பள்ளத்தாக்கும் உலர்ந்த எலும்புகளும் 1 யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, யெகோவா என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, 2 என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கச்செய்தார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாகக் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாக இருந்தது. 3 அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். 4 அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 5 யெகோவாகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் உயிரை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள். 6 நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் சதையை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்களென்று சொல்லுகிறார் என்று சொல் என்றார். 7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; நான் தீர்க்கதரிசனம் சொல்லும்போது ஒரு இரைச்சல் உண்டானது; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்புடன் சேர்ந்துகொண்டது. 8 நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகள்மேல் நரம்புகளும் சதையும் உண்டானது, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் உயிர் இல்லாமலிருந்தது. 9 அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ உயிரை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, உயிரைநோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உயிரே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். 10 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் சொன்னேன்; அப்பொழுது உயிர் அவர்களுக்குள் நுழைய, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய படையாக நின்றார்கள். 11 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். 12 ஆகையால் நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்திற்கு வரவும் செய்வேன். 13 என்னுடைய மக்களே, நான் உங்களுடைய பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படச்செய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 14 என்னுடைய ஆவியை* உயிர் உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்களுடைய தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். ஒரே ராஜாவிற்கு கீழ் ஒரு தேசம் 15 பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 16 மனிதகுமாரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் மக்களுக்கும் உரியது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் உரிய யோசேப்பின் கோலென்று எழுதி, 17 அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இணையச்செய், அவைகள் உன்னுடைய கையில் ஒன்றாகும். 18 இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன்னுடைய மக்கள் உன்னிடத்தில் கேட்டால், 19 நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் உரிய யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடு சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என்னுடைய கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல். 20 சொல்லும்போது, நீ எழுதின கோல்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உன்னுடைய கையில் இருக்கவேண்டும். 21 நீ அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வீட்டாரை அவர்கள் போயிருக்கும் தேசங்களிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சொந்த தேசத்திலே வரச்செய்து, 22 அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே தேசமாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லோருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு தேசங்களாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிவதுமில்லை. 23 அவர்கள் இனித் தங்களுடைய அசுத்தமான சிலைகளினாலும் தங்களுடைய அருவருப்புகளினாலும் தங்களுடைய எல்லா மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவம்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை விளக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன். 24 என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லோருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என்னுடைய நியாயங்களில் நடந்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்து, 25 நான் என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்களுடைய தகப்பன்மார்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என்னுடைய ஊழியனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாக இருப்பார். 26 நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நிரந்தர உடன்படிக்கையாக இருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை பெருகச்செய்து, அவர்கள் நடுவிலே என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் நிலைநிறுத்துவேன். 27 என்னுடைய இருப்பிடம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன், அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள். 28 அப்படியே என்னுடைய பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்செய்கிற யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.