1 தாவீதின் இறுதி மொழிகள் வருமாறு: இசாயியின் மகனான தாவீது என்பவரும், யாக்கோபுடைய கடவுளால் அபிஷுகம் பெற நியமிக்கப்பட்டவரும், இஸ்ராயேலின் புகழ் பெற்ற இசை வல்லுநருமாகிய அவர் சொன்னதாவது:2 ஆண்டவருடைய ஆவியானவர் என் மூலம் பேசினார். அவருடைய வார்த்தை என் நாவில் இருந்தது.3 இஸ்ராயேலின் கடவுளும், இஸ்ராயேலில் வல்லவருமானவர் என்னைப் பார்த்து, 'மக்களை ஆண்டு வருகிறவனும், நீதியோடும் தெய்வ பயத்தோடும் அரசாள்கிறவனும் எப்படி இருப்பான் என்றால்,4 காலையில் சூரியன் உதிக்கவே, காலை வெளிச்சம் மேகமின்றித் தோன்றுவது போலவும், மழைக்குப்பின் பூமியின் கண் புல் முளைப்பது போலவும் இருப்பான்' என்றருளினார்.5 எல்லாவற்றிலும் உறுதியானதும் அசைக்கக் கூடாததுமான ஒரு நித்திய உடன் படிக்கையைக் கடவுள் என்னோடு செய்வதற்கு, என் வீடு இறைவன் திருமுன் அவ்வளவு மேன்மை வாய்ந்தது அன்று. அப்படியிருந்தும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் அவர் என்னைக் காப்பாற்றினார். நான் விரும்பியதெல்லாம் அவர் எனக்குத் தந்தருளினார். அவற்றுள் எனக்குக் கிடைக்காத நன்மை ஒன்றும் இல்லை.6 ஆனால் என் கட்டளைகளை மீறுகிறவர்கள் அனைவரும், கையால் எடுக்கப்படாத முட்களைப் போல் பிடுங்கப்படுவார்கள்.7 அவற்றை ஒருவன் தொடவிரும்பினால் அவன் இரும்பையும் ஈட்டியின் பிடியையும் கொண்டு அவற்றைத் தீயிலிட்டு முழுதும் சுட்டெரிப்பான்."8 தாவீதுக்கு இருந்த வல்லமையுள்ள மனிதர்களின் பெயர்களாவன: மூவரில் மிகுந்த ஞானமுடைய தலைவனாய்த் தலைமை இருக்கையில் வீற்றிருந்தவனே முதல்வனாம். அவன் மிகவும் நுண்ணிய மரப்பூச்சியைப் போல் எண்ணுறு பேரை ஒரே சமயத்தில் வெட்டி வீழ்த்தினான்.9 அவனுக்கு அடுத்தவன் அகோயி ஊரானும் முந்தினவனுடைய சிற்றப்பன் மகனுமான எலெயசார் என்பவன். தாவீதோடு போர்க்களத்தில் பிலிஸ்தியரை எதிர்த்து நின்ற மூன்று வல்லவர்களுள் இவனும் ஒருவன்.10 இஸ்ராயேல் மனிதர் ஓடிவிட்ட பின் இவன் மட்டும் நின்று தன் கை சோர்ந்து வாளோடு ஒட்டிக்கொள்ளும் வரை பிலிஸ்தியரை எதிர்த்து நின்றான். அன்று ஆண்டவர் பெரும் வெற்றி அளித்தார். முன்பு ஓட்டம் பிடித்த மக்களோ வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடத் திரும்பி வந்தனர்.11 இவனுக்கு அடுத்தவன் ஆராரி ஊரானான ஆகேயின் மகன் செம்மா என்பவன். அவரைப் பயிர் நிறைந்த ஒரு வயலில் பிலிஸ்தியர் பெரும் திரளாய்க் கூடியிருந்தனர். அவர்களைக் கண்டு மக்கள் ஓட்டம் பிடிக்கையில்,12 இவன் ஒருவனே வயலின் நடுவே நின்று அதைக் காப்பாற்றிப் பிலிஸ்தியரைத் தோற்கடித்தான். ஆண்டவர் அன்று பெரும் வெற்றி அளித்தார்.13 அன்றியும் முப்பது பேரில் முதல்வரான இந்த மூவரும் முன்பு அறுவடைக் காலத்தில் தாவீதை பார்க்க ஓதுலாம் குகைக்கு வந்திருந்தனர். பிலிஸ்தியரின் பாளையமோ அரக்கரின் பள்ளத்தாக்கில் இருந்தது.14 தாவீது ஒரு கோட்டையில் தங்கியிருந்தார். பிலிஸ்தியருடைய பாளையமோ அப்போது பெத்லகேமில் இருந்தது.15 அப்போது தாவீது, "ஓ! பெத்லகேமின் வாயில் அருகே இருக்கிற கிணற்றிலிருந்து என் தாகம் தீர்க்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருபவன் யார்?" என்று ஆவலுடன் கேட்டார்.16 அதைக் கேட்ட அந்த மூன்று வல்லவர்களும் பிலிஸ்தியருடைய பாளையத்தில் புகுந்து பெத்லகேமின் வாயில் அருகே இருந்த கிணற்றிலிருந்து நீர் மொண்டு தாவீதிடம் கொண்டு வந்தனர். தாவீதோ அதைக் குடிக்க மனமின்றி ஆண்டவருக்கென்று அதைக் கீழே ஊற்றி விட்டார்.17 நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்மேல் இரக்கம் வைப்பாராக! தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாய் எண்ணாது சென்ற இம் மனிதரின் இரத்தத்தை நான் குடிப்பதா?" என்று கூறி அதன் பொருட்டு அவர் அதைப் பருகவில்லை. இந்த மூன்று வல்லவர்களும் இவற்றைச் செய்தனர்.18 சார்வியாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயியும் மூவரில் முதல்வனாய் இருந்தான், அவனே முந்நூறு பேரைத் தன் ஈட்டியால் தாக்கி அவர்களைக் கொன்றான். இவன் மூவருள் பெயர் பெற்றவனாகவும், பெரும் புகழ் படைத்தவனாகவும்,19 அவர்களுக்குத் தலைவனாகவும் இருந்தான். ஆயினும் முதல் மூவருக்கு ஒப்பானவன் அல்லன்.20 ஆற்றல் வாய்ந்தவனும் அரும் பெரும் செயல்கள் செய்தவனும், காப்சீலைப் சேர்ந்தவனுமான யோயியாதாவின் மகன் பனாயாசு இரு மோவாபிய சிங்கங்களைக் கொன்றான். அவன் பனிக்காலத்தில் ஒரு கேணியில் இறங்கி மற்றெரு சிங்கத்தையும் கொன்றான்.21 மேலும் பார்வைக்கு அழகான ஓர் எகிப்திய வீரனைப் கொன்றான். இவன் ஓர் ஈட்டியை வைத்திருந்தாலும் பனாயாசு ஒரு தடியை மட்டும் கொண்டு அவன் மேல் பாய்ந்து வலுக்கட்டாயமாய் அவனுடைய ஈட்டியைப் பறித்து அதைக் கொண்டே அவனைக் கொன்று போட்டான்.22 யோயியாதாவின் மகனான பனாயாசு செய்த வீரச் செயல்கள் இவையே.23 புகழ் பெற்ற முப்பது பேருக்குள் இருந்த வல்லவரான மூவருள் இவன் மதிப்புக்குரியவன். ஆயினும் அந்த மூவருக்கும் இவன் இணை ஆகான். இவனைத் தாவீது தம் அணுக்கச் செயலராக்கினார்.24 முப்பது பேரில் யோவாபின் சகோதரனாகிய அசாயேலும் ஒருவன். அவனுடைய சிற்றப்பனின் மகனும் பெத்லகேமில் பிறந்தவனுமான எலெயானான்,25 ஆரோதி ஊரானான செம்மா, ஆரோதியில் பிறந்த எலிக்கா,26 பால்தியானான எலேசு, தேக்குவா ஊரில் பிறந்த அக்கேசின் மகனாகிய ஈரா,27 அனத்தோத்தியனான அபியேசர், உசாத்தியனான மோபொன்னாய்,28 ஆகோயித்தியனான செல்மோன், நேத்தோ பாத்தியனான மகராயி,29 நேத்தோ பாத்தியனான பாவானாவின் மகன் ஏலேது, பெஞ்சமின் புதல்வரில் ஒருவனும் காபாவத்தியனும் ரீபாயி மகனுமான இத்தாயி,30 பாரத்தோனியனான பனாயியா, காவாசு நீரோடை அருகே வாழ்ந்து வந்த எத்தாயி,31 ஆர்பாத்தியனான அபியல்போன், பேரோமியனான அசுமவேத்,32 சலபோனி ஊரானும் இயாசேன் மகனும், யோனத்தான் என்று அழைக்கப் பெற்றவனுமான எலியபா, ஓரோரியனான செம்மா,33 ஆரோரியனான சாராரின் மகன் ஆயியாம்,34 மக்காத்தி மகனான ஆசுபாய்க்குப் பிறந்த எலிபலேத்து, கேலோனியனான அக்கித்தோப்பேலின் மகன் எலியாம்.35 கார்மேலிலிருந்து வந்த எஸ்ராயி, அர்பியிலிருந்து வந்த பாராயி,36 சோபவிலிருந்த நாத்தானின் மகன் இகாவால், காதியனான பொன்னி,37 அம்மோனியனான சேலேக், பேரோத்தியனும் சார்வியாவின் மகன் யோவாபின் பரிசையனுமாய் இருந்த நகராயி,38 எத்திரீத்தியனான ஈரா,39 அதே ஊரானான கரேபு, ஏத்தையனான உரியாசு- ஆக மொத்தம் முப்பத்தேழு பேர்.