1. {திருத்தூதரின் பணி} [PS] நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும்.
2. பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ!
3. என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன்.
4. எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே.
5. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.[PE]
6. [PS] சகோதர சகோதரிகளே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், “எழுதியுள்ளதற்கு மேல் போகாதே” என்பதின் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள்.
7. நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவை தானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக்கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்?[PE]
8. [PS] தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.
9. கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள்போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன்.
10. நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள்.
11. இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். [* 2 கொரி 11:27. ]
12. எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும் போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக் கொள்கிறோம். [* திப 18:3. ]
13. அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போலானோம். இதுவரை அனைத்திலும் கழிவுப்பொருட்கள் எனக் கருதப்பட்டு வருகிறோம்.[PE]
14. [PS] உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன்.
15. கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால், தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன். [* கலா 4:19; 1 தெச 2:11; பில 10. ]
16. ஆகையால், நீங்கள் என்னைப்போலாகுங்கள் என அறிவுரை கூறுகிறேன். [* 1 கொரி 11:1; பிலி 3:17. ]
17. இதற்காகவே, திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவர் என் அன்பார்ந்தபிள்ளை. ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர். நான் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலையில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார். அவற்றையே நான் எங்கும் எல்லாத் திருச்சபைகளிலும் கற்பித்து வருகிறேன்.
18. நான் உங்களிடம் வரப்போவதில்லை என உங்களுள் சிலர் எண்ணி இறுமாப்புக் கொண்டிருக்கின்றனர்.
19. ஆனால், ஆண்டவர் திருவுளம் கொண்டால் நான் உங்களிடம் விரைவிலேயே வருவேன். இறுமாப்புக் கொண்டுள்ள அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அல்ல, அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் போகிறேன்.
20. இறையாட்சி பேச்சில் அல்ல, செயல்பாட்டில்தான் இருக்கிறது.
21. நான் பிரம்போடு வரவேண்டுமா அல்லது அன்போடும் கனிவான உள்ளத்தோடும் வரவேண்டுமா? எதை விரும்புகிறீர்கள்? [* 2 கொரி 10:2.. ] [PE]