1. {யூதாவின் அரசன் அகசியா[BR](2 அர 8:25-29; 9:21-28)} [PS] எருசலேம் வாழ் மக்கள் யோராமுக்குப் பதிலாக அவனுடைய இளையமகன் அகசியாவை அரசனாக்கினார்கள். ஏனெனில், அரேபியருடன் பாளையத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கூட்டத்தினர் மூத்த பிள்ளைகள் அனைவரையும் கொன்றுவிட்டனர். இவ்வாறு, யூதாவின் அரசன் யோராமின் மகன் அகசியா ஆட்சியேற்றான்.
2. அவன் ஆட்சியேற்றபோது அவனுக்கு வயது நாற்பத்திரண்டு. ஒரே ஆண்டுதான் அவன் எருசலேமில் ஆட்சி செய்தான். ஓம்ரியின் மகளான அத்தலியா என்பவளே அவன் தாய்.
3. அவனும், ஆகாபு வீட்டாரின் வழிமுறைகளைப் பின்பற்றினான். அவன் தீயவழியில் நடப்பதற்கு அவன் தாயின் கெடுமதியே காரணம்.
4. ஆகவே, அவன் ஆகாபின் வீட்டாரைப்போல் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தான். ஏனெனில், அவன் தந்தை இறந்தபின் அந்தக் குடும்பத்தாரே அவனுக்கு ஆலோசகராக இருந்தனர்.
5. அகசியா, அவர்களுடைய ஆலோசனையின்படி நடந்து, ஆகாபின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோராமுடன் சேர்ந்து கொண்டு, சிரியா மன்னன் அசாவேலுக்கு எதிராக இராமோத்தில் போர் தொடுத்தான். அங்கே சிரியர் யோராமைத் தாக்கினர்.
6. சிரியா அரசன் அசாவேலுடன் இராமாவில்* போரிட்டபோது தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்திக்கொள்ள யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பினான். ஆகாபின் மகன் யோராம் நோயுற்றிருந்ததைக் காண்பதற்காக யூதாவின் அரசனும் யோராமின் மகனுமான அகசியா இஸ்ரயேலுக்குச் சென்றான். [* ‘இராமோத்து’ என்பது மறுபெயர். ]
7. அகசியா யோராமைப் பார்க்கச் சென்றது கடவுளின் திருவுளப்படி அவனது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. எப்படியெனில், அவன் இஸ்ரயேலுக்கு வந்ததும், யோராமுடன் நிம்சியின் மகன் ஏகூவிடம் சென்றான். ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்காகக் கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இந்த ஏகூ.
8. ஏகூ ஆகாபின் குடும்பத்தார்க்குரிய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அகசியாவிடம் பணியாற்றிய யூதாவின் தலைவர்களையும், அகசியாவுடைய சகோதரரின் பிள்ளைகளையும், அவன் அலுவலர்களையும் கண்டு அவர்களைக் கொன்றொழித்தான்.
9. பின்னர், அவன் அகசியாவைத் தேடினான். சமாரியாவில் ஒளிந்திருக்கும்போது அகசியா பிடிப்பட்டான்; உடனே ஏகூவிடம் அவனை அழைத்து வர, ஏகூ அவனையும் கொன்றான். ‘இவன்ஆண்டவரை முழு இதயத்தோடு நாடிய யோசபாத்தின் மகன்’ என்பதனால் அவர்கள் அவனை அடக்கம் செய்தனர். இதனால் அரசுப் பொறுப்பை ஏற்க அவன் குடும்பத்தில் யாருமே இல்லை.[PE]
10. {யூதாவின் அரசி அத்தலியா[BR](2 அர 11:1-3)} [PS] அகசியாவின் தாய் அத்தலியா தன் மகன் இறந்ததை அறிந்ததும், கொதித்தெழுந்து யூதா வீட்டு அரச வழிமரபினர் அனைவரையும் கொன்றழித்தாள்.
11. ஆனால், அரசனின் மகள் யோசபியாத்து,* கொல்லப்படவிருந்த அரச புதல்வர்களுள் அகசியாவின் மகன் யோவாசைத் தூக்கிக் கொண்டுபோய் அவனையும் அவன் செவிலித் தாயையும் படுக்கையறையில் மறைத்து வைத்தாள். இந்த யோசபியாத்து, அரசன் யோராமின் மகளும் தலைமைக் குரு யோயாதாவின் மனைவியும் அகசியாவின் சகோதரியும் ஆவாள். அவள் யோவாசை அத்தலியாவிடமிருந்து மறைத்ததால் அவளால் அவனைக் கொல்ல இயலவில்லை. [* ‘சேபா’ என்பது மறுபெயர்.. ]
12. நாட்டை அத்தலியா ஆட்சி செய்த ஆறு ஆண்டளவும் அரசனின் மகன் அவர்களோடு கடவுளின் இல்லத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.[PE]