1. {7.இறைமக்களுக்காக நன்கொடை திரட்டல்} [PS] இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம். கலாத்திய திருச்சபைகளுக்கு நான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். [* உரோ 15:25,26. ]
2. நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் நான் அங்கு வந்தபின் நன்கொடை திரட்ட வேண்டியதிராது.
3. தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
4. நானும் போவது நல்லது எனத் தோன்றினால் நானும் போவேன்; அவர்கள் என்னோடு வரலாம்.[PE]
5. {8.முடிவுரை}{பயணத்திட்டம்} [PS] நான் மாசிதோனியா வழியாகச் செல்லவிருக்கிறேன். மாசிதோனியாவைக் கடந்தபின் உங்களிடம் வருவேன். [* திப 19:21. ]
6. நான் ஒருவேளை உங்களோடு தங்கலாம்; குளிர் காலத்தை அங்கே கழிக்கலாம். அப்போது நான் அடுத்ததாகப் போகுமிடத்திற்கு நீங்கள் என்னை வழி அனுப்பி வைக்கலாம்.
7. போகிற போக்கில் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை; ஆண்டவர் அனுமதிப்பாரானால் சிறிது காலம் உங்களிடம் வந்து தங்கலாம் என நம்புகிறேன்.[PE]
8. [PS] பெந்தக்கோஸ்து விழா வரை எபேசில் தங்கியிருப்பேன். [* திப 19:8-10. ]
9. அங்கு எதிரிகள் பலர் இருந்தாலும் பயனுள்ள முறையில் எபேசில் பணியாற்ற நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. [* திப 19:8-10. ] [PE]
10. [PS] திமொத்தேயு உங்களிடம் வரும்போது அவருக்கு எவ்விதக் குறையும் இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவரும் என்னைப் போலவே ஆண்டவருடைய வேலையைத்தான் செய்கிறார். [* 1 கொரி 4:17. ]
11. ஆகையால், யாரும் அவரை இழிவாக நடத்தக் கூடாது. அவர் என்னிடம் வந்து சேர நலமாய் வழி அனுப்பிவையுங்கள். ஏனெனில், நானும் இங்குள்ள சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.
12. நம் சகோதரராகிய அப்பொல்லோவைக் குறித்துக் கேட்டீர்களே! அவர் மற்றச் சகோதரர்களுடன் உங்களிடம் வருமாறு அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இப்போது உங்களிடம் வர அவருக்கு மனமேயில்லை. ஆனால், தகுந்த நேரம் வரும்போது அவர் உங்களிடம் வருவார்.[PE]
13. {இறுதி அறிவுரையும் வாழ்த்தும்} [PS] விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்.
14. அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.[PE]
15. [PS] அன்பர்களே, இன்னுமொரு வேண்டுகோள்; ஸ்தேவனா வீட்டாரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அக்காயா நாட்டில் முதன் முதல் கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டவர்கள். இறை மக்களுக்குத் தொண்டு செய்யத் தங்களையே அர்ப்பணித்தவர்கள். [* 1 கொரி 1:16. ]
16. இத்தகையோருக்கும் இவர்களுடன் இணைந்து செயல்படுவோர், பாடுபட்டு உழைப்போர் அனைவருக்கும் பணிந்திருங்கள்.[PE]
17. [PS] ஸ்தேவனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.
18. அவர்கள் என் உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் புத்துயிர் ஊட்டினார்கள். இத்தகையோருக்கு மதிப்பு அளியுங்கள்.[PE]
19. [PS] ஆசியாவிலுள்ள திருச்சபைகள் உங்களை வாழ்த்துகின்றன. அக்கிலாவும் பிரிஸ்காவும் தங்கள் வீட்டில் கூடும் திருச்சபையோடு சேர்ந்து ஆண்டவரோடு இணைந்துவாழும் உங்களுக்கு வாழ்த்துகள் பல கூறுகிறார்கள். [* திப 18:2. ]
20. சகோதரர் சகோதரிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.[PE]
21. [PS] இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது.[PE]
22. [PS] ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா! [* ‘மாரனாத்தா’ என்பதற்கு ‘ஆண்டவரே வருக’ என்பது பொருள்.. ] [PE]
23. [PS] ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
24. கிறிஸ்து இயேசுவோடு இணைந்துவாழும் உங்களனைவருக்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.[PE]