மனம் மாறுங்கள் 1 அப்போது இயேசுவோடு கூட மக்கள் சிலர் இருந்தனர். கலிலேயாவிலுள்ள மக்கள் சிலருக்கு நடந்ததை அவர்கள் இயேசுவுக்குக் கூறினர். அம்மக்கள் தேவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் அவர்களைப் பிலாத்து கொன்றான். அவர்கள் தேவனுக்குப் பலியிட்டுக்கொண்டிருந்த மிருகங்களின் இரத்தத்தோடு அவர்களின் இரத்தத்தையும் கலந்தான். 2 இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 3 இல்லை, அவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் உங்கள் இதயங்களையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த மக்களைப்போல நீங்களும் அழிக்கப்படுவீர்கள். 4 சீலோவாமிலே கோபுரம் விழுந்தபோது கொல்லப்பட்ட பதினெட்டுப் பேரின் நிலை என்ன? எருசலேமில் வசிக்கின்ற எல்லாரைக் காட்டிலும் அவர்கள் மிகுந்த பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா? 5 அவர்கள் அப்படியல்ல. ஆனால் நீங்கள் உங்கள் இதயங்களையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீங்களும் கூட அழிக்கப்படுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் கூறினார். பயனற்ற மரம் 6 இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “ஒரு மனிதனுக்கு ஓர் அத்தி மரம் இருந்தது. தனது தோட்டத்தில் அம்மரத்தை நட்டுவைத்திருந்தான். மரத்தில் சில பழங்கள் இருக்கிறதா என அம்மனிதன் பார்த்து வந்தான். அவன் கண்ணில் பழம் எதுவும் படவில்லை. 7 தோட்டத்தைக் கண்காணித்து வந்த வேலைக்காரன் ஒருவன் அம்மனிதனுக்கு இருந்தான். அம்மனிதன் வேலைக்காரனை நோக்கி, ‘மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் பழங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் என் கண்ணில் படவில்லை. அதை வெட்டி வீழ்த்திவிடு. எதற்கு அது நிலத்தைப் பாழ்படுத்த வேண்டும்?’ என்றான். 8 அதற்கு வேலைக்காரன், ‘எஜமானரே, இன்னும் ஓராண்டுக்குள் அந்த மரம் கனி கொடுக்கிறதா என்று பார்ப்போம். அதைச் சுற்றிலும் மண்ணைத் தோண்டி கொஞ்சம் உரத்தைப் போடுவேன். 9 அடுத்த ஆண்டு அந்த மரம் கனி கொடுக்கக் கூடும். அம்மரம் அப்படியும் கனிதராவிட்டால் நீங்கள் அதை வெட்டிப் போடலாம்’ என்று பதில் கூறினான்.” ஓய்வு நாளில் குணமாக்குதல் 10 ஓய்வு நாளில் ஓர் ஆலயத்தில் இயேசு போதித்துக் கொண்டிருந்தார். 11 பிசாசினாலாகிய அசுத்த ஆவியைத் தன்னுள்ளே கொண்டிருந்த ஒரு பெண் அந்த ஜெப ஆலயத்தில் இருந்தாள். பதினெட்டு ஆண்டுகளாக அப்பெண்ணைப் பிசாசு ஊனப்படுத்திற்று. அவள் முதுகு கூனலாக இருந்தது. அவள் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. 12 இயேசு அவளைப் பார்த்து அழைத்தார். மேலும் அவளை நோக்கி, “பெண்ணே, உன் நோய் உன்னை விட்டு நீங்கிற்று” என்றார். 13 இயேசு தன் கைகளை அவள் மேல் வைத்தார். அதே தருணத்தில் அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது. அவள் தேவனை வாழ்த்தினாள். 14 ஓய்வு நாளில் இயேசு அவளைக் குணமாக்கியதைக் குறித்து ஜெப ஆலயத்தின் தலைவர் கோபம் அடைந்தார். அத்தலைவர் மக்களை நோக்கி, “வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் குணம்பெற வாருங்கள். ஓய்வு நாளில் குணமடைய வராதீர்கள்” என்றார். 15 இயேசு பதிலாக, “நீங்கள் வேஷதாரிகளான மனிதர். ஓய்வு நாளில் கூட நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டில் கொட்டிலில் இருக்கும் எருதுவையோ அல்லது கழுதையையோ அவிழ்த்து நீர் பருகுவதற்கு அழைத்துச் செல்கிறீர்கள். 16 நான் குணமாக்கிய இப்பெண் நமது யூத சகோதரி.* யூத சகோதரி எழுத்தின் படியான பொருள் “ஆபிரகாமின் மகள்.’ ஆனால் சாத்தான் அவளைப் பதினெட்டு ஆண்டுகளாகப் பீடித்திருந்தான். ஓய்வு நாளில் அவளது நோயினின்று அவளை விடுவிப்பது நிச்சயமாகத் தவறல்ல” என்றார். 17 இயேசு இதைக் கூறியபோது அவரை விமர்சித்துக்கொண்டிருந்த அனைவரும் தங்களைக் குறித்து வெட்கமடைந்தார்கள். இயேசு செய்த அற்புதமான காரியங்களைக் குறித்து எல்லா மக்களும் மகிழ்ச்சியடைந்தார்கள். கடுகு விதையின் உவமை (மத். 13:31-33; மாற். 4:30-32) 18 பின்பு இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எதைப் போன்றது? அதை எதனோடு ஒப்பிடுவேன்? 19 தேவனுடைய இராஜ்யம் கடுகுச் செடியின் விதையைப் போன்றது. ஒருவன் இந்த விதையை அவனது தோட்டத்தில் ஊன்றுகிறான். விதை முளைத்து மரமாகிறது. பறவைகள் அதன் கிளைகளில் கூடுகளைக் கட்டுகின்றன” என்றார். 20 மீண்டும் இயேசு, “தேவனின் இராஜ்யத்தை எதனோடு ஒப்பிடுவேன்? 21 ஒரு பெரிய பாத்திரத்தில் அப்பத்திற்காக வைக்கப்படிருக்கும் மூன்று மடங்கு அளவுள்ள மாவோடு ஒரு பெண் கலக்கும் புளிப்பான பொருளுக்கு ஒப்பானதாக இருக்கிறது. அது மாவு முழுவதையும் புளிக்கச் செய்யும்” என்றார். குறுகிய வாசல் (மத். 7:13-14, 21-23) 22 ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். 23 ஒருவன் இயேசுவிடம், “ஆண்டவரே, சிலர் மட்டுமே மீட்கப்படுவார்களா?” என்று கேட்டான். 24 இயேசு, “பரலோகத்திற்கு நேராகத் திறக்கிற குறுகிய வாசலின் வழியாக நுழைய முயலுங்கள். பலர் அதனுள் நுழைய முயல்வார்கள். ஆனால் அவர்களால் நுழைய இயலாது. 25 ஒரு மனிதன் தன் வீட்டின் கதவை மூடிக்கொண்டால் நீங்கள் வெளியே நின்று தட்டமுடியும். ஆனால் அவன் திறக்கமாட்டான். நீங்கள், ‘ஐயா, எங்களுக்காகக் கதவைத் திறக்கவும்’ என்று கேட்க முடியும். அம்மனிதன், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது’ என்பான். 26 பிறகு நீங்கள் அவனிடம் ‘நாங்கள் உங்களோடு உண்டு, குடித்தோமே. நீங்கள் எங்களது நகரங்களில் போதித்தீர்களே’ என்று சொல்லுவீர்கள். 27 அப்போது அவன், ‘உங்களை நான் அறியேன். எங்கிருந்து வருகிறீர்கள். என்னிடமிருந்து போய்விடுங்கள். நீங்கள் பிழைகளைச் செய்கிற மனிதர்கள்’ என்பான். 28 “நீங்கள், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் தீர்க்கதரிசிகளையும் தேவனின் இராஜ்யத்தில் காண்பீர்கள். ஆனால் நீங்களோ வெளியே விடப்படுவீர்கள். பயத்தாலும் கோபத்தாலும் உரக்கச் சத்தமிடுவீர்கள். 29 கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருந்து மக்கள் வருவார்கள். தேவனுடைய இராஜ்யத்தில் மேசையருகே அவர்கள் அமர்வார்கள். 30 வாழ்க்கையில் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்த மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் மிகவும் உயர்ந்த இடம் கொடுக்கப்படும். இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் மக்கள் தேவனுடைய இராஜ்யத்தில் தாழ்ந்த இடத்தில் இருப்பார்கள்” என்று கூறினார். எருசலேமில் இயேசு மரிப்பார் (மத். 23:37-39) 31 அப்போது, சில பரிசேயர்கள், “இங்கிருந்து சென்று ஒளிந்துகொள்ளும். ஏரோது மன்னன் உம்மைக் கொல்ல விரும்புகிறான்” என்று இயேசுவிடம் வந்து சொன்னார்கள். 32 அவர்களை நோக்கி, இயேசு, “அந்த நரியிடம் (ஏரோது) போய் ‘இன்றும், நாளையும் நான் மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளைத் துரத்தி, குணப்படுத்துதலாகிய என் வேலையை முடிக்க வேண்டும். மறுநாள், என் வேலை முடிந்துவிடும்’ 33 அதற்குப் பிறகு, எல்லாத் தீர்க்கதரிசிகளும் எருசலேமில் மரிக்க வேண்டும் என்பதால் நான் என் வழியில் செல்லவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார். 34 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொலை செய்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பிய அந்த மனிதர்களைக் கல்லெறிந்து கொல்கிறாய். பற்பல வேளைகளில் உன் மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒரு கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளின் கீழே சேர்ப்பதுபோல நான் உன் மக்களை ஒருமித்து சேர்க்க விரும்பினேன். ஆனால் நீ என்னை அனுமதிக்கவில்லை. 35 இப்போது உன் வீடு வெறுமையானதாக விடப்பட்டிருக்கும். நீங்கள், ‘தேவனின் பெயரால் வருகிறவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படடவர்’ என்று மீண்டும் சொல்கிறவரைக்கும், என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.