1. {தாவீதுக்கு யோனத்தானின் உதவி} [PS] பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, “நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறார்?” என்று கேட்டார்.
2. அதற்கு அவர், “ஒருகாலும் இல்லை. நீ சாக மாட்டாய். இதோ என்னொடு கலந்தாலோசிக்காமல் என் தந்தை பெரிதோ சிறிதோ எதுவும் செய்யமாட்டார். இச்செயலை மட்டும் என் தந்தை மறைப்பானேன்? அப்படி நடக்காது” என்றார்.
3. அதற்குத் தாவீது, “உன் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்துள்ளது என்று உன் தந்தைக்கு நன்கு தெரியும். ஆகையால், ‘யோனத்தான் இதை அறிய நேர்ந்தால் அவன் வேதனையடைவான்’ என்று அவர் நினைக்கிறார். ஆனால், இது உண்மை; எனக்கும் சாவுக்கும் ஓர் அடி தூரந்தான் உள்ளது. வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உன் மேலும் ஆணை!” என்றார்.
4. அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “உன் விருப்பப்படி நான் உனக்கு எதுவும் செய்யத் தயார்” என்றார்.[PE]
5. [PS] தாவீது யோனத்தானை நோக்கி, “இதோ! நாளை அமாவாசை; அரசரோடு நான் பந்தியிலிருக்கும் நாள். ஆனால், மூன்றாம் நாள் மாலைவரை வெளியில் சென்று ஒளிந்திருக்க எனக்கு விடை கொடு.
6. உன் தந்தை என்னைக் காணாது பற்றி விசாரித்தால் ‘தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்; அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அங்கே ஆண்டுப் பலி இருக்கிறதாம்! அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான்’ என்று சொல். [* எண் 28:11 ]
7. அவர் ‘நல்லது’ என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்; அவர் சினமுற்றால் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என அறிந்துகொள்வாய்.
8. ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பொருட்டு என் மேல் இரக்கம் வை. நான் குற்றவாளியாயின் நீயே என்னைக் கொன்று விடு. நீ ஏன் என்னை உன் தந்தையிடம் கொண்டுபோக வேண்டும்?” என்றார்.[PE]
9. [PS] அதற்கு யோனத்தான், “அப்படி உனக்கு நேராது உனக்குத் தீங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் அதை உனக்கு சொல்லாமல் இருப்பேனா?” என்றார்.
10. பின்பு, தாவீது யோனத்தானை நோக்கி, “உன் தந்தை உன்னிடம் கடுமையான பதிலளித்தால் அதை யார் எனக்குத் தெரிவிப்பார்” என்று கேட்டார்.
11. அதற்கு யோனத்தான் தாவீதிடம், “வெளியில் செல்வோம் வா!” என்றார். இருவரும் வயல்வெளிக்குச் சென்றனர்.[PE]
12. [PS] யோனாத்தான் தாவீதை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக! நாளை இதே நேரத்தில் அல்லது மூன்றாம் நாளில் என் தந்தையின் கருத்தை அறிவேன்; அது தாவீதுக்கு சாதகமாய் இருந்ததால் உனக்கு அதைத் தெரிவிக்க ஆளனுப்பமாட்டேனா?
13. ஆனால், என் தந்தை உனக்கு தீங்கு செய்ய விரும்பியுள்ளதை அறிந்து, அதை நான் உனக்கு வெளிப்படுத்தி உன்னைப் பாதுகாப்புடன் அனுப்பிவைக்காவிடில் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக! ஆண்டவர் என் தந்தையுடன் இருந்தது போல் உன்னோடும் இருப்பாராக!
14. நான் தொடர்ந்து உயிருடன் இருந்தால், நான் சாகாதவாறு ஆண்டவரின் பொருட்டு என்மேல் இரக்கம் வை.
15. ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும் போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை.
16. ஆண்டவர் தாவீதின் எதிரிகளுக்குத் தகுந்த பதிலளிப்பாராக” என்று கூறி யோனத்தான் தாவீதின் வீட்டாருடன் உடன்படிக்கை செய்தார். [* 2 சாமு 9:1. ] [PE]
17. [PS] தாவீதின் மீது கொண்டுள்ள அன்பின் பெயரால் யோனத்தான் மீண்டும் அவருக்கு ஆணையிட்டுக் கூறினார். ஏனெனில், அவர் தாவீதின மீது தம் உயிரென அன்புக் கொண்டிருந்தார்.
18. பின்பு, யோனத்தான், “நாளை அமாவாசை; உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு உன்னைப்பற்றி விசாரிப்பர்.
19. மூன்றாம் நாள் உன்னைக் கண்டிப்பாக தேடுவர். ஆதலால், நீ முன்பு ஒளிந்திருக்கும் இடத்திற்கே போ; அங்கே ஏசேல் கல் அருகே ஒளிந்துக் கொண்டிரு.
20. நான் குறி வைத்து அம்பு எய்வது போல் அப்பக்கம் நோக்கி மூன்று அம்புகளை எய்வேன்.
21. பின்பு, ‘போய் அம்புகளைத் தேடிவா’ என்று ஒரு பையனை அனுப்புவேன். நான் அவனிடம் ‘இதோ அம்புகள் உனக்கு இப்பக்கம் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு வா’, என்பேனாகில் நீ என்னிடம் வா. ஏனெனில், வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உனக்குப் பாதுகாப்பு உண்டு. ஆபத்து நேராது.
22. மாறாக, ‘இதோ அம்புகள் உனக்கு அப்பக்கம் கிடக்கின்றன’ என்று அந்தப் பையனிடம் சொல்வேனாகில் நீ ஓடி விடு; ஏனெனில், ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.
23. நீயும் நானும் பேசியவற்றிற்கும் உனக்கும் எனக்கும் ஆண்டவரே என்றென்றும் சாட்சியாக இருப்பார்” என்றார்.[PE]
24. [PS] ஆதலால், அவ்வாறே தாவீது வயல் வெளியில் ஒளிந்து கொண்டார். அமாவாசை நாள் வந்தபோது உணவருந்த அரசர் அமர்ந்தார்.
25. அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம் போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால், தாவீதின் இருக்கை காலியாயிருந்தது.
26. இருப்பினும், ‘அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும்’ என்று நினைத்து சவுல் அன்று ஏதும் சொல்லவில்லை.
27. ஆனால், அமாவாசைக்கு அடுத்த நாளும் தாவீதின் இருக்கை காலியாக இருந்தது. அப்பொழுது சவுல் யோனத்தனை நோக்கி, “ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் உணவருந்த வராதது ஏன்?” என்று கேட்டார்.[PE]
28. [PS] யோனத்தான் சவுலிடம், “தான் பெத்தலேகம் செல்ல வேண்டுமென்று அவன் வருந்திக் கேட்டுக் கொண்டான்.
29. ‘நான் செல்ல விடைக்கொடு; ஊரில் என் குடும்பத்தார் பலி செலுத்துகிறார்கள். மேலும், நான் அங்கிருக்க வேண்டுமென்று என் சகோதரரும் எனக்கு கட்டளையிட்டுள்ளார். ஆதலால், உன் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்தால் என் சகோதரர்களைக் காண என்னைப் போகவிடு’ என்றான். இக்காரணத்தினால் தான் அவன் அரசபந்திக்கு வரவில்லை” என்று பதிலளித்தார்.[PE]
30. [PS] அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, “பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ. உனக்கும் உன் மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்பு கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ?
31. ஈசாயின் மகன் உயிரோடு வாழும் நாள்வரை நீயும் நிலைத்திருக்கமாட்டாய்; உன் ஆட்சியும் நிலைபெறாது; ஆதலால், ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டுவா; அவன் சாகவே வேண்டும்” என்றார்.
32. அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், “அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான்” என்று கேட்டார்.
33. ஆனால், சவுல் அவரைக் குத்தி வீழ்த்த எண்ணி அவரை நோக்கி தம் ஈட்டியை எறிந்தார்; ஆதலால், தாவீதைக் கொன்றுவிட தம் தந்தை முடிவு செய்துவிட்டார் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டார்.
34. உடனே யோனத்தான் வெஞ்சினமுற்று பந்தியைவிட்டு எழுந்துவிட்டார். அமாவாசையின் மறுநாளாகிய அன்று அவர் உணவு அருந்தவில்லை. ஏனெனில், தாவீதைத் தம் தந்தை இழிவுப்படுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.[PE]
35. [PS] அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதைச் சந்திக்குமாறு ஒரு பையனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார்.
36. அவர் அப்பையனிடம், “நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா” என்றார். அப்பபையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார்.
37. யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு “உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது?” என்றார்.
38. மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு, “நிற்காதே, விரைந்து செல்” என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக் கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான்.
39. யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே அதன் பொருள் தெரியும்; ஆனால், அப்பையனுக்கோ ஒன்றும் தெரியாது.
40. பின்பு, யோனத்தான் தம் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, “இதை நகருக்கு எடுத்துச் செல்” என்று பணித்தார்.[PE]
41. [PS] பையன் அங்கிருந்து சென்றவுடன், தாவீது தென்புறம் தாம் ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வந்து முகங்குப்புற விழுந்து மூன்று முறை வணங்கினார். அதன் பின் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள். தாவீது மிகவும் அழுதார்.
42. பின்பு, யோனத்தான் தாவீதிடம், நீ சமாதானமாய்ச் செல், ஆண்டவர் பெயரால் நாமிருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருட்டு ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் வழிமரபிற்கும் என் வழிமரபிற்கும் நடுவே என்றென்றும் சாட்சியாய் இருப்பாராக!” என்றார். பின்னர், தாவீது தன் வழியே சென்றார். யோனத்தான் நகருக்குத் திரும்பினார்.[PE]