1. [PS] அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: “ஆண்டவர் நம் உரிமைச் சொத்துக்கு தலைவனாக இருக்கும் படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார் அன்றோ?
2. இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குவில் ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் உன்னிடம் "நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன; இதோ உன் தந்தை கழுதை பற்றி கவலையை விட்டு உனக்காக ஏங்கி ‘என் மகனுக்காக என் செய்வேன்?’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்" என்று சொல்வார்கள்.
3. நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று தாபோரிலுள்ள கருவாலி மரத்தை அடைவாய். அங்குக் கடவுளை வழிபட பெத்தேலுக்குச் செல்லும் மூன்று மனிதர்கள் உன்னைச் சந்திப்பார்கள். ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும் இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் ஒரு தோற்பை திராட்சை இரசத்தையும் கொண்டிருப்பார்கள்.
4. அவர்கள் உன் நலம் கேட்டு உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.
5. அதன் பிறகு, பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும் போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஓர் இறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுக்கு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவசமடைந்து பேசுவர்.
6. பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
7. இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
8. பிறகு நீ எனக்கு முன்பாக கில்காலுக்கு இறங்கிச் செல். எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுப்பதற்காக நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வந்து நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும் வரை ஏழு நாள்கள் காத்திரு.”[PE]
9. [PS] சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய பொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.
10. அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வலிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.
11. அவரை ஏற்கெனவே அறிந்தவர்கள் அவர் இறைவாக்கினரோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது? சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?” என்று கேட்டுக் கொண்டனர்.
12. அதற்கு அங்கிருந்தவருள் ஒருவன், “இவர்கள் தந்தை யார்?” என்று கேட்டான். ஆகவே, “சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?” என்ற பழமொழி உருவாயிற்று. [* 1 சாமு 19:23-24.. ]
13. அவர் பரவசமடைந்து பேசி முடித்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.[PE]
14. [PS] அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக் காரனையும் நோக்கி, “நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்?” என்று வினவ, அவர், “நாங்கள் கழுதைகளைத் தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே, சாமுவேலிடம் சென்றோம்” என்று சொன்னார்.
15. சவுலின் சிற்றப்பன், “சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல்” என்றார்.
16. சவுல் தம் சிற்றப்பனிடம், “கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார்” என்றார். ஆனால், அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.[PE]
17. {சவுல் அரசராய் ஏற்படுத்தப்படல்} [PS] சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.
18. பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலை எகிப்தினின்று கொண்டு வந்தேன். எகிப்தியர் கையினின்றும் உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்றும் நான் உங்களை விடுவித்தேன்.
19. நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை இன்று புறக்கணித்து விட்டு, ‘எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும்’ என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே, உங்கள் குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்’.”[PE]
20. [PS] பிறகு, சாமுவேல் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது.
21. பென்யமின் குலத்தை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின்மீதும் பிறகு கீசின் மகன் சவுல் மீதும் சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.
22. “ஆள் இங்கே வந்துவிட்டானா?” என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் “ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளான்” என்று கூறினார்.[PE]
23. [PS] அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது, அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அனைவரும் அவர் தோளுயரமே இருந்தார்கள்.
24. சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி,“ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல் வேறொருவரும் உண்டோ?” என்றார். அப்போது மக்கள் அனைவரும் 'அரசர் நீடூழி வாழ்க!' என்று ஆர்ப்பரித்தனர்.[PE]
25. [PS] சாமுவேல் அரசின் சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அதை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு, மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.
26. சவுலும் கிபியாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.
27. ஆனால், தீயோர் சிலர், “இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்?” என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தார்.[PE]