக்கி, “கனவின் பொருள் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
13. இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான். முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய் இருந்த காலத்தில் செய்ததுபோல அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்.
14. உனக்கு வாழ்வு நலமாய் அமைந்தபின், என்னை மறவாமல் எனக்குத் தயைகாட்ட வேண்டுகிறேன். பார்வோனிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி.
15. ஏனெனில், நான் எபிரேயரின் நாட்டிலிருந்து கடத்திக்கொண்டு வரப்பட்டேன். என்னைக் காவற்கிடங்கில் தள்ளிவிடுமளவிற்கு நான் யாதொன்றும் செய்யவில்லை” என்றார்.[PE]
16. [PS] யோசேப்பு இவ்வாறு தகுந்த விளக்கம் அளித்ததைக் கண்டு, அப்பம் தயாரிப்போரின் தலைவன் அவரிடம் “நானும் ஒரு கனவு கண்டேன். இதோ மூன்று அப்பக் கூடைகள் என் தலையில் இருந்தன.
17. மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன. பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன” என்றான்.
18. அதற்கு யோசேப்பு, “கனவின் பொருள் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்.
19. இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான். பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும்” என்றார்.
20. மூன்றாம் நாள், பார்வோனின் பிறந்த நாள் விழா. அன்று தன் அலுவலர் அனைவருக்கும் அவன் விருந்து அளித்தான். அந்த அலுவலர் முன்னிலையில் மது பரிமாறுவோரின் தலைவன், அப்பம் தயாரிப்போரின் தலைவன் ஆகிய இருவரின் தலைகளையும் நிமிர்த்தினான்.
21. மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உயர்த்த, முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்.
22. ஆனால், அப்பம் தயாரிப்போரின் தலைவனைப் பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான். யோசேப்பு அவர்களுக்கு விளக்கிச் சொன்னபடியே இவ்வாறு நடந்தது.
23. ஆனால், மதுபரிமாறுவோரின் தலைவன் யோசேப்பைப் பற்றிய நினைவேயில்லாமல் அவரை மறந்து விட்டான்.[PE]