1. {உடன்படிக்கைப் பேழை கைப்பற்றப்பட்டது} [PS] அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்த்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார். பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர்.
2. பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுக்குள் நாலாயிரம் பேரைப் போர்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.
3. வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பிய போது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: “இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்.”
4. ஆகவே, வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி கெருபுகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டு வரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்புனியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர்.[PE]
5. [PS] ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர். [* விப 25:22 ]
6. இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், “எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?” என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டனர்.
7. அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு; “கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை!
8. நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வாதைகளால் துன்புறுத்தியவர்!
9. பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!” என்றனர்.[PE]
10. [PS] பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்கு தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர்.
11. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர்.[PE]
12. {ஏலியின் இறப்பு} [PS] போர்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன; தலையோ புழுதிபடிந்திருந்தன.
13. அவன் வந்தபோது ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில், கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம் மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது,
14. அழுகையின் குரல் கேட்ட ஏலி, “ஏன் இந்தக் கூக்குரல்?” என்று வினவ அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.
15. அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததினால் அவரால் பார்க்க முடியவில்லை.[PE]
16. [PS] அம்மனிதன் ஏலியை நோக்கி, “நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன்” என்று சொல்ல, அதற்கு ஏலி, “மகனே! செய்தி என்ன?” என்று வினவினார்.
17. அதற்கு அத்தூதன், “இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும், மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றப்பட்டுவிட்டது” என்று சொன்னான்.
18. கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இறந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.[PE]
19. {பினகாசு மனைவியின் இறப்பு} [PS] அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.
20. அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, “அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய்” என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை; அதைப் பொருட்படுத்தவுமில்லை.
21. கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு 'இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது' என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு ‘இக்க போது’* என்று பெயரிட்டாள்.
22. அவள் கூறியது: “இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில், கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது” என்றாள்.[PE]