1. {அசீரியரின் அச்சுறுத்தல்[BR](2 அர 18:13-37; 19:14-19, 35-37; எசா 36:1-22; 37:8-38)} [PS] இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிற்கு எதிராகப் படையெடுத்து அரண்சூழ் நகர்களைக் கைப்பற்றுமாறு, அவற்றினை முற்றுகையிட்டான்.
2. சனகெரிபு எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்திருப்பதை எசேக்கியா கண்டபோது,
3. நகருக்கு வெளியே இருந்த நீருற்றுகளை அடைப்பது பற்றித் தம் தலைவர்களோடும் வலிமை மிகு வீரர்களோடும் கலந்தாய்ந்தார்; அவர்களும் அதனை ஆதரித்தனர்.
4. “அசீரிய மன்னர்கள் வந்து இவ்வளவு தண்ணீரை ஏன் காண வேண்டும்?” என்று கூறி, மக்களில் பலர் ஒன்றுதிரண்டு நாட்டின் எல்லா நீருற்றுகளையும் ஓடைகளையும் அடைத்து விட்டனர்.
5. அவர் பெருமுயற்சி செய்து, இடிந்துபோன மதில்களை மீண்டும் கட்டி, அவற்றில் காவல் மாடங்களை எழுப்பினார்; தாவீது நகரில் மில்லோ என்ற கோட்டையை வலுப்படுத்தினார்; அத்துடன் திரளான படைக்கலன்களையும் கேடயங்களையும் தயாரித்தார்.
6. பின்பு, படைத்தலைவர்களை மக்களின் தளபதிகளாக நியமித்து, அவர்களை நகர்வாயிலின் திறந்த முற்றத்தில் ஒன்று திரட்டினார். பின்பு, அவர்களை நோக்கி,
7. “மனவலிமையுடன் இருங்கள்; அஞ்சாதீர்கள்; அசீரிய மன்னனையும் அவனது பெரும் படையையும் கண்டு நீங்கள் கலக்கமுற வேண்டாம்; ஏனெனில், அவனுக்கு இருப்பதைவிட நம்மிடமே பெரியபடையுள்ளது!
8. அவனது படைக்கலன் வெறும் மனித புயமே! ஆனால், நமக்கு உதவி புரியவும் நம்முடன் போர் புரியவும் நம் கடவுளாம் ஆண்டவரே நம்மோடு இருக்கிறார்” என்று அவர்களது மனத்தைத் தொடும் அளவுக்குப் பேசினார். அரசர் எசேக்கியாவின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் மிகுந்த ஊக்கம் அடைந்தனர்.[PE]
9. [PS] இதன்பின், அசீரிய மன்னன் சனகெரிபு இலாக்கிசில் தனது முழுப்படையுடன் முற்றுகையிட்டுக் கொண்டு, யூதா அரசன் எசேக்கியாவிடமும் அங்கு வாழ்ந்த யூதா மக்கள் எல்லாரிடமும் தன் அலுவலர்களை அனுப்பினான்.
10. அவர்கள், “அசீரிய மன்னன் சனகெரிபு சொல்வது இதுவே: முற்றுகைக்குட்பட்ட எருசலேமில் நீங்கள் எதை நம்பித் தங்கியிருக்கிறீர்கள்?
11. ‘தம் கடவுளாம் ஆண்டவர் அசீரிய மன்னனிடமிருந்து நம்மை விடுவிப்பார்’ என்று சொல்லி, பசியாலும், தாகத்தாலும் நீங்கள் மடியுமாறு எசேக்கியா உங்களை வழிதவறி நடத்துகிறான் அன்றோ?
12. அவர்தம் தொழுகைமேடுகள், பலிபீடங்கள் அத்தனையும் தகர்த்து விட்டு, ஒரே பலிபீடத்தில் வழிபடவும் தூபமிடவும் வேண்டும் என்று யூதாவுக்கும் எருசலேமுக்கும் கட்டளையிட்டது இந்த எசேக்கியா அன்றோ?
13. மற்ற நாட்டு மக்கள் எல்லாருக்கும் நானும் என் மூதாதையர்களும் செய்ததை நீங்கள் அறியீரோ?
14. என் மூதாதையர் முற்றிலுமாய் அழித்த அந்த நாடுகளின் தெய்வங்களில் ஏதேனும் ஒன்றால், தன்னை வழிபட்டுவந்த ஒருவனை எனது கையிலிருந்து காப்பாற்ற முடிந்ததா? அதே போன்று, உங்கள் கடவுளாலும் உங்களை என்னிடமிருந்து விடுவிக்க இயலாது.
15. ஆதலால், எசேக்கியா இப்படி உங்களை ஏமாற்றவோ வஞ்சிக்கவோ விடாதீர்! அவனை நம்பவேண்டாம்! ஏனெனில், என்னிடமிருந்தோ என் மூதாதையாரிடமிருந்தோ, எந்த நாட்டையும் அரசையும் சார்ந்த தெய்வமும் தன் மக்களைக் காப்பாற்றியதில்லை” என்று கூறினர்.[PE]
16. [PS] அவன் அலுவலர் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர் தம் அடியார் எசேக்கியாவுக்கும் எதிராக இன்னும் அதிகமாகப் பேசினர்.
17. மேலும் சனகெரிபு, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகப் பழிப்புரை மடல்களை எழுதினான். அதில் ஆண்டவருக்கு எதிராக, “மற்ற நாடுகளின் தெய்வங்களால் தங்கள் மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற இயலவில்லை; அதேபோன்று எசேக்கியாவின் கடவுளும் தன் மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
18. சனகெரிபின் அலுவலர்கள் மதில்களின்மேல் இருந்த எருசலேம் மக்களை அச்சுறுத்தி, கலக்கமுறச் செய்து, நகரத்தைக் கைப்பற்றுமாறு அவன் வார்த்தைகளை யூதாவின் மொழியில் உரக்கக் கத்தினர்.
19. அவர்கள் மனித கைகளினால் உருவாக்கப்பட்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த மக்களின் தெய்வங்களைப்பற்றி இழிவாகப் பேசியதுபோன்று, எருசலேமின் கடவுளுக்கு எதிராகவும் பேசினர்.[PE]
20. [PS] இதைக்குறித்து அரசர் எசேக்கியாவும் ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயாவும் மன்றாடி, விண்ணை நோக்கிக் கூக்குரலிட்டனர்.
21. அப்பொழுது, ஆண்டவர் ஒரு வானதூதரை அனுப்பி, அசீரிய மன்னனின் பாசறையிலிருந்த ஆற்றல்மிகு வீரர் அனைவரையும் அலுவலர்களையும் படைத் தலைவர்களையும் கொன்றழித்தார். அதனால், அசீரிய மன்னன் அவமானப்பட்டுத் தனது நாட்டுக்குத் திரும்பினான். அங்கே அவன் தனது தெய்வத்தின் கோவிலுக்குள் நுழைந்தபோது, அவன் சொந்தப் புதல்வரே அவனை வாளால் வெட்டி வீழ்த்தினர்.[PE]
22. [PS] இவ்வாறு, அசீரிய மன்னன் சனகெரிபிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் ஆண்டவர் எசேக்கியாவும் எருசலேம் மக்களையும் காப்பாற்றி, *அவர்களுக்கு எப்பக்கமும் பாதுகாப்பு அளித்தார்.* [* ‘அவர்களை எப்பக்கமும் வழிநடத்தினார்’ என்பது எபிரேய பாடம்.. ]
23. பலர் ஆண்டவருக்காக எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் அரசர் எசேக்கயாவுக்கு விலைமதிப்பற்ற அன்பளிப்புகளையும் கொண்டு வந்தனர். இதன்பிறகு அவர் எல்லா நாடுகளின் பார்வையில் உயர்ந்தவராக விளங்கினார்.[PE]
24. {எசேக்கியாவின் நோயும் ஆணவமும்[BR](2 அர 20:1-3, 12-19; எசா 38:1-3; 39:1-8)} [PS] எசேக்கியா நோயுற்று இறக்கும் நிலையில் இருந்தார். அப்பொழுது அவர் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவரும் அவருக்குச் செவிசாய்த்து ஓர் அடையாளத்தை அளித்தார்.
25. ஆனால், எசேக்கியா தமக்கு அளிக்கப்பட்ட அருளுதவிக்கேற்ப நடக்கவில்லை. அவர் மனம் செருக்குற்றது. இதனால், அவர்மீதும், யூதா, எருசலேம் மீதும் ஆண்டவர் சினமுற்றார்.
26. ஆயினும், தமது மனத்தின் செருக்கிற்காக, எசேக்கியாவும் அவருடன் எருசலேம் மக்களும் மனம் வருந்தினர். எனவே, எசேக்கியாவின் காலத்தில் ஆண்டவரின் சினம் அவர்கள் மேல் விழவில்லை.[PE]
27. {எசேக்கியாவின் செல்வம்} [PS] எசேக்கியா மிகுந்த செல்வமும் மதிப்பும் பெற்றிருந்தார். வெள்ளி, பொன், விலைமதிப்பற்ற கற்கள், நறுமணவகைகள், பலவித போர்க்கருவிகள், விலையேறப்பெற்ற கலன்கள் ஆகிய மிகுதியான செல்வத்தைக் கொண்டிருந்தார்.
28. மேலும், அவர் மிகுந்து வரும் தானியம், புதிய திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துவைக்கக் கிடங்குகளையும், கால்நடைகளுக்குத் தொழுவங்களையும், ஆடுகளுக்குப் பட்டிகளையும் அமைத்திருந்தார்.
29. கடவுள் அவருக்கு நிறைவான ஆசி வழங்கியிருந்ததால், அவர் பல நகர்களையும், ஏராளமான கால்நடைகளையும் செல்வமாகக் கொண்டிருந்தார்.
30. எசேக்கியா கீகோன் ஆற்றின் மேற்புறத்தில் அணைகட்டி, தாவீது நகரின் மேற்குப் பகுதியின் கீழே திருப்பிவிட்டார். எசேக்கியா தம் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கண்டார்.
31. நாட்டில் நடக்கும் வியப்புக்குரிய நிகழ்ச்சிகள் பற்றி அறிந்து கொள்ளப் பாபிலோன் அதிகாரிகளிடமிருந்து தூதர்கள் வந்தனர். அப்போது எசேக்கியாவின் மனத்தைச் சோதிக்கக் கடவுள் அவரைக் கைவிட்டு விட்டார்.[PE]
32. {எசேக்கியாவின் இறப்பு[BR](2 அர 20:20-21)} [PS] எசேக்கியாவின் பிற செயல்களும் அவர்தம் பக்திச் செயல்கள் யாவும் ஆமோட்சு மகனான இறைவாக்கினர் எசாயா எழுதிய காட்சிகளிலும், யூதா, இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.
33. எசேக்கியா தம் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் புதல்வருக்குரிய கல்லறைகளில் உயர்ந்த ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்தபோது, யூதா, எருசலேம் மக்கள் எல்லாரும் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்தனர். அவருக்குப்பின் அவர்தம் மகன் மனாசே அரசனானான்.[PE]