ஆதியாகமம் 35 : 1 (TOV)
தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.
ஆதியாகமம் 35 : 2 (TOV)
அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
ஆதியாகமம் 35 : 3 (TOV)
நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
ஆதியாகமம் 35 : 4 (TOV)
அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.
ஆதியாகமம் 35 : 5 (TOV)
பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.
ஆதியாகமம் 35 : 6 (TOV)
யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.
ஆதியாகமம் 35 : 7 (TOV)
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 35 : 8 (TOV)
ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.
ஆதியாகமம் 35 : 9 (TOV)
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து:
ஆதியாகமம் 35 : 10 (TOV)
இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.
ஆதியாகமம் 35 : 11 (TOV)
பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.
ஆதியாகமம் 35 : 12 (TOV)
நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி,
ஆதியாகமம் 35 : 13 (TOV)
தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.
ஆதியாகமம் 35 : 14 (TOV)
அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.
ஆதியாகமம் 35 : 15 (TOV)
தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 35 : 16 (TOV)
பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.
ஆதியாகமம் 35 : 17 (TOV)
பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள்.
ஆதியாகமம் 35 : 18 (TOV)
மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.
ஆதியாகமம் 35 : 19 (TOV)
ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள்.
ஆதியாகமம் 35 : 20 (TOV)
அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
ஆதியாகமம் 35 : 21 (TOV)
இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
ஆதியாகமம் 35 : 22 (TOV)
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
ஆதியாகமம் 35 : 23 (TOV)
யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.
ஆதியாகமம் 35 : 24 (TOV)
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.
ஆதியாகமம் 35 : 25 (TOV)
தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.
ஆதியாகமம் 35 : 26 (TOV)
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
ஆதியாகமம் 35 : 27 (TOV)
பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.
ஆதியாகமம் 35 : 28 (TOV)
ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,
ஆதியாகமம் 35 : 29 (TOV)
பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: