1 மூன்றாம் நாள், கலிலேயாவிலுள்ள கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. 'இயேசுவின் தாய் அங்கு இருந்தாள்.2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்.3 திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்.4 அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.5 அவருடைய தாய் பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.6 யூதரின் துப்புரவு முறைமைப்படி ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் பிடிக்கும்.7 இயேசு அவர்களை நோக்கி, "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். அவர்கள் அவற்றை வாய்மட்டும் நிரப்பினார்கள்.8 பின்பு அவர், "இப்பொழுது முகந்து பந்திமேற்பார்வையாளனிடம் எடுத்துச்செல்லுங்கள்" என்றார்.9 அவர்கள் அப்படியே செய்தனர். பந்தி மேற்பார்வையாளன் திராட்சை இரசமாய் மாறின தண்ணீரைச் சுவைத்தான். இத் திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று அவனுக்குத் தெரியாது. - ஆனால் தண்ணீரைக் கொண்டுவந்த பணியாட்களுக்குத் தெரியும். -10 அவன் மணமகனை அழைத்து, "எல்லாரும் முதலில் நல்ல இரசத்தைப் பரிமாறுவர். நன்றாய்க் குடித்தபின் கீழ்த்தரமானதைத் தருவர். நீரோ நல்ல இரசத்தை இதுவரை வைத்திருந்தீரே" என்றான்.11 இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் முதலாவது. இது கலிலேயாவிலுள்ள கானாவூரில் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் நமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர்.12 இதற்குப்பின், அவரும் அவருடைய தாயும் சகோதரரும் அவருடைய சீடரும் கப்பர் நகூமுக்குச் சென்றனர். அங்குச் சில நாட்களே தங்கினர்.13 யூதர்களுடைய பாஸ்காத் திருவிழா நெருங்கியிருந்ததால் இயேசு யெருசலேமுக்குச் சென்றார்.14 கோயிலிலே ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயமாற்றுவோரையும் கண்டார்.15 அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார். ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார். நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து, பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.16 புறா விற்பவர்களைப் பார்த்து, "இதெல்லாம் இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்" என்றார்.17 "உமது இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று எழுதியுள்ளதை அவருடைய சீடர் நினைவுகூர்ந்தனர்.18 அப்போது யூதர், "இப்படியெல்லாம் செய்கிறீரே, இதற்கு என்ன அறிகுறி காட்டுகிறீர் ?" என்று அவரைக் கேட்டனர்.19 அதற்கு இயேசு, "இவ்வாலயத்தை இடித்துவிடுங்கள்; மூன்று நாளில் இதை எழுப்புவேன்" என்றார்.20 யூதர்களோ, "இவ்வாலயத்தைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகளாயினவே, நீ மூன்றே நாளில் எழுப்பிவிடுவாயோ ?" என்று கேட்டனர்.21 அவர் குறிப்பிட்டதோ அவரது உடலாகிய ஆலயத்தையே.22 அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தபொழுது, அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும், இயேசு கூறிய வார்த்தைகளையும் விசுவசித்தனர்.23 பாஸ்காத் திருவிழாவின்போது அவர் யெருசலேமிலிருக்கையில், அவர் செய்த அருங்குறிகளைக் கண்டு, பலர் அவருடைய பெயரில் விசுவாசங்கொண்டனர்.24 இயேசுவோ அவர்கள்பால் விசுவாசம் காட்டவில்லை. ஏனெனில், அவர் அனைவரையும் நன்கு அறிந்திருந்தார்.25 மனிதனைப்பற்றி எவரும் அவருக்கு எடுத்துக்கூறத் தேவையில்லை. மனித உள்ளத்திலிருப்பதை அறிந்திருந்தார்.