யாத்திராகமம் 34 : 1 (TOV)
கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
யாத்திராகமம் 34 : 2 (TOV)
விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.
யாத்திராகமம் 34 : 3 (TOV)
உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார்.
யாத்திராகமம் 34 : 4 (TOV)
அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்.
யாத்திராகமம் 34 : 5 (TOV)
கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.
யாத்திராகமம் 34 : 6 (TOV)
கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
யாத்திராகமம் 34 : 7 (TOV)
ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
யாத்திராகமம் 34 : 8 (TOV)
மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:
யாத்திராகமம் 34 : 9 (TOV)
ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
யாத்திராகமம் 34 : 10 (TOV)
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
யாத்திராகமம் 34 : 11 (TOV)
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.
யாத்திராகமம் 34 : 12 (TOV)
நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.
யாத்திராகமம் 34 : 13 (TOV)
அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.
யாத்திராகமம் 34 : 14 (TOV)
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
யாத்திராகமம் 34 : 15 (TOV)
அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
யாத்திராகமம் 34 : 16 (TOV)
அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
யாத்திராகமம் 34 : 17 (TOV)
வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
யாத்திராகமம் 34 : 18 (TOV)
புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
யாத்திராகமம் 34 : 19 (TOV)
கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
யாத்திராகமம் 34 : 20 (TOV)
கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
யாத்திராகமம் 34 : 21 (TOV)
ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
யாத்திராகமம் 34 : 22 (TOV)
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
யாத்திராகமம் 34 : 23 (TOV)
வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.
யாத்திராகமம் 34 : 24 (TOV)
நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.
யாத்திராகமம் 34 : 25 (TOV)
எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
யாத்திராகமம் 34 : 26 (TOV)
உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.
யாத்திராகமம் 34 : 27 (TOV)
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
யாத்திராகமம் 34 : 28 (TOV)
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
யாத்திராகமம் 34 : 29 (TOV)
மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.
யாத்திராகமம் 34 : 30 (TOV)
ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.
யாத்திராகமம் 34 : 31 (TOV)
மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.
யாத்திராகமம் 34 : 32 (TOV)
பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய்மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
யாத்திராகமம் 34 : 33 (TOV)
மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
யாத்திராகமம் 34 : 34 (TOV)
மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது,
யாத்திராகமம் 34 : 35 (TOV)
இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.
❮
❯