ஏசாயா அதிகாரம் 65
1. என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
2. நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன்.
3. அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,
4. பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
5. நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
6. இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.
7. உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
8. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.
9. யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.
10. என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்.
11. ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்க்கிறவர்களே,
12. உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
13. ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழிக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.
14. இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள்.
15. நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார்.
16. அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின.
17. இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
18. நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
19. நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.
20. அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.
21. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.
22. அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
23. அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
24. அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
25. ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.