2. பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக!
|
4. அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! அவர்தம் வழிகள் அனைத்தும் நீதியானவை! வஞ்சகம் அற்ற உண்மைமிகு இறைவன்! அவரே நீதியும் நேர்மையும் உள்ளவர்!
|
5. அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள் அவரிடம் பொய்ம்மையாய் நடந்துகொண்டனர்; அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம் மிக்க தலைமுறையினர்!
|
6. ஞானமற்ற, மதிகெட்ட மக்களே! ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும் கைம்மாறு இதுதானா? உங்களைப் படைத்து, உருவாக்கி, நிலை நிறுத்திய உங்கள் தந்தை அவரல்லவா?
|
7. பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பலதலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப்பார்! உன் தந்தையிடம் கேள்; அவர் உனக்கு அறிவிப்பார்; பெரியோரிடம் கேள்; அவர்கள் உனக்குச்சொல்வர்.
|
8. உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார்.
|
10. பாழ்வெளியில் அவர் அவனை கண்டார்; வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்; அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்; கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.
|
11. கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படர்ந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்,
|
13. பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்; வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்; கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்; கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான்.
|
14. பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்.
|
15. ஆனால் கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது; எசுரூன் கொழுத்துப் பருத்து முரடனானான்; தனைப்படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்; தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான்.
|
17. இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்; அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர்.
|
20. அவர் உரைத்தார்; எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.
|
21. இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்.
|
22. எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்; கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்; பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்; மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும்.
|
24. பசியினால் அவர்கள் வாடுவர்; கொள்ளை நோயால் மாய்வர்; கொடிய வாதைகளால் மடிவர்; விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்; புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர்.
|
25. வெளியிலே வாள்; உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர்.
|
26. நான் சொன்னேன்; அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்; அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
|
27. ஆயினும், "எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!" என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன்.
|
30. ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறையை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ?
|
32. அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்; கொமோராவின் வயல்வெளியிலிருந்து வருவதாகும்; அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்; அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை.
|
35. பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன; உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்; அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
|
36. அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்; அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்.
|
38. அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்களது உனது புகலிடம் ஆகட்டுமே!
|
39. நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே; உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே; குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார்.
|
41. மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன்.
|
42. கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்; என் வாள் சதையை உண்ணச் செய்வேன்.
|
43. வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்; அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்; அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.
|
44. மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எழுத்துரைத்தார்கள்.
|
46. உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
|
47. இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
|
49. மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே.
|
50. உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய்.
|
51. ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை.
|
52. எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.
|