ஆதியாகமம் 47 : 1 (TOV)
யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி;
ஆதியாகமம் 47 : 2 (TOV)
தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
ஆதியாகமம் 47 : 3 (TOV)
பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,
ஆதியாகமம் 47 : 4 (TOV)
கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
ஆதியாகமம் 47 : 5 (TOV)
அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.
ஆதியாகமம் 47 : 6 (TOV)
எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.
ஆதியாகமம் 47 : 7 (TOV)
பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
ஆதியாகமம் 47 : 8 (TOV)
பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான்.
ஆதியாகமம் 47 : 9 (TOV)
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.
ஆதியாகமம் 47 : 10 (TOV)
பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான்.
ஆதியாகமம் 47 : 11 (TOV)
பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.
ஆதியாகமம் 47 : 12 (TOV)
யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
ஆதியாகமம் 47 : 13 (TOV)
பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்து தேசமும் கானான் தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்துபோயிற்று.
ஆதியாகமம் 47 : 14 (TOV)
யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
ஆதியாகமம் 47 : 15 (TOV)
எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள்.
ஆதியாகமம் 47 : 16 (TOV)
அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான்.
ஆதியாகமம் 47 : 17 (TOV)
அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.
ஆதியாகமம் 47 : 18 (TOV)
அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்துபோயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் எங்கள் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.
ஆதியாகமம் 47 : 19 (TOV)
நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும் என்றார்கள்.
ஆதியாகமம் 47 : 20 (TOV)
அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.
ஆதியாகமம் 47 : 21 (TOV)
மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்.
ஆதியாகமம் 47 : 22 (TOV)
ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
ஆதியாகமம் 47 : 23 (TOV)
பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
ஆதியாகமம் 47 : 24 (TOV)
விளைவில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நாலுபங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாயிருக்கட்டும் என்றான்.
ஆதியாகமம் 47 : 25 (TOV)
அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள்.
ஆதியாகமம் 47 : 26 (TOV)
ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது.
ஆதியாகமம் 47 : 27 (TOV)
இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
ஆதியாகமம் 47 : 28 (TOV)
யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.
ஆதியாகமம் 47 : 29 (TOV)
இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக.
ஆதியாகமம் 47 : 30 (TOV)
நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.
ஆதியாகமம் 47 : 31 (TOV)
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
❮
❯