2. அப்பொழுது அகசியா சமாரியாவில் தன் மேல் மாடியிலிருந்து பலகணி வழியாய்க் கீழே விழுந்து காயமுற்றான். எனவே அவன் தூதரிடம், "நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் சென்று, 'இக்காயம் எனக்குக் குணமாகுமா?' என்று கேட்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினான்.
|
3. ஆனால் ஆண்டவரின் தூதர் திஸ்பேயைச் சார்ந்த எலியாவிடம், "நீ புறப்பட்டுச் சமாரிய அரசனின் தூதரைச் சந்தித்து அவர்களிடம், 'இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் நீங்கள் குறிகேட்கப்போகிறீர்கள்? எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;
|
4. நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்" என்றார். அவ்வாறே எலியா புறப்பட்டுப் போனார்.
|
6. அதற்கு அவர்கள் மறுமொழியாக, "வழியில் ஓர் ஆள் எங்களைச் சந்தித்து, 'நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய், ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் குறிகேட்க ஆள் அனுப்புகிறாய்? நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப் போவாய்; இது உறுதி! என்று சொல்லுங்கள்' என்றார் "என்று கூறினர்.
|
7. அவன் அவர்களிடம், "உங்களைச் சந்திக்க வந்து உங்களிடம் இவற்றை அறிவித்த ஆள் எப்படி இருந்தான்?" என்று கேட்டான்.
|
8. அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, "அவர் மயிரடர்ந்த மனிதர்; இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்" என்றனர். அப்பொழுது அவன், "அந்த ஆள் திஸ்பேயைச் சார்ந்த எலியாதான்!" என்றான்.
|
9. உடனே அரசன் ஐம்பதின்மர் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அவரிடம் அனுப்பினான். தலைவனும் சென்று, ஒரு மலையின் உச்சியில் அமர்ந்திருந்த எலியாவைக் கண்டு அவரிடம், "கடவுளின் அடியவரே! கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!" என்றான்.
|
10. எலியா ஐம்பதின்மர் தலைவனுக்கு மறுமொழியாக, "நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கும்!" என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கி வந்து அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
|
11. அகசியா மீண்டும் வேறொரு தலைவனை அவனுடைய வீரரோடு அனுப்பினான். அத்தலைவனும் மேலேறிச் சென்று எலியாவிடம், "கடவுளின் அடியவரே! விரைவாய் கீழே இறங்கி வாரும்; இது அரச கட்டளை!" என்றான்.
|
12. எலியா மறுமொழியாக, "நான் உண்மையாகவே கடவுளின் அடியவனாய் இருந்தால், வானினின்று நெருப்பு இறங்கி வந்து உன்னையும் உன்னோடு இருக்கும் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கட்டும்!" என்றார். உடனே வானினின்று நெருப்பு இறங்கிவந்து, அவனையும் அவனோடிருந்த ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
|
13. அகசியா மூன்றாம் முறையாகத் தலைவன் ஒருவனை அவனுடைய ஐம்பது வீரரோடு அனுப்பினான். மூன்றாம் தலைவனும் மேலேறிச் சென்று, எலியாவின் முன் முழந்தாளிட்டு, "கடவுளின் அடியவரே! என் உயிரையும், உம் அடியாராகிய இந்த ஐம்பதின்மர் உயிரையும் காத்தருளும்!
|
14. வானினின்று நெருப்பு இறங்கி வந்து, முன்னைய ஐம்பதின்மர் தலைவர் இருவரையும் அவரவருடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்து விட்டது. எனவே, இப்பொழுது என் உயிரைக் காத்தருளும்!" என்று மன்றாடினான்.
|
15. அப்பொழுது ஆண்டவரின் தூதர் எலியாவிடம், "அவனோடு இறங்கிச் செல். அவனுக்கு அஞ்ச வேண்டாம்" என்றார். எனவே எலியா எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிச் சென்றார்.
|
16. அவர் அரசனை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே; இறை உளத்தைத் தெரிந்துகொள்ள இஸ்ரயேலுக்குக் கடவுள் இல்லை என்றா, நீ எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூபிடம் தூதரை அனுப்பினாய்? எனவே நீ கிடக்கும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாய்; அங்கேயே செத்துப்போவாய்; இது உறுதி!" என்றார்.
|
17. எனவே எலியா வாயிலாக அறிவிக்கப்பட்ட ஆண்டவரது வாக்கிற்கேற்ப, அகசியா இறந்தான். அவனுக்குப் புதல்வர் இல்லாமையால், அவனுக்குப் பின் யோராம் அரசன் ஆனான். இது யூதா அரசன் யோசபாத்தின் மகன் யோராமின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது.
|
18. அகசியாவின் ஆட்சியைப் பற்றிய பிற செய்திகளும், அவனுடைய பிற செயல்களும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
|