1. {ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை} [PS] இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.”
2. அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்!
3. நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.
4. அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
5. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.
6. ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். [* உரோ 4:18; எபி 11:12 ] [PE]
7. [PS] ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். [* உரோ 4:3; கலா 3:6; யாக் 2:23 ]
8. அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?” என்றார்.
9. ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார்.
10. ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால், பறவைகளை அவர் வெட்டவில்லை.
11. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.[PE]
12. [PS] கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.
13. ஆண்டவர் ஆபிராமிடம், “நீ உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியது: உன் வழிமரபினர் வேறொரு நாட்டிற்குப் பிழைக்கச் செல்வர். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர். [* யோபு 4:13,14 ]
14. அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டிற்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் மிகுந்த செல்வங்களுடன் அந்நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுவர். [* திப 7:7 ]
15. நீ மிகவும் முதிர்ந்த வயதில் அமைதியாக உன் மூதாதையரிடம் சென்றபின், நல்லடக்கம் செய்யப்படுவாய்.
16. நான்காம் தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர். ஏனெனில், எமோரியர் இழைக்கும் தீமை இன்னும் முழுமை அடையவில்லை” என்றார்.[PE]
17. [PS] கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
18. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள
19. கேனியர், கெனிசியர், கத்மோனியர், [* திப 7:5. ]
20. இத்தியர், பெரிசியர், இரபாவியர்
21. எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.[PE]