1. {மோசேயின் பிறப்பு} [PS] இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.
2. அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.
3. இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள். [* திப 7:20; எபி 11:23 ]
4. அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.[PE]
5. [PS] அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது.
6. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். “இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று” என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,
7. “உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள்.
8. பார்வோனின் மகள் அவளை நோக்கி, “சரி. சென்று வா” என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
9. பார்வோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்” என்றாள். எனவே, குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.
10. குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். ‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி அவள் அவனுக்கு ‘மோசே’* என்று பெயரிட்டாள்.[PE]
11. {மோசே மிதியானுக்குத் தப்பியோடல்} [PS] அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்; மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்; [* திப 7:21 ]
12. சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார். [* எபி 11:24; திப 7:23-28 ]
13. அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி “உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். [* திப 7:23-28 ]
14. அதற்கு அவன், “எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?” என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்; “நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே” என்று சொல்லிக் கொண்டார்! [* திப 7:23-28 ]
15. இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான்.[PE][PS] எனவே, மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று. [* திப 7:23-28 ]
16. அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர். [* திப 7:29; எபி 11:27 ]
17. அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.
18. அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், “என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?” என்றார்.
19. அவர்கள், “எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்; ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள்.
20. அவர் தம் புதல்வியரிடம், “எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்” என்று கூறினார்.
21. அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.
22. அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். ‘நான் வேற்று நாட்டில் அந்நியனாய் உள்ளேன்’ என்று கூறி மோசே அவனைக் ‘கேர்சோம்’ என்று பெயரிட்டழைத்தார்.[PE]
23. [PS] இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான். இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று.
24. அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார். ஆபிரகாமுடனும், ஈசாக்குடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25. கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார். [* தொநூ 15:13-14 ] [PE]