1. இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாட ஆண்டவரின் இல்லத்திற்கு வருமாறு இஸ்ரயேல், யூதா மக்கள் அனைவருக்கும் ஆள்மூலமும் எப்ராயிம், மனாசே குலத்தாருக்கு மடல் மூலமும் எசேக்கியா அழைப்பு விடுத்தார்.
|
2. பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதாக அரசரும், எல்லாத் தலைவர்களும், எருசலேமின் மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்.
|
3. குறிப்பிட்ட காலத்தில் கொண்டாட இயலாததற்குக் காரணம், போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை; மக்களும் எருசலேமில் வந்து கூடவில்லை.
|
5. எருசலேமில் இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாடப் பெயேர்செபாமுதல் தாண்வரை இருந்த இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கும் ஓர் அறிவிப்பை அனுப்ப முடிவு செய்தனர்; ஏனெனில், எழுதியுள்ளபடி மக்கள் பெரும் தொகையினராய் அதனைக் கொண்டாடவில்லை.
|
6. அரசரிடமிருந்தும் தலைவர்களிடமிருந்தும் மடல்களைப் பெற்றுக்கொண்ட அஞ்சலர், அரச கட்டளைப்படி, இஸ்ரயேல், யூதா நாடெங்கும் சென்று, "இஸ்ரயேல் மக்களே! ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அப்பொழுது அசீரிய மன்னனின் கைக்குத் தப்பிய எஞ்சியோராகிய உங்களிடம் அவர் மீண்டும் வருவார்.
|
7. தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகத் தீமையானதையே செய்த உங்கள் தந்தையர், சகோதரர்கள் போன்று நீங்கள் இருக்க வேண்டாம்; நீங்களே காண்பதுபோல், அவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார்.
|
8. உங்கள் மூதாதையரைப் போல் நீங்களும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவராயிருக்க வேண்டாம். மாறாக, ஆண்டவருக்குப் பணியுங்கள், அவர் என்றென்றும் புனிதமாக்கியுள்ள திருத்தலத்திற்கு வந்து, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கு ஊழியம் புரியுங்கள். அப்பொழுது அவரது கோபக்கனல் உங்களை விட்டு நீங்கும்.
|
9. நீங்கள் ஆண்டவரிடம் திரும்பி வந்தால், உங்கள் சகோதரர்களும் புதல்வர்களும் தங்களைச் சிறைப்படுத்தியோரிடமிருந்து இரக்கம் பெற்று, இந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஏனெனில் உங்கள் கடவுளாம் ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்; நீங்கள் அவர்பால் திரும்பினால் அவர் தம் முகத்தை உங்களிடமிருந்து திருப்பிக்கொள்ளார்" என்றனர்.
|
10. அஞ்சலர், எப்ராயிம், மனாசே நாடுகளிலும் செபுலோனிலும்கூட நகர் நகராகச் சென்றனர். ஆனால் அவற்றின் மக்கள் இவர்களை எள்ளி நகையாடினர்.
|
11. ஆயினும், ஆசேர், மனாசே செபுலோன் ஆகியவற்றிலிருந்து சிலர் தம்மையே தாழ்த்திக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர்.
|
12. ஆண்டவரின் வாக்கிற்கு ஏற்பவும், அரசர், தலைவர்களின் கட்டளைப்படியும் யூதாவினர் நடப்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் அவர்களை ஒருமனப்படுத்தியது.
|
13. இரண்டாம் மாதத்தில் புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாட எருசலேமில் மக்கள் சபையார் மாபெரும் அளவில் கூடினர்.
|
14. அவர்கள் எருசலேமில் இருந்த பலிபீடங்கள், தூபபீடங்கள் எல்லாவற்றையும் தகர்த்து, கிதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தனர்.
|
15. இரண்டாம் மாதத்தின் பதினான்காம் நாள் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினர்; குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தவராய், தங்களையே தூய்மையாக்கிக் கொண்டனர். பின்னர், ஆண்டவரின் இல்லத்திற்கு எரிபலியைக் கொண்டு வந்தனர்.
|
16. கடவுளின் மனிதராம் மோசேயின் திருச்சட்டப்படி, அவர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றனர். லேவியர் கையினின்று பெற்ற இரத்தத்தை குருக்கள் தெளித்தனர்.
|
17. சபையிலிருந்த பலர் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, லேவியர் பாஸ்காப் பலியை அதனை புனிதப்படுத்த இயலாத தீட்டுடையோர் சார்பாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.
|
18. இருப்பினும், மக்கள் பலர்-எப்ராயிம், மனாசே, இசக்கார், செபுலோன் குலத்தார் பலர்-தங்களையே தூய்மையாக்கிக் கொள்ளாமல், எழுதியுள்ளதற்கு மாறாக, பாஸ்காவை உண்டனர். எனவே எசேக்கியா வேண்டியது; "நல்லவரான ஆண்டவரே! மன்னித்தருளும்.
|
19. தன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைத் தேட மனம் கொண்ட ஒவ்வொருவனையும்-அவன் திருத்தலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே தூய்மையாக்கிக் கொள்ளவில்லையெனினும்-மன்னித்தருளும்."
|
21. எருசலேமில் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏழு நாள்கள் கொண்டாடினர். ஆண்டவரை லேவியர் நாள்தோறும் புகழ்ந்தனர்; குருக்கள் பேரொலி இசைக்கருவிகளை மீட்டிப் போற்றினர்.
|
22. ஆண்டவரின் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட லேவியர் அனைவரின் உள்ளத்தையும் தொடுமாறு எசேக்கியா பேசினார். விழா உணவை அவர்கள் ஏழு நாள் உண்டு நல்லுறவுப் பலிகளைச் செலுத்தி, அவர்களின் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் புகழ்ந்து போற்றினர்.
|
23. மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாட, மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்; அவ்வாறே அவர்கள் அக்களிப்புடன் மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாடினர்.
|
24. யூதாவின் அரசர் எசேக்கியா மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், எழுபதாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தார், அவ்வாறே தலைவர்களும் மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தனர். குருக்கள் பலர் தங்களையே தூய்மையாக்கிக்கொண்டனர்.
|
25. யூதாவின் அனைத்துச் சபையார். குருக்கள், லேவியர், இஸ்ரயேலின் அனைத்து மக்கள் சபையார் இஸ்ரயேலிலிருந்து வந்தவரும் யூதாவில் வாழ்ந்தவருமான அன்னியர் அனைவரும் அக்களிப்புற்றனர்.
|
26. எருசலேமில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனெனில், இஸ்ரயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் எருசலேமில் இப்படி நடந்ததே இல்லை.
|
27. குருக்களும் லேவியரும் எழுந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அவர்களது மன்றாட்டு கேட்கப்பட்டது. கடவுளின் திருஉறைவிடமான வானத்தை அவர்களது வேண்டுதல் எட்டியது.
|