1. [PS] தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று ராகேல் தம் சகோதரியின் மேல் பொறாமை கொண்டார். அவர் தம் கணவனை நோக்கி, “நீர் எனக்குப் பிள்ளைகளைத் தாரும். இல்லையேல் செத்துப் போவேன்” என்றார்.
2. யாக்கோபு அவர் மீது சினம் கொண்டு, “நான் என்ன கடவுளா? அவரல்லவா உனக்குத் தாய்மைப் பேறு தராதிருக்கிறார்” என்றார்.
3. அப்பொழுது ராகேல் “இதோ என் பணிப்பெண் பில்கா. நீர் அவளோடு கூடி வாழ்வீர். அவள் எனக்காக பிள்ளை பெற்று என் மடியில் வைக்க, நானும் அவள் மூலம் பிள்ளைப் பேறு பெறுவேன்” என்றார்.
4. பின்பு, அவர் அவருக்குத் தம் பணிப்பெண் பில்காவை மனைவியாகக் கொடுக்க, அவரும் அவளுடன் கூடி வாழ்ந்தார்.
5. பில்கா கருவுற்று யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
6. ராகேல், ‘ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி, என் மன்றாட்டைக் கேட்டருளி, எனக்கு ஒரு மகனைத் தந்தார்’ என்று சொல்லி அவனுக்குத் ‘தாண்’* என்னும் பெயரிட்டார்.
7. பில்கா மீண்டும் கருவுற்று மற்றொரு மகனைப் பெற்றாள். [* (5) எபிரேயத்தில், ‘நீதி வழங்கினார்’ என்பது பொருள் ]
8. ராகேல் ‘நான் என் சகோதரியோடு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றிகொண்டேன்’ என்று கூறி அவனுக்கு ‘நப்தலி’* என்று பெயரிட்டார்.
9. லேயா தமக்குப் பிள்ளைப்பேறு நின்றுவிட்டதென்று கண்டு, தம் பணிப்பெண் சில்பாவை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தார். [* (6) எபிரேயத்தில், ‘போராடினேன்’ என்பது பொருள் ]
10. லேயாவின் பணிப்பெண் சில்பா யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
11. லேயா, ‘நான் நற்பேறு பெற்றுள்ளேன்’ என்று சொல்லி அவனுக்குக் ‘காத்து’* என்று பெயரிட்டார்.
12. லேயாவின் பணிப்பெண் சில்பா மீண்டும் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். [* (7) எபிரேயத்தில், ‘நற்பேறு’ என்பது பொருள் ]
13. லேயா ‘எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி! பெண்டிர் என்னை மகிழ்ச்சி பெற்றவள் என்பர்’ என்று சொல்லி, அவனுக்கு ‘ஆசேர்’* என்று பெயரிட்டார்.[PE]
14. [PS] கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல்வெளியில் தூதாயிம் கனிகளைக் கண்டு, அவற்றைத் தன்தாய் லேயாவிடம் கொண்டுவந்து கொடுத்தான். ராகேல் அவரிடம், உன் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளில் எனக்கும் கொஞ்சம் கொடு என்று கேட்டார். [* (8) எபிரேயத்தில், ‘மகிழ்ச்சி’ என்பது பொருள் ]
15. அதற்கு அவர், “என் கணவனை நீ பறித்துக் கொண்டது போதாதா? என் மகன் கொண்டு வந்த கனிகளையும் பறித்துக் கொள்வாயோ?” என்றார். அப்பொழுது ராகேல், “சரி, உன் மகன் கொண்டு வந்த தூதாயிம் கனிகளுக்குப் பதிலாக அவர் இன்றிரவு உன்னோடு கூடியிருக்கட்டும்” என்றார்.
16. மாலை வேளையில் யாக்கோபு வயல் வெளியினின்று திரும்பி வரும்போதே, லேயா அவருக்கு எதிர்கொண்டுபோய், “நீர் என்னோடு கூடியிருக்க வேண்டும். ஏனெனில், என் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து உம்மை நான் வாங்கிக்கொண்டேன்” என்றார். அவர் அன்றிரவு அவரோடு கூடியிருந்தார்.
17. கடவுள் லேயாவுக்குச் செவிசாய்த்தார். அவர் கருத்தாங்கி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தார்.
18. ‘நான் என் பணிப்பெண்ணை என் கணவருக்குக் கொடுத்ததற்காகக் கடவுள் எனக்கு ஈடுசெய்துள்ளார்’ என்று சொல்லி அவனுக்கு ‘இசக்கார்’* என்று பெயரிட்டார்.
19. மீண்டும் லேயா கருத்தாங்கி ஆறாம் மகனைப் பெற்றெடுத்தார். [* (9) எபிரேயத்தில், ‘ஈடு’ என்பது பொருள் ]
20. லேயா ‘கடவுள் எனக்கு ஒரு சிறந்த கொடை கொடுத்துள்ளார். இனிமேல் என் கணவர் என்னைப் பெருமையாக நடத்துவார். ஏனெனில், நான் அவருக்கு ஆறு புதல்வரைப் பெற்றிருக்கிறேன்’ என்று கூறி அவனுக்குச் ‘செபுலோன்’* என்று பெயரிட்டார்.
21. பிறகு, அவர் ஒரு பெண்மகவைப் பெற்று, அவளுக்குத் ‘தீனா’ என்று பெயரிட்டார். [* (10) எபிரேயத்தில், ‘பெருமை’ என்பது பொருள் ] [PE]
22. [PS] பின்பு, கடவுள் ராகேலை நினைவுகூர்ந்தார். அவர் அவருக்குச் செவிசாய்த்துத் தாய்மைப்பேறு அருளினார்.
23. அவரும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்து ‘கடவுள் என் இழிவைப் போக்கினார்’ என்றார்.
24. மேலும், அவர் ‘ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக’ என்று கூறி, அவனுக்கு ‘யோசேப்பு’* என்று பெயரிட்டார்.[PE]
25. {யாக்கோபின் உடைமைகள்} [PS] ராகேல் யோசேப்பைப் பெற்றெடுத்த பின் யாக்கோபு லாபானை நோக்கி, “என் சொந்த இடத்திற்கும் நாட்டிற்கும் திரும்பிப்போக என்னை அனுப்பி வைப்பீராக! [* (11) எபிரேயத்தில், ‘சேர்த்துத் தருகிறார்’ என்பது பொருள். ]
26. என் மனைவியரையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தந்து என்னைப் போகவிடும். அவர்களுக்காக நான் உம்மிடம் வேலை செய்துள்ளேன். நான் உமக்குச் செய்துள்ள வேலை இன்னதென்று உமக்குத் தெரியும்” என்றார்.
27. லாபான் அவரை நோக்கி, “உமக்குத் தடையேதும் இல்லையெனில் தயவுகூர்ந்து இங்கேயே தங்கிவிடும். ‘உம் பொருட்டு ஆண்டவர் எனக்கு ஆசி வழங்கியிருக்கிறார்’ என்பதைக் குறிபார்த்து அறிந்து கொண்டேன்.
28. உமக்குரிய கூலியைக் குறிப்பிடும். நான் அதைக் கொடுத்து விடுகிறேன்” என்றான்.
29. அதற்கு அவர், “நான் உம்மிடம் எவ்வளவு வேலை செய்துள்ளேன் என்பதையும் உம் மந்தை என்னிடம் எப்படி இருந்தது என்பதையும் நீர் அறிவீர்.
30. நான் உம்மிடம் வருமுன் உமக்கிருந்தது கொஞ்சமே; இப்பொழுதோ மிகுதியாகப் பெருகிவிட்டது. நான் கால்வைக்கும் இடமெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்கியிருக்கிறார். என் குடும்பத்திற்காக நான் உழைப்பது எப்போது?” என்றார்.
31. அதற்கு லாபான், “நான் உமக்கு என்ன தரவேண்டும்?” என, யாக்கோபு “எனக்கு நீர் ஒன்றும் தர வேண்டியதில்லை. இந்த ஒன்றை மட்டும் நீர் எனக்குச் செய்தால், நான் தொடர்ந்து உம் மந்தையை மேய்த்துப் பாதுகாப்பேன்.
32. உம் மந்தைகளூடே இன்று நான் செல்வேன். அவற்றினின்று கலப்பு நிறமோ புள்ளியோ உடைய செம்மறியாடுகளையும் கறுப்பு நிறம் கொண்ட ஆட்டுக் குட்டிகள் அனைத்தையும் புள்ளியோ கலப்பு நிறமோ உடைய வெள்ளாடுகளையும் தனியாகப் பிரித்துக் கொள்வேன். இவை எனக்குரிய கூலியாக இருக்கட்டும்.
33. எனக்குரிய பங்கைச் சரிபார்க்க நீர் வரும்போது என் நேர்மை எனக்குச் சான்று பகர்வதாக! கலப்பு நிறமோ புள்ளியோ இல்லாத வெள்ளாட்டையோ, கறுப்பு நிறமற்ற ஆட்டுக் குட்டியையோ நீர் கண்டால், அது திருடப்பட்டதாக எண்ணப்படும்” என்றார்.
34. அதற்கு லாபான், “நீர் சொன்னபடியே ஆகட்டும்” என்றான்.
35. ஆனால் அன்றே அவன் வரியோ புள்ளியோ உடைய வெள்ளாட்டுக் கிடாய்களையும், கலப்பு நிறமோ புள்ளியோ உடைய வெள்ளாடுகள் அனைத்தையும் வெள்ளைப் புள்ளி கொண்ட எல்லாவற்றையும், கறுப்பாய் இருந்த எல்லா ஆட்டுக்குட்டிகளையும் பிரித்துத் தம் புதல்வரிடம் ஒப்படைத்து,
36. தனக்கும் மீதமுள்ள தன் மந்தைகளை மேய்த்துவந்த யாக்கோபுக்கும் இடையில் மூன்று நாள் வழித்தூரம் இருக்கும்படியும் செய்துவிட்டான்.[PE]
37. [PS] அது கண்ட யாக்கோபு புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் பசிய கொப்புகளை வெட்டி, அவற்றில் இடையிடையே உள்தண்டின் வெள்ளைப்பகுதி தெரியுமாறு உரித்தார்.
38. மேலும், தம் மந்தைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, ஆடுகள் அந்த வரியுள்ள கொப்புகளை எதிரில் கண்டு பொலிந்து சினைப்படும் பொருட்டு, நீர்த்தொட்டிகளில் அவற்றை அவர் போட்டு வைத்தார்.
39. பொலியும் நேரத்தில் அக்கொப்புகளைக் கண்டு பொலிந்த ஆடுகள் வரியோ, கலப்பு நிறமோ, புள்ளியோ உடைய குட்டிகளை ஈன்றன.
40. மேலும், யாக்கோபு ஆட்டுக்குட்டிகளைப் பிரித்தெடுத்தார். லாபானின் மந்தைகளில் வரியோ கறுப்பு நிறமோ உடைய ஆடுகளை நோக்கி மந்தையை நிற்கச் செய்தார். தமக்குரிய மந்தைகளை லாபானின் மந்தையோடு சேராமல் பிரித்து வைத்தார்.
41. மந்தையின் வலிமையுள்ள ஆடுகள் பொலியும்போது, மந்தைக்கு எதிரேயிருந்த நீர்த்தொட்டியில் அக்கொப்புகளைப் போட்டார்; அக்கொப்புகளிடையே அவை பொலிந்தன.
42. வலிமையற்ற ஆடுகளுக்குமுன் கொப்புகளைப் போடவில்லை. எனவே, லாபானின் ஆடுகள் வலுவற்றவையாகவும் யாக்கோபின் ஆடுகள் வலுவுள்ளவையாகவும் ஆயின.
43. இவ்வாறு, யாக்கோபு பெரும் செல்வரானார். மந்தைகள், வேலைக்காரர், வேலைக்காரிகள், ஒட்டகங்கள், கழுதைகள் ஆகியவற்றை அவர் பெருமளவில் கொண்டிருந்தார்.[PE]