1. {சிலைவழிபாட்டிற்கு எதிரான ஆண்டவரின் கண்டனம்} [PS] ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
2. மானிடா! நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக இறைவாக்கு உரைத்திடு.
3. நீ சொல்லவேண்டியது: “இஸ்ரயேல் மலைகளே! தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் மலை இடுக்குகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நானே உங்கள்மேல் வாளை வரச்செய்து உங்கள் தொழுகைமேடுகளை அழிப்பேன்.
4. உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட, உங்கள் தூபபீடங்கள் தகர்க்கப்படும். உங்களுள் கொலையுண்டோரை உங்கள் சிலைகளின்முன் விட்டெறிவேன்.
5. இஸ்ரயேல் மக்களின் பிணங்களை அவர்களுடைய சிலைகளின்முன் போடுவேன். உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எறும்புகளைச் சிதறச் செய்வேன்.
6. நீங்கள் வாழும் எல்லா இடங்களிலும் நகர்கள் அழிக்கப்படும்; தொழுகை மேடுகள் சிதைக்கப்படும். இதனால் உங்கள் பலிபீடங்கள் இடிக்கப்பட்டுப் பாழாக்கப்படும். உங்கள் சிலைகள் உடைத்து நொறுக்கப்படும். உங்கள் தூப பீடங்கள் தகர்க்கப்படும். உங்கள் கைவேலைப்பாடுகள் அழித்தொழிக்கப்படும்.
7. கொலையுண்டோரும் உங்கள் நடுவில் வீழ்ந்து கிடப்பர். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
8. ஆயினும், நீங்கள் நாடுகளுக்குள்ளே சிதறடிக்கப்படும்போது, வாளுக்குத் தப்பும் சிலரை எஞ்சியோராக நான் வேற்றினங்களிடையே விட்டுவைப்பேன்.
9. இவ்வாறு, வேற்றினங்களிடையே சிறைப்படுத்தப்பட்டு உயிர் தப்புவோர் என்னை நினைவு கூர்வர். ஏனெனில் என்னை விட்டு விலகி விபசாரம் செய்த தங்கள் இதயத்தையும், சிலைகள் மீது காமுற்ற தங்கள் கண்களையும் குறித்து தங்களையே நொந்து கொள்ளச் செய்வேன். அவர்கள் தங்கள் அருவருப்பான எல்லாச் செயல்களுக்காகவும், எல்லாக் கேடுகளுக்காகவும் தங்களைத் தாங்களே வெறுப்பர்.
10. அப்போது, நானே ஆண்டவர் என்றும் ‘இக்கேட்டை அவர்களுக்கு வருவிப்பேன்’ என நான் பொய்யாகச் சொல்லவில்லை என்றும் அவர்கள் அறிவார்கள்.” [* புல 4:10. ]
11. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீ கையடித்துக் காலை உதறிச் சொல்: ஐயோ கேடு! இஸ்ரயேல் வீட்டாரின் எல்லாத் தீய அருவருப்புகளுக்காகவும் அவர்கள் வாளாலும் வறட்சியாலும் கொள்ளை நோயாலும் மடிவர்.
12. தொலைவில் இருப்போர் கொள்ளை நோயால் மடிவர்; அருகில் இருப்போர் வாளால் வீழ்வர். மீந்திருந்து முற்றுகையிடப்படுவோரோ வறட்சியால் சாவர். இவ்வாறு அவர்கள்மேல் என் சீற்றத்தைத் தணித்துக்கொள்வேன்.
13. ஒவ்வோர் உயர்ந்த குன்றிலும் எல்லா மலையுச்சிகளிலும், ஒவ்வொரு பசு மரத்தடியிலும், தழைத்து நிற்கும் எல்லாக் கருங்காலி மரங்களடியிலும், எங்கெங்கு அவர்கள் தங்கள் சிலைகளுக்கெல்லாம் நறுமணத் தூபம் காட்டினரோ அங்கெல்லாம் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றி அவர்களுடைய சிலைகளோடு அவர்களுள் கொலையுண்டோரும் கிடக்கும்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
14. நான் அவர்கள்மீது என் கையை ஓங்கிப் பாலைநிலம் முதல் திப்லாவரை அவர்கள் குடியிருக்கும் எல்லா இடங்களையும் அழித்துப் பாழாக்குவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.[PE]