1 நான் சாமக் காவலனாய் நிற்பேன், காவற் கோட்டை மேல் இருந்து காவல் புரிவேன்; எனக்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என்றும், என் முறையீட்டுக்கு என்ன விடை தருவார் என்றும் பார்ப்பதற்காகக் காத்திருப்பேன்.2 ஆண்டவர் எனக்களித்த மறுமொழி இதுவே: "காட்சியை எழுதிவை; விரைவாய்ப் படிக்கும்படி பலகைகளில் தெளிவாய் எழுது.3 இன்னும் குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி காத்திருக்கிறது, ஆயினும் முடிவை நோக்கி விரைந்து போகிறது, பொய்யாகாது; காலந்தாழ்த்துவதாகத் தெரிந்தால், எதிர்பார்த்திரு; அது நிறைவேறியே தீரும், தவணை மீறாது.4 இதோ, விசுவசியாதவன் நேர்மையான உள்ளத்தினன் அல்லன், ஆனால் நீதிமான் தன் விசுவாசத்தினால் வாழ்வான்.5 செல்வம் நம்ப முடியாதது, இறுமாப்புக் கொண்டவன் நிலைத்திருக்கமாட்டான்; அவனது பேராசை பாதாளத்தைப்போலப் பரந்து விரிந்தது, சாவைப்போல் அவனும் போதுமென்று அமைவதில்லை. எல்லா நாட்டினரையும் தன் பக்கம் சேர்த்துக் கொள்ளுகிறான், மக்களினங்களையெல்லாம் தன்னிடம் கூட்டிக் கொள்ளுகிறான்.6 இவர்கள் அனைவரும் அவன் மேல் வசைப்பாடல்களும், வஞ்சப் புகழ்ச்சியாய் ஏளன மொழிகளும் புனைவார்களன்றோ? அவர்கள் இவ்வாறு சொல்வார்கள்: தன்னுடையன அல்லாதவற்றைத் தனக்கெனக் குவித்து அடைமானங்களைத் தன் மேல் சுமத்திக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்குச் செய்வான்?7 உனக்குக் கடன் தந்தவர்கள் திடீரென எழும்பமாட்டார்களோ? உன்னை அலைக்கழிப்பவர்கள் விழித்தெழமாட்டார்களோ? அப்பொழுது அவர்களுக்கு நீ கொள்ளைப் பொருளாவாய்!8 நீ பலநாட்டு மக்களைச் சூறையாடினபடியால், மக்களினங்களுள் எஞ்சினோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர்; ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தி, நாட்டுக்கும் நகரத்திற்கும், அதில் வாழ்வோர் அனைவருக்கும் கொடுமைகள் செய்தாய்.9 தீமையின் பிடிக்கு எட்டாதிருக்க வேண்டித் தன் கூட்டை மிக உயரத்தில் வைப்பதற்காகத் தன் வீட்டுக்கென அநியாய வருமானம் தேடுபவனுக்கு ஐயோ கேடு!10 உன் வீட்டுக்கு மானக்கேட்டையே வருவித்தாய், மக்களினங்கள் பலவற்றை அழித்தமையால் உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.11 சுவரிலிருக்கும் கற்களும் உன்னைக் குற்றம் சாட்டும், கட்டடத்தின் விட்டம் அதனை எதிரொலிக்கும்.12 இரத்தப் பழியினால் பட்டணத்தைக் கட்டி, அக்கிரமத்தால் நகரத்தை நிலைநாட்டுபவனுக்கு ஐயோ கேடு!13 இதோ, மக்களின் கடின வேலை நெருப்புக்கு இரையாவதும், மக்களினங்களின் உழைப்பு வீணாய்ப் போவதும் சேனைகளின் ஆண்டவரது திருவுளமன்றோ?14 தண்ணீர் கடலை நிரப்பியிருப்பது போல் ஆண்டவருடைய மகிமையைப் பற்றிய அறிவு மண்ணுலகை நிரப்பும்.15 தன் அயலானுக்கு நஞ்சைக் குடிக்கக் கொடுத்து, அவனது அவமானத்தைப் பார்ப்பதற்காகக் குடிவெறியேறும் வரை குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு!16 மகிமையால் நிரப்பப்படாமல் நீ நிந்தையால் தான் நிரப்பப்படுவாய். நீயும் குடி, குடி வெறியில் தள்ளாடு; ஆண்டவரின் வலக்கையிலுள்ள கிண்ணம் உன்னிடம் வரும், அப்போது மானக்கேடு உன் மகிமையை மூடி மறைக்கும்.17 நீ லீபானுக்குச் செய்த கொடுமை உன்னையே தாக்கும்; திகிலுற்ற மிருகங்களை நீ செய்த படுகொலையும் அவ்வாறே செய்யும்; ஏனெனில் நீ மனித இரத்தத்தைச் சிந்தி, நாட்டுக்கும் நகருக்கும், அதில் வாழ்வோர் அனைவருக்கும் கொடுமைகள் செய்தாய்.18 சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த பொய்ப் படிமத்தாலும் பயனென்ன? ஆயினும் தான் செய்த ஊமைச் சிலைகளாகிய கைவேலைகளிலே சிற்பி நம்பிக்கை வைக்கிறான்.19 மரக்கட்டையிடம் 'விழித்துப் பாரும்' என்றும், ஊமைக் கல்லிடம் 'எழுந்திரும்' என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ கேடு! அவை ஏதேனும் வாக்குரைக்க முடியுமோ? இதோ, பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருப்பினும் உள்ளுக்குள் கொஞ்சமும் உயிரில்லையே!20 ஆனால் ஆண்டவர் தம் பரிசுத்த கோயிலில் இருக்கிறார், அவர் திருமுன் உலகெலாம் மவுனம் காக்கட்டும்.