1. {யூதாவின் அரசன் யோவகாசு[BR](2 அர 23:30-35)} [PS] பின்னர், நாட்டுமக்கள் யோசியாவின் மகனான யோவகாசை அவருக்குப் பதிலாக எருசலேமில் அரசனாக்கினர்.
2. யோவகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபத்து மூன்று; அவன் எருசலேமில் மூன்றே மாதங்கள் ஆட்சி செய்தான்.
3. எகிப்திய மன்னன் அவனை எருசலேமில் பதவியிலிருந்து நீக்கியபின், நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், நாற்பது கிலோகிராம் பொன்னும் கப்பமாகச் செலுத்துமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
4. எகிப்திய மன்னன் யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம் என்று பெயர்மாற்றம் செய்து, அவனை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான்; பின்பு நெக்கோ, யோவகாசை எகிப்துக்கு இட்டுச் சென்றான். [* எரே 22:11-12. ] [PE]
5. {யூதாவின் அரசன் யோயாக்கிம்[BR](2 அர 23:36-24:7)} [PS] யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான். [* எரே 22:18-19; 26:1-6; 35:1-19. ]
6. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான். [* எரே 25:1-38; 36:1-32; 45:1-5; தானி 1:1-2. ]
7. அத்துடன், ஆண்டவரின் இல்லத்துப் பாத்திரங்கள் சிலவற்றை நெபுகத்னேசர் பாபிலோனுக்கு எடுத்துச் சென்று, அங்கேயுள்ள தனது அரண்மனையில் வைத்துக் கொண்டான்.
8. யோயாக்கீமின் பிற செயல்களும், அவன் செய்த அருவருப்பானவையும், அவனுக்கு எதிராய்க் காணப்பட்டவை யாவும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அவனுக்குப்பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.[PE]
9. {யூதாவின் அரசர் யோயாக்கின்[BR](2 அர 24:8-17)} [PS] யோயாக்கின் அரசனானபோது அவனுக்கு வயது எட்டு; எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
10. ஆதலால், அவ்வாண்டின் இறுதியில் மன்னன் நெபுகத்னேசர் தனதுபடையை அனுப்பி, கைதியான அவனையும் அவனுடன் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த விலையுயர்ந்த பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்தான்; பின்பு, அவன் சிற்றப்பன் செதேக்கியாவை அவனுக்குப்பதில் யூதா, எருசலேமுக்கு அரசனாக்கினான். [* எரே 22:24-30; 24:1-10; 29:1-2; 37:1; எசே 17:12,13. ] [PE]
11. {யூதாவின் அரசன் செதேக்கியா} [PS] செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். [* எரே 27:1-22; 28:1-17. ]
12. அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்; ஆண்டவர் பெயரால் பேசிய இறைவாக்கினர் எரேமியா முன் தன்னையே தாழ்த்திக் கொள்ளவில்லை.[PE]
13. {எருசலேமின் வீழ்ச்சி[BR](2 அர 25:1-21; எரே 52:3-11)} [PS] கட்டுப்பட்டிருப்பதாகக் கடவுளின் பெயரால் தன்னை ஆணையிடச் செய்த மக்கள் நெபுகத்னேசருக்கு எதிராக இவன் கலகம் செய்து, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றாமல் இறுமாப்புற்று, தனது இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். [* எசே 17:15. ]
14. அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர்.
15. அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார்.
16. ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது.[PE]
17. [PS] ஆதலால், அவர் அவர்களுக்கு எதிராக கல்தேயரின் மன்னனைப் படையெடுத்து வரச் செய்தார். அவன் அவர்களின் திருஉறைவிடமாகிய ஆண்டவரின் இல்லத்தில் அவர்களின் இளம் வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தினான்; இளைஞர் கன்னியர் என்றோ, முதியோர் இளைஞர் என்றோ, எவர்மேலும் இரக்கம் காட்டாமல், எல்லாரையும் அவன் கையில் ஆண்டவர் ஒப்புவித்தார். [* எரே 21:1-10; 34:1-5.. ]
18. கடவுளின் இல்லத்து எல்லாச் சிறிய, பெரிய பாத்திரங்களையும், அதன் கருவூலங்களையும் அரசனிடமும் அவன் அதிகாரிகளிடமும் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
19. கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர்.
20. மேலும், அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.
21. “நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்” என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின.[PE]
22. {யூதர்கள் எருசலேமிற்குத் திரும்புமாறு சைரசு கட்டளையிடல்[BR](எஸ்ரா 1:1-4)} [PS] பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே, அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்:[PE]
23. [PS] “பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும், யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!”[PE]