1. {கடவுளின் கட்டளைகள் கற்களில் எழுதப்படல்} [PS] மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.
2. நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள். [* யோசு 8:30-32. ]
3. உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள். [* யோசு 8:30-32. ]
4. நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள். [* யோசு 8:30-32. ]
5. அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். அவற்றின்மீது இரும்புக்கருவிபடவேண்டாம். [* யோசு 8:30-32. ; விப 20:25. ]
6. கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள். [* யோசு 8:30-32. ; விப 20:25. ]
7. நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள். [* யோசு 8:30-32. ]
8. மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள். [* யோசு 8:30-32. ]
9. பின்னர், மோசே லேவியக் குருக்களோடு சேர்ந்து இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் சொன்னதாவது: ‘இஸ்ரயேலே, கவனமாகக் கேள். நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவரின் மக்களினம் ஆகியுள்ளாய்.
10. எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நிறைவேற்று’.[PE]
11. {கீழ்ப்படியாமைக்குச் சாபங்கள்} [PS] மோசே அன்று மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:
12. நீங்கள் யோர்தானைக் கடந்தபின், மக்களுக்கு ஆசிவழங்குமாறு, சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமின் ஆகியோர் கெரிசிம் மலைமீது நிற்கட்டும். [* இச 11:29; யோசு 8:33-35. ]
13. மக்களுக்குச் சாபம் வழங்குமாறு, ரூபன், காத்து, ஆசேர், செபுலோன், தாண், நப்தலி ஆகியோர் ஏபால் மலைமீது நிற்கட்டும்.
14. லேவியர் இஸ்ரயேலர் அனைவருக்கும் உரத்த குரலில் கூறவேண்டியது:
15. ‘ஆண்டவருக்கு அருவருப்பானதும், சிற்பியின் கைவினைப் பொருள்களுமான வார்ப்புச் சிலையையோ செதுக்குச் சிலையையோ செய்து அதை மறைவான இடத்தில் வைப்பவர் சபிக்கப்படட்டும்’. உடனே மக்கள் அனைவரும் பதில் மொழியாக ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* விப 20:4; 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 5:8. ]
16. ‘தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும். உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* விப 20:12; இச 5:16. ]
17. ‘தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* இச 19:4; 27:18; லேவி 19:14. ]
18. ‘பார்வையற்றவரை வழிதவறச் செய்பவர் சபிக்கப்படட்டும்’. உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
19. ‘அந்நியருக்கும், அநாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* விப 22:21; 23:9; லேவி 19:33-34; இச 24:17-18; 27:20; லேவி 18:8; 20:11; இச 22:30. ]
20. ‘தன் தந்தையின் மனைவியோடு கூடுகிறவன் தன் தந்தைக்கு உரியவளின் உடையைத் திறந்ததனால் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
21. ‘எந்தவொரு விலங்கோடும் புணர்கிறவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* விப 22:19; லேவி 18:23; 20:15. ]
22. ‘தன் தந்தையின் புதல்வி அல்லது தன் தாயின் புதல்வியாகிய தன் சகோதரியுடன் கூடுகிறவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* லேவி 18:9; 20:17. ]
23. ‘தன் மனைவியின் தாயோடு கூடுபவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* லேவி 18:17; 20:14. ]
24. ‘தமக்கு அடுத்திருப்பவரை ஒளிந்திருந்து கொல்பவன் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
25. ‘குற்றமற்றவரைக் கொல்வதற்காகக் கையூட்டு வாங்குபவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர்.
26. ‘இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்’; உடனே மக்கள் அனைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்பர். [* கலா 3:10.. ] [PE]