1 சின்னப்பர் தலைமைச் சங்கத்தாரை நோக்கி, "சகோதரரே, நான் இந்நாள்வரை கடவுள் முன்னிலையில், யாவற்றிலும் என் மனச்சான்றின்படி நேர்மையாக வாழ்ந்து வந்தேன்" என்றார்.2 அப்பொழுது, தலைமைக்குரு அனனியா அவரை வாயில் அறையும்படி அருகில் நின்றவர்களைப் பார்த்துச் சொன்னார்.3 சின்னப்பர் அவரிடம், "வெள்ளையடித்த சுவரே, கடவுளே உன்னை அடிப்பார்; சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பிட அமர்ந்திருக்கும் நீ, சட்டத்திற்கு முரணாக, என்னை அடிக்கச் சொல்லுகின்றாயே" என்றார்.4 அருகில் நின்றவர்கள், "கடவுளுடைய தலைமைக் குருவையே பழித்துரைக்கின்றாயே" என்றார்கள்.5 அதற்குச் சின்னப்பர், "சகோதரர்களே, இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாதே! ' மக்களின் தலைவரை இழித்துரைக்காதே ' என எழுதியுள்ளது அன்றோ? என்றார்.6 அச்சங்கத்தில் ஒருசாரார் சதுசேயர், மற்றொரு சாரார் பரிசேயர் என்பதை அறிந்திருந்த சின்னப்பர் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நான் ஒரு பரிசேயன், பரிசேயரின் வழித்தோற்றலே. இறந்தோர் உயிர்த்தெழுவர் என்ற என் நம்பிக்கையைக் குறித்துத் தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்" என்று உரக்கக் கத்தினார்.7 அவர் இப்படிச் சொன்னதும், பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாயிற்று.8 சபையும் இரண்டுபட்டது. ஏனெனில், சதுசேயர் உயிர்த்தெழுதலோ வானதூதரோ ஆவியோ உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பரிசேயரோ, இவையெல்லாம் உண்டென்று ஒப்புக்கொள்வர். எனவே, பேரிரைச்சல் எழுந்தது.9 அப்பொழுது பரிசேயர் கட்சியைக் சார்ந்த மறைநூல் அறிஞர் சிலர் எழுந்து இவனிடத்தில் ஒரு தவற்றையும் காணோம்; ஓர் ஆவியோ, ஒரு வான தூதரோ இவனோடு பேசியிருந்தாலென்ன?" என்று வாதாடினர்.10 இப்படி வாக்குவாதம் முற்றவே, சின்னப்பரைக் கண்டதுண்டமாக்கிவிடுவார்களோ எனப் படைத்தலைவன் அஞ்சி, படை வீரர்களை அனுப்பி அவரைக் கூட்டத்தின் நடுவிலிருந்து கோட்டைக்குக் கொண்டுபோகக் கட்டளையிட்டான்.11 அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "தைரியமாயிரு, என்னைக் குறித்து நீ யெருசலேமில் சாட்சியம் தந்ததுபோல், உரோமையிலும் சாட்சியம் தரவேண்டும்" என்றார்.12 பொழுது புலர்ந்தபின், யூதர்கள் ஒன்றுகூடி, சின்னப்பரைக் கொன்றுபோடாமல் உண்பதில்லை, குடிப்பதில்லை என்று சூளுரைத்துச் சதி செய்தனர்.13 இச் சதியில் சேர்ந்தவர்கள் நாற்பது பேருக்கு மேலிருக்கும்.14 அவர்கள், தலைமைக் குருக்கள், மூப்பர்களிடம் சென்று, "நாங்கள் சின்னப்பரைக் கொன்றுபோடாமல் உணவுகொள்வதில்லை எனச் சபதமிட்டுச் சூளுரைத்துள்ளோம்.15 எனவே, நீங்கள் தலைமைச் சங்கத்தாரோடு சேர்ந்து அவனைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள்போல் நடித்து, அவனை உங்களிடம் கூட்டி வரும்படி படைத் தலைவனுக்குச் சொல்லுங்கள். அவன் வந்து சேருமுன், அவனைக் கொன்றுபோட நாங்கள் தயாராயிருக்கிறோம்" என்றனர்.16 இப்படி, சின்னப்பருக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிபற்றிய செய்தி, அவருடைய சகோதரியின் மகனுக்கு எட்டியது. அவன் கோட்டைக்குப் போய், உள்ளே நுழைந்து சின்னப்பரிடம் இதைத் தெரிவித்தான்.17 சின்னப்பர், நூற்றுவர் தலைவன் ஒருவனை அழைத்து, "இவ்விளைஞனைப் படைத்தலைவரிடம் கூட்டிச் செல்லும். இவன் அவரிடம் ஒரு செய்தி சொல்லவேண்டுமாம்" என்றார்.18 அவ்வாறே அவன் அவனைப் படைத்தலைவனிடம் அழைத்துச்சென்று, "சின்னப்பன் என்னும் கைதி என்னைக் கூப்பிட்டு இவ்விளைஞனை உம்மிடம் கொண்டுபோகும்படி கேட்டுக்கொண்டான். இவன் உம்மிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டியதிருக்கிறதாம்" என்றான்.19 படைத்தலைவன் இளைஞனின் கையைப் பிடித்துத் தனியே அழைத்துக் கொண்டுபோய், "நீ என்னிடம் என்ன தெரிவிக்கவேண்டும்?" என்று கேட்டான்.20 அதற்கு அவன், "யூதர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். அதன்படி, சின்னப்பரைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள் போல் நடித்து அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளைய தினம் கூட்டிக்கொண்டு வரும்படி உம்மைக் கேட்பார்கள்.21 ஆனால், நீர் அவர்களை நம்பவேண்டாம். ஏனெனில், அவர்களில் நாற்பது பேருக்குமேல் அவரைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். அவரைக் கொன்று போடாமல் உண்பதில்லை, குடிப்பதில்லை எனச் சூளுரைத்துள்ளனர். யூதர்களின் வேண்டுகோளுக்கு நீர் இணங்குவீர் என எதிர்பார்த்து இவர்கள் தயாராயிருக்கிறார்கள்" என்றான்.22 தனக்கு இதை அறிவித்ததாக யாருக்கும் சொல்ல வேண்டாமெனப் படைத்தலைவன் இளைஞனுக்குக் கட்டளையிட்டு அனுப்பிவிட்டான்.23 பின்பு அவன் நூற்றுவர் தலைவர் இருவரை அழைத்து, "இருநூறு காலாட்படைவீரரும், எழுபது குதிரை வீரரும், இருநூறு வேல் வீரரும் இரவு ஒன்பது மணிக்குச் செசரியா நகருக்குப் புறப்படத் தயார் செய்யுங்கள். குதிரைகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.24 சின்னப்பரைக் குதிரைமேல் ஏற்றி ஆளுநர் பெலிக்சிடம் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கவேண்டும்" என்றான்.25 பின்வருமாறு ஒரு கடிதமும் எழுதிக் கொடுத்தான்:26 ' மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்சுக்கு, கில்வுதியுலீசியா வாழ்த்துக் கூறிவரைவது:27 நான் அனுப்பும் இந்த ஆளை யூதர்கள் பிடித்துக் கொல்ல இருந்தனர். இவன் உரோமைக் குடிமகன் என அறிந்ததும், நான் படைவீரர்களுடன் சென்று இவனை விடுவித்தேன்.28 இவன் மேல் அவர்கள் சாட்டிய குற்றம் என்னவென்று திட்டமாய் அறியவிரும்பி அவர்களுடைய தலைமைச் சங்கத்திற்கு இவனை அழைத்துச் சென்றேன்.29 சாவுக்கோ, சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. அவர்களுடைய சட்டத்துக்கடுத்த சிக்கல்கள் பற்றி ஏதோ குற்றம் சாட்டப்பட்டான்.30 மேலும், இவனுக்கெதிராகச் செய்யப்பட்ட சதியைக் குறித்து எனக்குச் செய்தி கிடைத்தது. எனவே, இவனை உம்மிடம் உடனே அனுப்பியுள்ளேன். இவனைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இவன்மேல் தங்களுக்குள்ள முறைப்பாடுகளை எல்லாம் உம்முன் எடுத்துரைக்கலாம் என அவர்களுக்கு அறிவித்திருக்கிறேன்."31 ஆகவே, தங்களுக்கிட்ட கட்டளையின்படி படைவீரர் இரவிலே அந்திப்பத்திரி ஊர் வரைக்கும் சின்னப்பரை அழைத்துக்கொண்டு சென்றனர்.32 மறுநாள் குதிரை வீரரை அவரோடு அனுப்பிவிட்டு, மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.33 குதிரை வீரர்கள் செசரியா நகர் அடைந்ததும் ஆளுநனிடம் கடிதத்தைக் கொடுத்துச் சின்னப்பரை அவனிடம் ஒப்படைத்தனர்.34 அவன் அதைப்படித்த பின்பு "இவன் எந்த மாகாணத்தைச் சார்ந்தவன்?" எனக்கேட்டான். சிலிசியாவைச் சார்ந்தவன் என அறிந்து,35 ' உன்மேல் குற்றம் சாட்டுகிறவர்கள் வந்தபின் உன்னை விசாரிக்கிறேன்" என்று சொல்லி, ஏரோதனின் அரண்மனையில் அவரைக் காவலில் வைக்கும்படி கட்டளையிட்டான்.