1 யோசுவா வயது முதிர்ந்த கிழவரான போது, ஆண்டவர் அவரை நோக்கி, "நீ வயது முதிர்ந்த கிழவனாயிருக்கின்றாய். பங்கிடப்படாமல் கிடக்கிற நாடோ மிகப் பரந்த நாடாகும்.2 அந்நாடாவது: ஒரு புறத்தில் எகிப்தில் ஓடும் சேறான நதி துவக்கி வடக்கிலிருக்கும் அக்கரோனின் எல்லை வரையும்;3 மறுபுறத்தில் காசையர், அசோத்தியர், அஸ்கலோனித்தர், கேத்தையர், அக்கரோனித்தர் எனப்பட்ட பிலிஸ்தியரின் ஐந்து அரசர்களின் நாடுகளாகிய கானான் நாட்டில் அடங்கிய கலிலேயாவும், பிலிஸ்தீமும், கெசுரீம் முழுவதும்;4 தெற்கே ஏவையர் நாடும், கானான் நாடனைத்தும், சீதோனியருக்கடுத்த மாயாரா நாடும், அப்பேக்காவும், அமோறையரின் எல்லை வரையும் பரவியுள்ள நாடனைத்தும்;5 அதற்கடுத்த எல்லை நாடும், ஏர்மோன் என்ற மலைக்குத் தாழ்வாயுள்ள பவால்காத் துவக்கி ஏமாத் வரையும் கீழ்த்திசையிலிருக்கும் லீபானின் நாடும்;6 லீபான் முதல் மசெரேப்பொத் ஏரி வரை மலை வாழ்வோர் நாடும், சீதோனியருடைய நாடனைத்துமேயாம். இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக அவ்விடங்களில் வாழ்வோர் அனைவரையும் நாமே அழித்தொழிப்போம். எனவே நாம் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி அவர்களுடைய நாடெல்லாம் இஸ்ராயேலருக்குச் சொந்தமாகும்.7 அப்படியிருக்க, அந்நாட்டைப் பிரித்து ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்குச் சொந்தமாய்ப் பங்கிட்டுக் கொடு.8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தோடு ரூபன் கோத்திரமும் காத் கோத்திரமும் தங்களுக்கு உரிய நாட்டை அடைந்து விட்டனர். அதை ஆண்டவரின் அடியானான மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கில் அவர்களுக்குக் கொடுத்தார்.9 அந்நாடு ஆர்னோன் என்ற ஆற்றங்கரையிலிருக்கும் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்திருக்கும் ஆரோயேரும், தீபோன் வரையுள்ள மேதபா என்றும் அழைக்கப்படும் எல்லா வயல் வெளிகளும்,10 எசெபோனிலிருந்து அம்மோன் புதல்வருடைய எல்லை வரை ஆண்டுவந்த செகோன் என்ற அமோறைய அரசனின் எல்லா நகரங்களும், கலாத் நாடும்,11 ஜெசுரி மாக்காத்தி நாடுகளும், எர்மோன் மலை நாடு முழுவதும், சாலோக்கா வரையுள்ள பாசான் நாடு முழுவதும்,12 பாசான் நாட்டிலிருக்கும் ஓக் என்ற அரசனின் நாடுமே. ஓக் என்பவன் மட்டுமே இராபாயிம் இனத்தில் எஞ்சி இருந்தவன்; இவன் அஸ்தரோத்திலும் எதிராயிலும் ஆட்சி புரிந்தவன். மோயீசன் அந்த இராபாயித்தரைக் கொன்று அழித்திருந்தார்.13 அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் ஜெசூரியர்களையும் மாக்காத்தியரையும் துரத்தி விடவில்லை. எனவே இவர்கள் இன்று வரை இஸ்ராயேலின் நடுவே குடியிருக்கின்றனர்.14 லேவியின் கோத்திரத்துக்கோ உடைமையாக மோயீசன் ஒன்றுமே கொடுக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் அவனுக்குச் சொல்லியிருந்தபடியே இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளும் பலிப்பொருட்களுமே லேவியருக்குச் சொந்தமாகும்.15 எனவே மோயீசன் ரூபனின் கோத்திரத்தாருக்கு அவர்களுடைய வம்ச முறைப்படி நாட்டைச் சொந்தமாகக் கொடுத்தார். அவர்களுடைய எல்லைகளாவன:16 ஆர்னோன் ஆற்றங்கரையிலும், ஆர்னோன் பள்ளத்தாக்குக்கு நடுவிலும் இருந்த ஆரோவர் நகர் துவக்கி மேதபாவுக்குப் போகும் வழியாகிய அந்தச் சமவெளி முழுவதும்;17 ஏசெபோனும், அதன் வெளி நிலங்களிலுள்ள எல்லா ஊர்களும்; தீபோனும் பாமொத்பாவாலும் பெத்பாவால்மோன் நகரும்;18 யாஜா, கெதிமோத், மேப்பாத்;19 காரீயாத்தாயின், சபமா,20 பள்ளத்தாக்கின் மலை மேல் கட்டப்பட்ட சரத்சார், பெத்பொகார், அசெதொர், பஸ்கா,21 பெத்ஜெசிமோத், வயல் வெளியிலுள்ள எல்லா நகரங்களும், ஏசெபோனில் ஆண்டு வந்த செகோன் என்ற அமோறைய அரசனின் நாடுகளுமாம். அந்தச் செகோனையும் மாதியானிலிருந்த சேகோனின் மக்கட் தலைவர்களையும், நாட்டிலே குடியிருந்த ஏவே, ரேக்கே, சூர், ஊர், ரேபே என்ற செகோனின் படைத்தலைவர்களையும் மோயீசன் தோற்கடித்திருந்தார்.22 அப்போது இஸ்ராயேல் மக்கள் மற்றவர்களோடு பேயோரின் மகனாகிய பாலாம் என்ற குறிச்சொல்லுகிறவனையும் வாளுக்கு இரையாக்கியிருந்தனர்.23 எனவே ரூபனின் கோத்திரத்தாருக்கு யோர்தான் நதியே எல்லையாயிற்று; அந்நாடும், அதிலடங்கிய நகர்களும் ஊர்களும் வம்ச வரிசைப் படி ரூபனியருக்குச் சொந்தமாயின.24 காதின் கோத்திரத்தாருக்கு மோயீசன் அவர்களின் வம்ச வரிசைப்படியே சொந்தமாகக் கொடுத்திருந்த நாட்டின் பங்கீடு வருமாறு:25 யாஜோரின் எல்லையும், காலாத் நாட்டின் எல்லா நகர்களும் அம்மோன் சந்ததியார்களுடைய பாதி நாடும், இரபாவுக்கு எதிரேயுள்ள ஆரோயேர் வரையும், ஏசெபோன் துவக்கி இராமேத், மஸ்பே, பேத்தனிம் மட்டும்:26 மானாயிம் துவக்கித் தாபீரின் எல்லை வரைக்குமுள்ள நாடெல்லாம் அதில் அடங்கியிருந்தது.27 மேலும் அது ஏசெபோனில் அரசனாயிருந்த செகோனுடைய அரசன் மற்றப் பங்குகளாகிய பெத்தரான், பெத்னெம்ரா, சோகொத், சாபோன் என்ற பள்ளத்தாக்குகளிலேயும் விரியும்; கடைசியில் கீழ்த்திசை முகமாய் யோர்தானுக்கு அப்புறத்தில் பரவியிருந்த கெனேரேத் கடலோரம் வரை யோர்தான் அதற்கு எல்லையாய் இருக்கின்றது.28 இந்நகர்களும், இவற்றைச் சார்ந்த ஊர்களும் காத் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படி சொந்தமாயின.29 மனாசே புதல்வரின் பாதிக் கோத்திரத்துக்கும், அவர்களுடைய சந்ததியாருக்கும், அவரவர் வம்சங்களின்படி மோயீசனால் கொடுக்கப்பட்ட உடைமையாவது:30 மானாயீம் துவக்கிப் பாசான் முழுவதும்; பாசானின் அரசனான ஓக் என்பவனுடைய எல்லா நாடுகளும்; பாசானிலுள்ள ஜயீரின் எல்லா ஊர்களுமான அறுபது நகர்களேயாம்.31 மேலும், பாதிக் காலாதையும், பாசானிலே அஸ்தரோத், எதிராய் என்ற ஓக் அரசனுடைய நகர்களையும், மனாசேயின் மகனாகிய மாக்கீரின் புதல்வர் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்ச முறைப்படி கொடுத்தார்.32 கீழ்த்திசை முகமாய் எரிக்கோவுக்கு எதிராக, யோர்தானுக்கு அக்கரையிலிருக்கும் மோவாபின் வயல்வெளிகளில் மோயீசன் ஒரு பாகம் பிரித்து அவர்களுக்குச் சொந்தமாய்க் கொடுத்திருந்தார்.33 லேவி கோத்திரத்திற்கு மோயீசன் சொந்தமாக எதையும் கொடுக்கவில்லை; ஏனெனில், இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் அவனுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே மேற்சொன்ன கோத்திரத்தின் உடைமை.