1. {ஆபிராம், லோத்து பிரிதல்} [PS] ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.
2. அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.
3. நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இடையே முதலில் தம் கூடாரம் இருந்த அதே இடத்தை அடைந்தார்.
4. தாம் முதலில் பலிபீடம் அமைத்திருந்த இடத்தை அடைந்து அங்கே அவர் ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.
5. ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன.
6. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
7. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
8. ஆபிராம் லோத்தை நோக்கி, “எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்படவேண்டாம். ஏனெனில், நாம் உறவினர்.
9. நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்” என்றார்.
10. லோத்து கண்களை உயர்த்தி எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறிருந்தது. [* தொநூ 2:10. ]
11. லோத்து யோர்தான் சுற்றுப்பகுதி முழுவதையும் தேர்ந்துகொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர்.
12. ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்துவந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக்கொண்டார்.
13. ஆனால், சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக்கொடிய பாவிகளாக இருந்தனர்.[PE]
14. {ஆபிராம் எபிரோனில் குடியேறல்} [PS] லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்.
15. ஏனெனில், நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப்போகிறேன். [* திப 7:5.. ]
16. உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே, பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம்.
17. நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில், இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.
18. ஆகவே, ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனிலிருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.[PE]