1. {சாலமோன் திருக்கோவிலைக் கட்டுதல்} [PS] பின்பு, சாலமோன் எருசலேமில் அவர் தந்தை தாவீதுக்கு ஆண்டவர் தோன்றிய மோரியா மலைமேல் எபூசியராகிய ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஒர் இல்லம் எழுப்பத் தொடங்கினார். இந்த இடத்தைத் தாவீது ஏற்கெனவே தயார் செய்திருந்தார். [* தொநூ 22:2. ]
2. தம் ஆட்சியின் நான்காம் ஆண்டு, இரண்டாம் மாதம், இரண்டாம் நாள் சாலமோன் வேலை தொடங்கினார்.
3. கடவுளின் இல்லத்தைக் கட்டுமாறு சாலமோன் இட்ட அடித்தளம், அக்கால அளவின்படி, அறுபது முழ நீளமும் இருபது முழ அகலமும் கொண்டதாயிருந்தது.
4. முகப்பில் இருந்த மண்டபம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமும் கொண்டதாய் இருந்தது. சாலமோன் அதன் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினார்.
5. கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், பேரீச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன.
6. கோவில் தளத்தை விலை உயர்ந்த கற்களால் அழகுபடுத்தினார்; பர்வாயிமினின்று கொண்டு வரப்பெற்ற பொன்னே பயன்படுத்தப்பட்டது.
7. கோவிலின் உத்திரங்கள், நிலைகள், சுவர்கள், கதவுகள் ஆகியவற்றைப் பொன் தகடுகளால் மூடினார்; சுவர்களில் கெருபுகளைப் பதித்தார்.
8. பிறகு,கோவிலின் திருத்தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழம். அதை ஏறக்குறைய இருபத்திநான்கு 'டன்'* நிறையுள்ள பொன் தகடுகளால் மூடினார். [* விப 26:33-34. ; ‘அறுநூறு தாலந்து’ என்பது எபிரேய பாடம். ]
9. ஆணிகள் அறுநூற்று எழுபது கிராம்* நிறையுள்ள பொன்னால் ஆனவை. மேல் அறைகளையும் அவர் பொன்னால் மூடினார். [* ‘ஐம்பது செக்கேல்’ என்பது எபிரேய பாடம். ] [PE]
10. [PS] திருத்தூயகத்தில் இரு கெருபுகளின் உருவங்களைச் செய்துவைத்துப் பொன் தகட்டால் மூடினார்.* [* விப 25:18-20. ; ‘மூடினார்’ என்பது எபிரேய பாடம். ]
11. அவற்றின் இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம்; அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அது கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையின் நீளமும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது. [* விப 25:18-20. ]
12. அவ்வாறே, இரண்டாவது கெருபின் அளவும்; அதாவது ஓர் இறக்கையின் நீளம் ஐந்து முழம். அவ்விறக்கை கோவிலின் சுவரைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் மறு இறக்கையும் ஐந்து முழமே. அது மற்றக் கெருபின் இறக்கையைத் தொட்டுக் கொண்டிருந்தது. [* விப 25:18-20. ]
13. இவ்வாறு அகன்று விரிந்திருந்த அந்த கெருபுகளுடைய இறக்கைகளின் மொத்த நீளம் இருபது முழம். அவை தம் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்தன. அவை கோவிலின் மையப் பகுதியை நோக்கியவண்ணமாய் இருந்தன. [* விப 25:18-20. ]
14. சாலமோன், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மெல்லிய சணல் ஆகிய நூல்களினால் ஒரு திரையை நெய்யச் செய்தார். அதில் கெருபுகளின் உருவங்கள் பின்னப்பெற்றிருந்தன. [* விப 26:31. ] [PE]
15. [PS] கோவிலுக்கு முன்பாக முப்பத்தைந்து முழம் உயரமான இரண்டு தூண்களைச் செய்தார். அவற்றின் உச்சியில் இருந்த போதிகைகளின் உயரம் ஐந்து முழம்.
16. கழுத்தணி போன்ற சங்கிலிகளைச் செய்து, தூண்களின் போதிகைகளின்மேல் பொருத்தி வைத்தார். மேலும், வெண்கலத்தால் நூறு மாதுளம் பழங்களைச் செய்து அவற்றைச் சங்கிலிகளில் தொங்க விட்டார்.
17. அந்தத் தூண்களைக் கோவில் முன்பாக வலப்பக்கத்திலும் இடப்பக்கதிலுமாக நாட்டினார். வலப்பக்கத் தூணுக்கு ‘யாக்கீன்’* என்றும், இடப்பக்கத் தூணுக்குப் ‘போவாசு’** என்றும் பெயரிட்டார். [* * எபிரேயத்தில், ‘ஆண்டவர் நிலைநாட்டுகிறார்’ என்பது பொருள். ; ** எபிரேயத்தில், ‘(ஆண்டவரின்) ஆற்றலால்’ என்பது பொருள்.. ] [PE]