1. ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
|
2. கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெரிந்தால்,
|
3. நான் கட்டளையிட்டதற்கு எதிராக, வேற்றுத் தெய்வங்கள் அல்லது நிலா, கதிரவன் அல்லது வேறு யாதொரு வான் கோளங்களைப் பின்சென்று, பணிந்து வணங்கினால்
|
4. அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி. அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால்,
|
5. அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்குக் கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.
|
6. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும். ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது.
|
7. முதலில் சாட்சிகளின் கைகளும் பின்னர் எல்லா மக்களின் கைகளும் கொல்லப்பட வேண்டியவனுக்கு எதிராக ஓங்கட்டும். இவ்வாறு உன்நடுவிலிருந்து தீமையை அகற்றுவாய்.
|
8. இரத்தப் பழிகளைக் குறித்தோ, உரிமை வழக்குகளைக் குறித்தோ, தடியடியைக் குறித்தோ தீர்ப்புக் கூறுவது கடினமாய் இருந்தால் அல்லது உன் நகரிலுள்ள வேறு எந்த வழக்கும் சிக்கலானதாக இருந்தால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்.
|
9. அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள். நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள்.
|
10. ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திலிருந்து அவர்கள் உனக்குத் தெரிவிப்பதன்படி நட. அவர்கள் கற்பித்தபடி எல்லாம் செயல்படுவதில் கருத்தாயிரு.
|
11. அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு. அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே.
|
12. கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிய அங்கே நிற்கும் குருக்களுக்கோ நீதிபதிகளுக்கோ செவிகொடாமல் செருக்குடன் செயல்படுகிறவன் சாகவேண்டும். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்றுவாய்.
|
14. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்" என்று நீ சொல்வாய்.
|
15. அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.
|
16. அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும். ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார்.
|
17. அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது; வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது.
|
18. அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும்.
|
19. அதைத் தன்னோடு வைத்துக்கொள்ளட்டும். அதை நாள்தோறும் அவன் வாழ்நாள் முழுவதும் வாசிக்கட்டும். அதனால், அந்தச் சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், அதன் நீதிமுறைகளையும் நிறைவேற்றுதவன் மூலம் அவன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வான்.
|
20. அதனால், அவன் இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான்;. அப்போது அவனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேலில் நெடுநாள் ஆட்சி புரிவர்.
|