1. {தாவீதின் போர் வெற்றிகள்[BR](2 சாமு 8:1-18)} [PS] அதன் பின்னர், தாவீது பெலிஸ்தியரைத் தோற்கடித்து அவர்களைப் பணியச் செய்தார்; காத்து நகரையும் அதன் சிற்றூர்களையும் பெலிஸ்தியரிடமிருந்து கைப்பற்றினார்.
2. அவர் மோவாபைத் தோற்கடித்தார். மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி வரி செலுத்தினர்.[PE]
3. [PS] சோபாவின் மன்னனான அதரேசர் தன் ஆட்சியைப் பலப்படுத்தும் நோக்குடன் யூப்பிரத்தீசு நதியோரம் செல்கையில் தாவீது அவனையும் காமாத்தின் அருகே புறமுதுகு காட்டச் செய்தார்.
4. அவனிடமிருந்து ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் குதிரை வீரரையும், இருபதினாயிரம் காலாள் படையினரையும் அவர் கைப்பற்றினார். அவற்றுள் நூறு தேர்களுக்கான குதிரைகளை வைத்துக்கொண்டு ஏனைய தேர்க்குதிரைகளின் கால் நரம்பையும் வெட்டிப் போட்டார்.[PE]
5. [PS] சோபாவின் அரசனான அதரேசருக்கு உதவி செய்ய தமஸ்கு நகர் சிரியர் வந்தனர். தாவீது சிரியரில் இருபத்திரண்டாயிரம் பேரைக் கொன்று குவித்தார்.
6. மேலும், தாவீது தமஸ்கு நகரின் நடுவில் பாளையங்களை அமைத்தார். சிரியர் தாவீதுக்கு அடிமைகளாகி அவருக்கு வரி செலுத்தினர். தாவீது சென்றவிடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.
7. மேலும், தாவீது அதரேசரின் அலுவலர் வைத்திருந்த பொற்கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்.
8. அதுரேசரின் நகர்களாகிய திப்காத்திலும், கூனிலுமிருந்தும் தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்து வந்தார். அதைக் கொண்டு சாலமோன் வெண்கலக் கடலையும் தூண்களையும் தேவையான வெண்கலங்களையும் செய்தார்.[PE]
9. [PS] தாவீது சோபாவின் அரசனான அதரேசரின் படைகள் முழுவதையும் புறமுதுகு காட்டச் செய்தது பற்றிக் காமாத்தின் மன்னனான தோகு கேள்விப்பட்டான். [* 1 அர 7:40-47; 2 குறி 4:11-18 ]
10. அவன் தாவீது அரசருக்கு வாழ்த்துக் கூறவும், அதரேசரோடு போரிட்டு அவன்மீது வெற்றி கொண்டதற்காக தாவீதுக்குப் பாராட்டுக் கூறவும், தன் மகன் அதோராமை அனுப்பினான். ஏனெனில், அதரேசர் அதுவரை தோகுவுடன் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தான். மேலும், தோகு பொன், வெள்ளி, வெண்கலத்தாலான அனைத்துக் கலங்களையும் தன் மகன் மூலம் அனுப்பி வைத்தான்.
11. தாவீது அரசர் இவற்றையும், தாம் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய வெள்ளி, பொன் யாவற்றையும் ஆண்டவருக்கென்று அர்ப்பணம் செய்தார்.[PE]
12. [PS] செருயாவின் மகன் அபிசாய் உப்புப்பள்ளத்தாக்கில் பதினெட்டாயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தினார்.
13. அவர் ஏதோமில் பாளையங்களை அமைத்தார். ஏதோமியர் யாவரும் தாவீதுக்கு அடிமைகளாயினர். தாவீது சென்ற இடமெல்லாம் ஆண்டவர் அவருக்கு வெற்றி அளித்தார்.[PE]
14. [PS] தாவீது இஸ்ரயேலர் எல்லாருக்கும் அரசராய் இருந்தார். அவர் தம் மக்கள் அனைவருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கச் செய்தார்.
15. செருயாவின் மகன் யோவாபு படைத்தலைவராய் இருந்தார். அகிலூதின் மகன் யோசபாத்து பதிவாளராய் இருந்தார்.
16. அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அபிமெலக்கும் குருக்களாய் இருந்தனர். சவ்சா எழுத்தராய் இருந்தார்.
17. யோயாதாவின் மகன் பெனாயா கெரேத்தியர் பெலேத்தியருக்குத் தலைவராய் இருந்தார். தாவீதின் புதல்வர் அவர்தம் அரசில் உயர் பதவிகள் வகித்தனர்.[PE]