1. {போரைப் பற்றிய விதிமுறைகள்} [PS] நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார்.
2. நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் கூற வேண்டியது;
3. ‘இஸ்ரயேலே கேள்! இன்று நீங்கள் உங்கள் பகைவர்களுக்கு எதிராகப் போர்புரிய முன்வந்துள்ளீர்கள். உங்கள் இதயம் சோர்ந்து போக வேண்டாம்; அஞ்ச வேண்டாம்; கலங்க வேண்டாம்; அவர்களைப் பார்த்துத் தத்தளிக்கவும் வேண்டாம்.
4. ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார்.
5. அதன்பின், படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: ‘புது வீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதை அர்ப்பணம் செய்ய வேண்டியிருக்கும்.
6. திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
7. ஒரு பெண்ணை மண உறுதிப்பாடு செய்தும் அவளோடு கூடி வாழாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். அவன் போரில் இறக்க நேரிட்டால் வேறு ஒருவன் அவளை மணக்க வேண்டியிருக்கும்.’
8. மீண்டும் படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: ‘உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும். இல்லையெனில், அவன் தோழனும் அவனைப்போல் ஊக்கம் இழந்து விடுவான்.’
9. இவ்வாறு, படைத்தலைவர்கள் வீரர்களிடம் பேசி முடித்தபின், அவர்களை நடத்திச் செல்லும் படைத்தளபதிகளை நியமிக்கட்டும்.
10. ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய்.
11. அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லாரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர்.
12. அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு.
13. கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு.
14. ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள். உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம். [* இச 27:17. ]
15. இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய். [* எண் 35:30; இச 17:6; மத் 18:16; யோவா 19:31; 2 கொரி 13:1; 1 திமொ 5:19; எபி 10:18. ]
16. ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே.
17. இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்.
18. அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள்.
19. ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே. நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம். ஆனால், அவற்றை வெட்டலாகாது. வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே!
20. உணவுக்கு உதவாத மரங்கள் என்று உனக்குத் தெரிபவற்றை மட்டும் வெட்டி அழிக்கலாம். உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும்வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம்.[PE]