யோவான் 12 : 1 (TOV)
பஸ்கா பண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
யோவான் 12 : 2 (TOV)
அங்கே அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
யோவான் 12 : 3 (TOV)
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
யோவான் 12 : 4 (TOV)
அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
யோவான் 12 : 5 (TOV)
இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
யோவான் 12 : 6 (TOV)
அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
யோவான் 12 : 7 (TOV)
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.
யோவான் 12 : 8 (TOV)
தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
யோவான் 12 : 9 (TOV)
அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள்.
யோவான் 12 : 10 (TOV)
லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால்,
யோவான் 12 : 11 (TOV)
பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
யோவான் 12 : 12 (TOV)
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
யோவான் 12 : 13 (TOV)
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
யோவான் 12 : 14 (TOV)
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக,
யோவான் 12 : 15 (TOV)
இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
யோவான் 12 : 16 (TOV)
இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.
யோவான் 12 : 17 (TOV)
அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்.
யோவான் 12 : 18 (TOV)
அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டுபோனார்கள்.
யோவான் 12 : 19 (TOV)
அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.
யோவான் 12 : 20 (TOV)
பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.
யோவான் 12 : 21 (TOV)
அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 12 : 22 (TOV)
பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
யோவான் 12 : 23 (TOV)
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது.
யோவான் 12 : 24 (TOV)
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.
யோவான் 12 : 25 (TOV)
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
யோவான் 12 : 26 (TOV)
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
யோவான் 12 : 27 (TOV)
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
யோவான் 12 : 28 (TOV)
பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.
யோவான் 12 : 29 (TOV)
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
யோவான் 12 : 30 (TOV)
இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று.
யோவான் 12 : 31 (TOV)
இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.
யோவான் 12 : 32 (TOV)
நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.
யோவான் 12 : 33 (TOV)
தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்.
யோவான் 12 : 34 (TOV)
ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்.
யோவான் 12 : 35 (TOV)
அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
யோவான் 12 : 36 (TOV)
ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார்.
யோவான் 12 : 37 (TOV)
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
யோவான் 12 : 38 (TOV)
கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
யோவான் 12 : 39 (TOV)
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:
யோவான் 12 : 40 (TOV)
அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
யோவான் 12 : 41 (TOV)
ஏசாயா அவருடைய மகிமையைக் கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
யோவான் 12 : 42 (TOV)
ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள்.
யோவான் 12 : 43 (TOV)
அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
யோவான் 12 : 44 (TOV)
அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.
யோவான் 12 : 45 (TOV)
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.
யோவான் 12 : 46 (TOV)
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
யோவான் 12 : 47 (TOV)
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
யோவான் 12 : 48 (TOV)
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
யோவான் 12 : 49 (TOV)
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
யோவான் 12 : 50 (TOV)
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

BG:

Opacity:

Color:


Size:


Font: